குடியுரிமை சட்டத்துக்கு எதிராக தீர்மானம்


குடியுரிமை  சட்டத்துக்கு எதிராக  தீர்மானம்
x
தினத்தந்தி 13 Feb 2020 10:30 PM GMT (Updated: 13 Feb 2020 4:17 PM GMT)

நாடாளுமன்றத்தின் மக்களவை, மாநிலங்களவையில் நிறைவேற்றப்பட்ட குடியுரிமை திருத்த சட்டமசோதா நாடு முழுவதும் பெரிய சர்ச்சையை கிளப்பியுள்ளது.

நாடாளுமன்றத்தின் மக்களவை, மாநிலங்களவையில் நிறைவேற்றப்பட்ட குடியுரிமை திருத்த சட்டமசோதா நாடு முழுவதும் பெரிய சர்ச்சையை கிளப்பியுள்ளது. அனேகமாக எல்லா மாநிலங்களிலுமே எதிர்க்கட்சிகள், முஸ்லிம்கள், மாணவர்கள், அரசின் தொழிற்சங்கங்கள் பலத்த போராட்டங்களை நடத்தி வருகிறார்கள். பாகிஸ்தான், ஆப்கானிஸ்தான், வங்காளதேசம் போன்ற நாடுகளில் மதரீதியிலான துன்புறுத்தலுக்கு ஆளாகி, இந்தியாவில் வந்து குடியேறிய இந்துக்கள், சீக்கியர்கள், பவுத்தர்கள், ஜெயின்கள், பார்சிகள், கிறிஸ்தவர்கள் ஆகியோருக்கு குடியுரிமை வழங்க அனுமதி அளிக்கும் வகையிலான சட்டம்தான் இது. 2014–ம் ஆண்டு டிசம்பர் 31–ந் தேதிக்குள் இவ்வாறு குடியேறியவர்கள் முறையாக விண்ணப்பித்து, இந்திய குடியுரிமை பெறமுடியும். இந்த சட்டத்தில் முஸ்லிம்களை ஏன் சேர்க்கவில்லை?. அதுபோல ஏன் 3 நாடுகள் மட்டும் தேர்வு செய்யப்பட்டுள்ளன?. இலங்கை, மியான்மர், பூடான், நேபாளம் ஆகிய நாடுகளில் துன்புறுத்தலுக்கு ஆளாகி இங்கு வந்து வெகுகாலமாக குடியேறியவர்கள் ஏன் இதுபோல குடியுரிமையை பெறமுடியவில்லை?. அகமதியர்கள், ஹசராக்கள், பலோச்சியர்கள், ரோகிங்கியர்கள், யூதர்கள் ஆகியோரும் சேர்க்கப்பட்டிருக்க வேண்டும் அல்லவா? என்று பல கேள்விகள் எழும்புகின்றன. தமிழ்நாடு உள்பட நாடு முழுவதும் குடியுரிமை சட்டத்துக்கு எதிராக தினமும் போராட்டங்கள் நடந்து வருகின்றன.

இந்த நிலையில், பல மாநில முதல்–மந்திரிகள் இந்த சட்டத்தை எதிர்த்து வருகிறார்கள். கேரள சட்டசபையில் கூட்டப்பட்ட சிறப்பு கூட்டத்தில், சர்ச்சைக்குரிய குடியுரிமை திருத்த சட்டத்தை மத்திய அரசு ரத்து செய்யவேண்டும். ஏனெனில், இது அரசியல் சட்டத்துக்கு எதிரானது என்று கூறி முதல் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. மிக அபூர்வமாக ஆளுங்கட்சி கூட்டணி, எதிர்க்கட்சி கூட்டணிகள் எல்லாமே இந்த தீர்மானத்தை ஆதரித்தன. பா.ஜ.க.வைச் சேர்ந்த ஒரே உறுப்பினர்தான் எதிர்ப்பு தெரிவித்துள்ளார். இதேபோல, மேலும் பஞ்சாப், ராஜஸ்தான், மேற்குவங்காளம், மத்தியபிரதேச மாநில சட்டசபைகளிலும், இப்போது புதுச்சேரியிலும் குடியுரிமை திருத்த சட்டத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. புதுச்சேரியில் கவர்னரின் எதிர்ப்பையும் மீறி முதல்–அமைச்சர் நாராயணசாமி குடியுரிமை திருத்த சட்டம், தேசிய குடிமக்கள் பதிவேடு, தேசிய மக்கள் தொகை பதிவேடுகளை மத்திய அரசு திரும்பப் பெறவேண்டும் என்று வலியுறுத்தி சட்டசபையில் கொண்டுவந்த தீர்மானம் நிறைவேறி உள்ளது. தமிழக சட்டசபையிலும் இந்த சட்டத்திருத்தத்தை மத்திய அரசு திரும்ப பெறவேண்டும் என்று வலியுறுத்தி முதல்–அமைச்சர் எடப்பாடி பழனிசாமி தீர்மானம் நிறைவேற்ற வேண்டும் என்று தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் வற்புறுத்தி உள்ளார். 

கேரள சட்டசபையில் இந்த தீர்மானத்தை நிறைவேற்றும் முன்பு, சட்ட நிபுணர்களின் ஆலோசனையை பெற்றிருக்கவேண்டும் என்று கருத்து தெரிவித்துள்ள மத்திய சட்ட மந்திரி ரவிசங்கர் பிரசாத், அரசியல் சட்டம் உள்பட மத்திய பட்டியலில் உள்ள எந்த பொருளைப் பற்றியும் சட்டம் நிறைவேற்ற நாடாளுமன்றத்துக்குத்தான் அதிகாரம் இருக்கிறது. அரசியல் சட்டம் தொடர்பாக நாடாளுமன்றத்தால் நிறைவேற்றப்பட்ட சட்டங்களை நடைமுறைப்படுத்துவது மாநிலங்களின் கடமையாகும் என்று கூறி, இதுதொடர்பாக அரசியல் சட்டப்பிரிவுகளையும் மேற்கோள் காட்டியுள்ளார். கேரள முதல்–மந்திரி பினராயி விஜயன், மாநில சட்டசபைகளுக்கு தனியாக உரிமைகள் இருக்கிறது என்று திட்டவட்டமாக தெரிவித்துள்ளார். ஆனால் கேரள கவர்னர் ஆரிப் முகமது கானோ, இவ்வாறு கேரள சட்டசபையில் தீர்மானம் நிறைவேற்றியது அரசியல் சட்டத்துக்கு விரோதமானது என்று கூறியிருக்கிறார். நாடாளுமன்ற இரு அவைகளிலும் நிறைவேற்றி, ஜனாதிபதியின் ஒப்புதலையும் பெற்று, அரசிதழில் வெளியிடப்பட்டுள்ள குடியுரிமை திருத்த சட்டமசோதாவை, மாநில அரசுகள் நிறைவேற்றித்தான் ஆகவேண்டுமா? அல்லது நாங்கள் அதை நிறைவேற்றமாட்டோம் என்று கூற உரிமை இருக்கிறதா? இந்த சட்டத்தை எதிர்த்து மாநில சட்டசபைகளில் தீர்மானத்தை நிறைவேற்றலாமா?, கூடாதா? என்பது பற்றியெல்லாம் வித்தியாசமான கருத்துகளே இருசாராராலும் கூறப்படுகிறது.

Next Story