குடியுரிமை திருத்த சட்டத்திற்கு என்னதான் தீர்வு?


குடியுரிமை திருத்த சட்டத்திற்கு என்னதான் தீர்வு?
x
தினத்தந்தி 17 Feb 2020 10:30 PM GMT (Updated: 2020-02-17T21:46:02+05:30)

குடியுரிமை திருத்த சட்டம் நாடு முழுவதும் பெரிய கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது. கடந்த டிசம்பர் மாதம் நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் குடியுரிமை திருத்த மசோதாவை நிறைவேற்றி, ஜனாதிபதியின் ஒப்புதலும் பெற்று சட்டமாகிவிட்டது.

பாகிஸ்தான், வங்காளதேசம், ஆப்கானிஸ்தான் ஆகிய நாடுகளில் வசித்து வந்த இந்துக்கள், சீக்கியர்கள், புத்த மதத்தினர், சமணர்கள், பார்சி இனத்தினர், கிறிஸ்தவர்கள் ஆகிய சிறுபான்மையினர் மதரீதியிலான துன்புறுத்தலுக்கு ஆளாகி இந்தியாவிற்கு வந்து 6 ஆண்டுகள் வசித்தால் அவர்களுக்கு இந்திய குடியுரிமை வழங்கலாம் என்பதுதான் இந்த சட்டத்தின் மூலநோக்கமாகும். இந்த சட்டத்தின் மூலம் பாகிஸ்தான், ஆப்கானிஸ்தான், வங்காளதேசத்தில் இருந்து வந்த முஸ்லிம்கள் அல்லாத 31,313 பேர் இந்திய குடியுரிமை பெற உள்ளனர். 

இந்த சட்டம் நிறைவேற்றியதில் இருந்து நாடு முழுவதும் எதிர்க்கட்சிகள் பலத்த எதிர்ப்பை தெரிவித்துள்ளன. இந்த சட்டத்தில் ஏன் இஸ்லாமியர்களை சேர்க்கவில்லை. அதுபோல, ஏன் 3 நாடுகள் மட்டும் சேர்க்கப்பட்டுள்ளன. இலங்கை, மியான்மர், பூடான், நேபாளம் ஆகிய நாடுகளிலும் பல்வேறு வகையிலான துன்புறுத்தலுக்கு ஆளாகி, இந்தியாவில் குடியேறியவர்களுக்கு ஏன் குடியுரிமை கொடுக்கவில்லை, தமிழ்நாட்டில் தஞ்சம் புகுந்துள்ள இலங்கை தமிழர்களை ஏன் சேர்க்கவில்லை? என்றெல்லாம் எதிர்ப்புகள் கிளம்பியுள்ளன. டெல்லியில் உள்ள ‌ஷகீன் பாக் என்ற இடத்தில் முஸ்லிம் பெண்கள் கடந்த டிசம்பர் 15–ந்தேதி முதல் தொடர்ந்து இரவும்–பகலுமாக போராட்டம் நடத்தி வருகிறார்கள். அங்கு தொடங்கி வைத்த பொறி நாடு முழுவதும் பற்றி எரிகிறது. தமிழ்நாட்டிலும் ஏராளமான இடங்களில் பெண்கள் தொடர் போராட்டத்தை நடத்தி வருகிறார்கள். சென்னை வண்ணாரப்பேட்டையில் நேற்று 4–வது நாளாக நடந்துவரும் போராட்டத்தில் ஏராளமான பெண்கள் கலந்துகொண்டனர். சில முஸ்லிம் அல்லாத பெண்கள் அவர்களுக்கு டீ, பரோட்டா, ரொட்டி போன்றவற்றை வழங்குவது தமிழ்நாட்டில் எந்த அளவுக்கு மதநல்லிணக்கம் தலைதூக்கி இருக்கிறது என்பதை எடுத்துக்காட்டுகிறது. தி.மு.க. கூட்டணி கட்சிகள் சார்பில் கடந்த 2–ந்தேதி முதல் 8–ந் தேதிவரை ஒருகோடி தமிழ் மக்களிடம் இருந்து குடியுரிமை திருத்த சட்டத்திற்கு எதிராக கையெழுத்து பெற்று ஜனாதிபதிக்கு அனுப்பிவைக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டது. ஆனால் 2 கோடியே 5 லட்சத்து 66 ஆயிரத்து 82 பேர் கையெழுத்திட்ட படிவங்களை தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் தலைமையில் கூட்டணிக் கட்சி தலைவர்கள் ஜனாதிபதிக்கு அனுப்பி வைத்துள்ளனர். சில மாநில சட்டசபைகளில் இந்த சட்டத்திற்கு எதிராக தீர்மானம் நிறைவேற்றிய நிலையில், தமிழக சட்டசபையிலும் நிறைவேற்றவேண்டும் என்று தி.மு.க. உள்பட எதிர்க்கட்சிகள் வலியுறுத்துகின்றன. ஆனால், மாநிலங்களவையில் அ.தி.மு.க.வின் ஆதரவைப் பெற்றதால்தான் இந்த சட்டம் நிறைவேறிய நிலையில், தமிழக சட்டசபையில் இந்த தீர்மானம் நிறைவேற்றப்படுமா? என்பதில் சந்தேகமே எழுகிறது.

நாடு முழுவதும் இந்த சட்டத்தை எதிர்த்து போராட்டங்கள் நடந்துவரும் சூழ்நிலையில், வாரணாசியில் நடந்த ஒரு கூட்டத்தில் பிரதமர் நரேந்திரமோடி பேசும்போது, காஷ்மீருக்கான அரசியல் சட்டம் 370–ஐ ரத்து செய்த முடிவிலும், குடியுரிமை திருத்த சட்டம் நிறைவேற்றியதிலும் அரசு உறுதியாக இருக்கிறது. பல ஆண்டுகளாக இந்த முடிவுகளுக்காக நாடு எதிர்பார்த்துக் கொண்டிருந்தது. தேசிய நலனுக்கு இந்த முடிவுகள் தேவையான ஒன்று. சர்வதேச அளவில் என்ன அழுத்தம் வந்தாலும், எங்கள் முடிவில் நாங்கள் உறுதியாக இருக்கிறோம். தொடர்ந்து இதே முடிவில் உறுதியாக இருப்போம். கடந்த பல ஆண்டுகளாக நிறைவேற்றப்படாமல் விட்டுப்போன முடிவுகளை மத்திய அரசு இப்போது எடுத்துள்ளது என்று மிக உறுதியாக தெரிவித்து விட்டார். ஆக, ஒருபக்கம் இந்த சட்டத்திற்கு எதிராக போராட்டம் நடந்தாலும், பிரதமர் தன் முடிவில் உறுதியாக இருப்பதை தெரிவித்து விட்டார். இந்தநிலையில், இந்த பிரச்சினைக்கு என்னதான் தீர்வு? என்பதை நாடு எதிர்பார்த்துக்கொண்டு இருக்கிறது.

Next Story