கொரோனா விழிப்புணர்வு வேண்டும்


கொரோனா  விழிப்புணர்வு  வேண்டும்
x
தினத்தந்தி 11 Feb 2020 10:30 PM GMT (Updated: 11 Feb 2020 4:15 PM GMT)

சீனாவில் உகான் நகரில் தொடங்கி பல உயிர்களை கொத்துக்கொத்தாய் பறித்துக்கொண்டிருக்கும் இந்த கொரோனா வைரஸ், இதுவரை 27 நாடுகளுக்குமேல் பரவி உள்ளது.

சீனாவில் மக்களை பாதித்துள்ள கொரோனா வைரஸ், எங்கே தங்கள் நாட்டிலும் பரவிவிடுமோ? என்ற அச்சத்தில் உலகம் முழுவதும் அனைத்து நாடுகளும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்து வருகின்றன. சீனாவில் உகான் நகரில் தொடங்கி பல உயிர்களை கொத்துக்கொத்தாய் பறித்துக்கொண்டிருக்கும் இந்த கொரோனா வைரஸ், இதுவரை 27 நாடுகளுக்குமேல் பரவி உள்ளது. சீனாவில் 1,011–ஐ தாண்டி உயிரிழப்பு மணிக்கு மணி அதிகரித்துக்கொண்டே இருக்கிறது. சீனாவைத் தாண்டி பிலிப்பைன்சிலும், ஹாங்காங்கிலும் தலா ஒருவர் கொரோனா வைரசால் உயிரிழந்துவிட்டனர். சீனாவில் மட்டும் 40,171 பேர் இந்த வைரசால் பாதிக்கப்பட்டுள்ளனர். கடந்த 2002–2003–ம் ஆண்டில் இதுபோல சார்ஸ் என்ற வைரசால் ஏற்பட்ட பாதிப்பைவிட, இந்த கொரோனா வைரஸ் அதிக பாதிப்புகளை ஏற்படுத்தியது மட்டு மல்லாமல், மிகவேகமாக பரவுகிறது. இந்த வைரஸ் தலை யெடுத்துவிட்டது என்று முதலில் சீனாவில் எச்சரிக்கை விடுத்த டாக்டரை வீணான வதந்தியை பரப்புகிறார் என்று உகான் நகர போலீசார் கடும் கண்டனத்தை தெரிவித்தனர். ஆனால், மிகப்பரிதாபமாக அவரே இப்போது இந்த வைரசால் உயிரிழந்துவிட்டார். இந்திய அரசாங்கம் எல்லா நடவடிக்கைகளையும் எடுத்துக்கொண்டு இருந்தாலும், இங்கேயும் கொரோனா வைரஸ் கால் பதித்துவிட்டது. கேரளாவைச் சேர்ந்த ஒரு மாணவி உகான் நகரில் மருத்துவம் படித்துக்கொண்டிருந்தார். அங்கு கொரோனா வைரஸ் பாதிப்பு ஏற்பட்டவுடன், திருச்சூரில் இருக்கும் தனது வீட்டுக்கு வந்தார். வந்து இறங்கியவுடன் அவருக்கு மருத்துவ பரிசோதனை நடந்தது. அப்போது கொரோனா வைரஸ் பாதிப்பு இல்லை என்று முடிவுகள் வெளியாகின.

இந்த நிலையில், வீட்டுக்குப்போன அவருக்கு தொண்டையில் வலியும், மூச்சுவிடுவதற்கு கஷ்டமும் ஏற்பட்டது. உடனடியாக நடந்த பரிசோதனையில் அவருக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு இருப்பது கண்டு பிடிக்கப்பட்டது. இப்போது குணமடைந்துவிட்டார். அவரைத்தொடர்ந்து உகானில் படித்துக்கொண்டிருந்த ஆலப்புழாவைச் சேர்ந்த ஒரு மாணவரும், காசர்கோடை சேர்ந்த ஒரு மாணவரும் கொரோனா வைரசால் பாதிக்கப் பட்டு சிகிச்சை பெற்றனர். தமிழ்நாடு முழுவதும் ஏராளமானவர்களுக்கு பரிசோதனை செய்யப்பட்டுள்ளது. நல்லவேளையாக யாருக்கும் பாதிப்பு இல்லை. கேரளாவில் மாநில பேரிடர் அறிவிக்கப்பட்டுள்ளதால், தமிழ்நாடு எல்லையிலும், சர்வதேச விமான நிலையங் களிலும் பயணிகள் மருத்துவ சோதனைக்கு உட்படுத்தப் படுகிறார்கள். இந்த சோதனைகளை கேரள மாநில எல்லைப்புறங்களிலும், பாதிக்கப்பட்ட 27 நாடுகளில் இருந்து வருபவர்களிடமும் இன்னும் தீவிரப்படுத்த வேண்டும். சீனாவில் சீன அதிபர் ஒரு இடத்துக்கு செல்லும்போது அவருக்கே காய்ச்சல் இருக்கிறதா? என்று பரிசோதித்ததுபோல, சோதனைகள் நடக்கவேண்டும்.

இந்த வைரஸ் பாதிப்பு ஏற்பட்டவுடன் எப்படி கேரள மாணவிக்கு முதல் பரிசோதனையில் பாதிப்பு இல்லை என்று தெரிந்தபிறகு, சிலநாட்கள் கழித்து நடந்த மருத்துவ பரிசோதனையில் பாதிப்பு இருப்பது உறுதிசெய்யப்பட்டுள்ளதோ, அதுபோல அந்த வைரஸ் பாதிப்பு ஏற்பட்டு 14 நாட்கள் கழித்துத்தான் அதன் தீவிரம் மருத்துவ பரிசோதனையில் தெரியும். அந்த 14 நாட்களிலேயே ஒருவரிடம் இருந்து அடுத்தவருக்கு பரவும் அபாயமும் இருக்கிறது. எனவே, ஒருவருக்கு வந்துவிட்டால் அடுத்தவருக்கும் வேகமாக பரவிவிடும் நோய் இது. சீன அதிபர் ஜின் பிங், இந்த நேரத்தில் ஒருவருக்கொருவர் கைகுலுக்க வேண்டாம் என்று கூறியிருக்கிறார். அந்த அளவுக்கு கொடிய வைரஸ் இது. சீனாவுக்கு வந்துள்ள உலக சுகாதார நிறுவனம், சீனாவை தவிர மற்ற நாடுகளில் இது தீப்பொறியாக இருக்கிறது. பெரிய தீயாகவும் மாறும் அபாயம் இருக்கிறது என்று எச்சரித்துள்ளது. தமிழ்நாட்டில் இந்த சிறு பொறிகூட ஏற்பட்டுவிடக்கூடாது. அதாவது தமிழ் நாட்டில் ஒருவருக்குக்கூட கொரோனா வைரஸ் பாதிப்பு ஏற்பட்டுவிடக்கூடாது என்பதில் தமிழக அரசின் மக்கள் நல்வாழ்வுத்துறை மிகத்தீவிரமாக விழிப்புடன் இருக்க வேண்டும். இதுகுறித்த தடுப்பு நடவடிக்கைகள் தொடர்பான விழிப்புணர்வை மக்களிடம் ஏற்படுத்த வேண்டும். 

Next Story