மக்கள் நலத்திட்டங்களுக்கு கிடைத்த மகத்தான வெற்றி


மக்கள் நலத்திட்டங்களுக்கு கிடைத்த மகத்தான வெற்றி
x
தினத்தந்தி 12 Feb 2020 10:30 PM GMT (Updated: 2020-02-12T21:48:53+05:30)

2014–ம் ஆண்டு நாடாளுமன்ற தேர்தலில் பா.ஜ.க. வெற்றிபெற்று இருக்கிறது. ஆனால், சில மாதங்களில் டெல்லியில் நடந்த சட்டசபை தேர்தலில் ஆம் ஆத்மி கட்சி மகத்தான வெற்றியை பெற்றது.

ந்தியாவை ஆள்வது பா.ஜ.க. இந்தியாவின் தலைநகர் டெல்லியை ஆளப்போவது யார்? என்பதைத்தான் ஒட்டுமொத்த இந்தியாவே ஆவலோடு எதிர்பார்த்து கொண்டிருந்தது. பொதுவாக, இந்திய மக்கள் நாடாளுமன்றத்துக்கு ஒரு தீர்ப்பும், சட்டமன்ற தேர்தலுக்கு ஒரு தீர்ப்பும் வழங்குவார்கள். தமிழ்நாடு பலமுறை அதை செய்து காட்டி இருக்கிறது. 2014–ம் ஆண்டு நாடாளுமன்ற தேர்தலில் பா.ஜ.க. வெற்றிபெற்று இருக்கிறது. ஆனால், சில மாதங்களில் டெல்லியில் நடந்த சட்டசபை தேர்தலில் ஆம் ஆத்மி கட்சி மகத்தான வெற்றியை பெற்றது. இதுபோலத்தான் நடந்து முடிந்த நாடாளுமன்ற தேர்தலில் டெல்லியில் உள்ள 7 தொகுதிகளிலும் பா.ஜ.க.தான் வெற்றி பெற்றது. அதில் 3 தொகுதிகளில் ஆம் ஆத்மி கட்சி டெபாசிட் இழந்தது. 

2015–ம் ஆண்டு நடந்த சட்டசபை தேர்தலில் 67 இடங்களில் ஆம் ஆத்மி கட்சியும், பா.ஜ.க. 3 இடங்களிலும், காங்கிரஸ் 0 இடத்திலும் வெற்றி பெற்றன. இப்போது நடந்த தேர்தலில் ஆம் ஆத்மி கட்சி 62 இடங்களிலும், பா.ஜ.க. 8 இடங்களிலும், காங்கிரஸ் மீண்டும் 0 இடத்திலும் வெற்றி பெற்றுள்ளன. பொதுவாக, ஆளுங்கட்சி அடுத்த தேர்தலில் வெற்றிபெறுவது என்பது கஷ்டமான ஒன்று என்று அரசியல் அரங்கில் பேசப்படுவது உண்டு. ஆனால், அதெல்லாம் தாண்டி ஆம் ஆத்மி கட்சியின் மக்கள் நலத்திட்டங்களால், செயல்பாட்டால் தொடர்ந்து 3–வது முறையாக வெற்றி பெற்றுள்ளது. இதற்கு முழுக்க முழுக்க காரணம் ஊழலுக்கு எதிராக போரிட்டு, அரசியல் அரங்கில் நுழைந்த அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு தனி மக்கள் செல்வாக்கு என்றாலும், கடந்தமுறை அவர் ஆட்சியில் நிறைவேற்றிய பல மக்கள் நலத்திட்டங்கள்தான் இப்போது அவருக்கு கைகொடுத்தது என்பதை யாரும் மறுக்கமுடியாது. 200 யூனிட்வரை இலவச மின்சாரம், தண்ணீர் வசதி, பெண்களுக்கு இலவச பஸ்பாஸ் வசதி, எல்லாவற்றுக்கும் மேலாக டெல்லி மக்களுக்கு அரசு மருத்துவமனைகளில் தரமுள்ள மருத்துவ வசதி, தனியார் பள்ளிக்கூடத்துக்கும் மேலான கல்வித்தரம் கொண்ட அரசு பள்ளிக்கூடங்கள் என்பதெல்லாம் அவருக்கு கைகொடுத்தன. மேலும் ஊழல் புகார் அவர் மீது இல்லை. அவருடைய தேர்தல் பணிகளும் வெற்றிக்கனியை பறிப்பதற்கு ஒரு காரணம். அரசியல் ஆலோசகர் பிரசாந்த் கிஷோர் மீண்டும் தன் பணியில் ஒரு வெற்றியை தேடித்தந்துள்ளார். நவம்பர் மாதத்தில் இருந்தே ஆம் ஆத்மி தொண்டர்கள் கெஜ்ரிவால் கட்சியின் சாதனைகள் என்ற வெளியீட்டை 35 லட்சம் வீடுகளுக்கும் வழங்கினர். இதுமட்டுமல்லாமல், 20 கூட்டங்களில் அரவிந்த் கெஜ்ரிவால், பொதுமக்களின் கேள்விகளுக்கு சலிக்காமல் நேரடியாக பதில் அளித்தார்.

இந்தநிலையில், கடந்த தேர்தலில் 54.34 சதவீத ஓட்டுகளை பெற்ற ஆம் ஆத்மி, இப்போது 53.57 சதவீத ஓட்டுகளை பெற்றுள்ளது. பா.ஜ.க. கடந்த தேர்தலில் 32.69 சதவீத ஓட்டுகளை பெற்றுள்ள நிலையில், தற்போது 38.51 சதவீத ஓட்டுகளை பெற்றுள்ளது. காங்கிரஸ்தான் பாவம். 2015–ல் 9.65 சதவீத ஓட்டுகளை பெற்றநிலையில், இப்போது 4.26 சதவீத ஓட்டுகளை பெற்றுள்ளது. இப்போது 66 தொகுதிகளில் போட்டியிட்ட காங்கிரஸ், 63 தொகுதிகளில் டெபாசிட்டை இழந்துள்ளது. ஆக, காங்கிரஸ் படுதோல்வி அடைந்து விட்டது. கடந்த 2018 டிசம்பர் மாதத்தில் இருந்து இப்போதுவரை 11 மாநில சட்டமன்ற தேர்தல்கள் நடந்துள்ளன. இதில் அரியானா, அருணாசல பிரதேசத்தைத்தவிர, 9 மாநிலங்களிலும் பா.ஜ.க. தோல்வி அடைந்துள்ளது. மொத்தத்தில், அனைத்து மாநிலங்களுக்கும் ஆம் ஆத்மி கட்சியின் செயல்பாடுகள், சாதனைகள் ஒரு எடுத்துக்காட்டாக அமைந்துள்ளன. எந்தவொரு அரசாங்கமும், மக்கள் சேவையில் தன்னை முழுமையாக ஈடுபடுத்திக்கொண்டால், தொடர்ந்து வரும் தேர்தல்களில் வெற்றி மகுடத்தை சூட்டமுடியும் என்பதற்கு டெல்லியில் ஆம் ஆத்மி கட்சி பெற்ற வெற்றியே சான்றாகும்.

Next Story