டெல்லியை ஆளப்போவது யார்?


டெல்லியை ஆளப்போவது யார்?
x
தினத்தந்தி 6 Feb 2020 11:00 PM GMT (Updated: 2020-02-06T20:13:42+05:30)

கடந்த 2 நாடாளுமன்ற தேர்தல்களில் வெற்றிபெற்ற பா.ஜ.க.வும், 2 முறை சட்டமன்ற தேர்தல்களில் வெற்றிபெற்ற ஆம் ஆத்மி கட்சியும் நாளை டெல்லியில் நடைபெறும் சட்டமன்ற தேர்தலில் மோதுகின்றன.

ஆளுங்கட்சிக்கு அடுத்த தேர்தலில் பொதுவாக மவுசு குறையும் என்ற வாதம் டெல்லியில் எப்போதுமே இல்லை. டெல்லியை பொறுத்தமட்டில் ஒருகாலத்தில் காங்கிரசும், பா.ஜ.க.வும் அடுத்தடுத்து சட்டமன்ற தேர்தலில் வெற்றிபெற்று வந்தன. 

ஆனால் 2011–ம் ஆண்டு ஊழலுக்கு எதிராக போர்க்கொடி தூக்கிய அன்னாஹசாரேயின் தளபதியாக செயல்பட்ட வருமான வரித்துறையில் இருந்த அரவிந்த் கெஜ்ரிவால் தனது பதவியை ராஜினாமா செய்துவிட்டு, தீவிரமாக பொதுவாழ்க்கையில் குதித்தார். அந்த போராட்டம் முடிந்தவுடன், அவர் தனியாக ஆம் ஆத்மி என்ற பெயரில் ஒரு கட்சியை தொடங்குவதாக 2012–ம் ஆண்டு அக்டோபர் 2–ந்தேதி காந்தி ஜெயந்தி அன்று அறிவித்தார்.

பின்னர் அதே ஆண்டு நவம்பர் மாதம் 23–ந்தேதி கட்சியை தொடங்கினார். தொடர்ந்து 2013–ம் ஆண்டு  நடந்த  சட்டமன்ற  தேர்தலில் 31 இடங்களில் பா.ஜ.க.வும், ஒரு இடத்தில் அதன் கூட்டணி கட்சியும், 28 இடங்களில் ஆம் ஆத்மியும், 8 இடங்களில் காங்கிரசும் வெற்றி பெற்று இருந்தன. இருந்தாலும் பா.ஜ.க. கூட்டணி ஆட்சி அமைக்கக்கூடாது என்ற காரணத்திற்காக காங்கிரஸ், ஆம் ஆத்மி கட்சிக்கு வெளியே இருந்து ஆதரவு கொடுத்தது. ஆனால் இந்த உறவு ஒரு ஆண்டுகூட நீடிக்காமல் ஆட்சி கவிழ்ந்தது.

2015–ம் ஆண்டு மீண்டும் நடந்த தேர்தலில் மொத்தம் உள்ள 70 தொகுதிகளில், 67 இடங்களில் ஆம் ஆத்மி வெற்றி பெற்றது. தொடர்ந்து 2–வது முறையாக அரவிந்த் கெஜ்ரிவால் பதவியேற்றவுடன் தனக்குள்ள அசுர பலத்தோடு மக்களுக்கு ஏராளமான நன்மைகளை செய்தார். 

அதாவது இலவச குடிநீர் வசதி, அரசு பஸ்களில் பெண்களுக்கு இலவச பயணம், இலவச மின்சாரம், அரசு பள்ளிக்கூடங்களில் தரமான கல்வி, எல்லாவற்றுக்கும் மேலாக மாணவர்களுக்கு தரமான பயிற்சியை அளிப்பதற்காக 200 ஆசிரியர்களை சிங்கப்பூருக்கு அனுப்பி பயிற்சி எடுத்து வரசெய்தார். 

இப்படி டெல்லியில் இருக்கும் நடுத்தர மக்கள் ஆம் ஆத்மி ஆட்சியில் ஒரு வித்தியாசத்தை கண்டனர் என்றாலும், 2014–ம் ஆண்டு, 2019–ம் ஆண்டுகளில் நடந்த நாடாளுமன்ற தேர்தல்களில் பா.ஜ.க.வே முழுமையான வெற்றியை பெற்றது. ஆக டெல்லி மக்கள் மத்தியில் தங்களை ஆளவேண்டியது பா.ஜ.க. என்ற முடிவில் இருந்தாலும், மாநிலத்தை ஆளப்போவது பற்றி ஒரு வித்தியாசமான சிந்தனையை கொண்டிருந்தார்கள். 

இப்போது வரும் கணிப்புகளில் ஆம் ஆத்மி பழைய வெற்றியை பெறாவிட்டாலும், பெரும்பாலான இடங்களில் வெற்றிபெறும் என்றும், பா.ஜ.க.வும் ஒருசில இடங்களில் வெற்றிபெறும் என்றும், காங்கிரசுக்கு குறிப்பிடத்தக்க அளவில் இடம் இல்லை என்றும் சொல்லப்படுகிறது. 

தேர்தல் அறிவிப்புக்கு முன்பே ஆம் ஆத்மி கட்சிதான் ஆட்சிக்கு வரும் என்ற கணிப்பு வந்து கொண்டிருந்த நிலையில், பா.ஜ.க. ஒரு புது யுக்தியை கையில் எடுத்துள்ளது. அதாவது காஷ்மீரில் 370–வது பிரிவை நீக்கியது, குடியுரிமை திருத்த சட்டம், மக்கள்தொகை பதிவேடு, குடிமக்கள் பதிவேடு இப்போது ராமர் கோவில் கட்ட அறக்கட்டளை இவற்றை எல்லாம் முன்னிலைப்படுத்தி பிரசாரத்தில் ஈடுபட்டது. 

பா.ஜ.க. தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டதாலும், காங்கிரஸ் கட்சியினர் தோற்றுவிடுவோம் என்ற காரணத்தால் விறுவிறுப்பான தேர்தல் பிரசாரத்தில் ஈடுபடவில்லையா? அல்லது பா.ஜ.க.வுக்கு எதிராக இருப்பவர்களுக்கு சாதகமாக நிலைமை போகவேண்டும் என்பதற்காக பின்வாங்கிவிட்டார்களா? என்பது தெரியவில்லை. யார் என்ன கணக்குபோட்டாலும், என்ன கணிப்பை வெளியிட்டாலும், நாளை மக்கள் ஓட்டுபோட்டு 11–ந்தேதி வெளியிடப்படும் தேர்தல் முடிவுகளில்தான் மக்களின் எண்ணங்கள் முழுமையாக பிரதிபலிக்கப்பட்டு, டெல்லியை ஆளப்போவது யார்? என்று தெரியும்.

Next Story