பள்ளிக்கூடங்களில் காய்கறித் தோட்டங்கள்


பள்ளிக்கூடங்களில் காய்கறித் தோட்டங்கள்
x
தினத்தந்தி 18 Feb 2020 10:30 PM GMT (Updated: 2020-02-18T21:42:58+05:30)

பெருந்தலைவர் காமராஜர், 1956–ம் ஆண்டு அரசு தொடக்கப்பள்ளிக்கூடங்களில் படிக்கும் ஏழை குழந்தைகளுக்கு மதிய உணவுத்திட்டத்தை அறிமுகப்படுத்தினார்.

மாணவர்களின் பள்ளிக்கூட கல்விக்கு வறுமையும், பசிப்பிணியும் ஒரு காரணமாக இருக்கக்கூடாது என்ற சீரிய நோக்கில், முதல்–அமைச்சராக இருந்த மறைந்த பெருந்தலைவர் காமராஜர், 1956–ம் ஆண்டு அரசு தொடக்கப்பள்ளிக்கூடங்களில் படிக்கும் ஏழை குழந்தைகளுக்கு மதிய உணவுத்திட்டத்தை அறிமுகப்படுத்தினார். இந்த திட்டத்தின் பயனாக மழைக்குக்கூட பள்ளிக்கூடம் பக்கம் ஒதுங்காத பல ஏழை மாணவர்கள், மதியம் ஒருவேளையாவது அரிசிச் சோறு சாப்பிடுவார்களே என்ற பெற்றோரின் ஆசையால் பள்ளிக்கூடம் அனுப்பப்பட்டார்கள். அதன்பிறகு மறைந்த முதல்–அமைச்சர் எம்.ஜி.ஆர். 1982–ம் ஆண்டு மதிய உணவுத்திட்டத்தை, சத்துணவு திட்டமாக விரிவுபடுத்தினார். இதன்மூலம் அரசு மற்றும் அரசு உதவிபெறும் பள்ளிக்கூடங்களில் 1–ம் வகுப்பு முதல் 10–ம் வகுப்புவரை ஏழை–எளிய மாணவர்களுக்கு இப்போது மதிய உணவு வழங்கப்பட்டு வருகிறது. 

இந்த திட்டத்தின்கீழ் முதல் சத்துணவு கூடத்தை அமரர் சி.பா.ஆதித்தனார் பெயரில் அவரது மகன் பத்மஸ்ரீ டாக்டர் பா.சிவந்தி ஆதித்தன், திருச்சி மாவட்டம் பாப்பாக்குறிச்சியில் கட்டிக்கொடுத்தார். அதை 1.7.1982 அன்று எம்.ஜி.ஆர். திறந்துவைத்து, மாணவர்களோடு மதிய உணவு சாப்பிட்டார். பல கட்டங்களில் சத்துணவுத்திட்டம் விரிவுபடுத்தப்பட்டு, தற்போது 49 லட்சத்து 85 ஆயிரத்து 335 மாணவ–மாணவிகளுக்கு, 43 ஆயிரத்து 283 சத்துணவு மையங்கள் மூலம் உணவு தயாரிக்கப்பட்டு வழங்கப்படுகிறது. இப்போது 1–ம் வகுப்பு முதல் 5–ம் வகுப்பு வரை படிக்கும் மாணவர்களுக்கு காய்கறிகளுக்காக பருப்பு பயன்படுத்தும் நாட்களுக்கு ஒரு மாணவருக்கு 96 காசும், பருப்பு பயன்படுத்தாத நாட்களுக்கு ஒருநாளைக்கு ஒரு ரூபாய் 13 காசும், 6 முதல் 10–ம் வகுப்பு வரை படிக்கும் மாணவர்களுக்கு பருப்பு பயன்படுத்தும் நாட்களுக்கு ஒரு ரூபாய் 10 காசும், பருப்பு பயன்படுத்தாத நாட்களுக்கு ஒரு ரூபாய் 27 காசும் அரசு மானியமாக வழங்குகிறது. மாணவர்கள் அதிகம் காய்கறி பயன்படுத்தினால்தான் தேவையான ஊட்டச்சத்து கிடைக்கும் என்ற காரணத்தால் காய்கறியின் முக்கியத்துவம் குறித்து நிபுணர்கள் கருத்து தெரிவித்து வருகிறார்கள். 

இந்த நிலையில், கடந்த 11.7.2019 அன்று சட்டசபையில் 110 விதியின் கீழ் முதல்–அமைச்சர் எடப்பாடி பழனிசாமி பேசும்போது, சத்துணவு மையங்களில் காய்கறித்தோட்டம் அமைத்து, காய்கறிகளை உற்பத்தி செய்து பயன்படுத்த ஏதுவாக தோட்டக்கலைத்துறையின் உதவியுடன் காய்கறித்தோட்டம் அமைக்க, முதல்கட்டமாக ஒரு சத்துணவு மையத்திற்கு ரூ.5 ஆயிரம் வீதம், 9,915 சத்துணவு மையங்களில் சுமார் ரூ.4.96 கோடி செலவில் காய்கறித்தோட்டம் அமைக்கப்படும் என்று அறிவித்தார். மிகவும் வரவேற்கத்தக்க இந்த அறிவிப்பை செயல்படுத்தும் விதமாக அரசாணை பிறப்பிக்கப்பட்டு, அனைத்து மாவட்ட கல்வி அதிகாரிகளுக்கும் சுற்றறிக்கையும் அனுப்பப்பட்டுவிட்டது. இதன்படி, இடம் இருக்கும் பள்ளிக்கூடங்களில் சிறிய காய்கறித்தோட்டம் அமைக்கவும், இடமில்லாத பள்ளிக்கூடங்களில் மாடித்தோட்டம் அமைக்கவும் முடிவு செய்யப்பட்டுள்ளது. 8 முதல் 12 மாணவர்களை கொண்ட பல குழுக்கள் அமைக்கப்பட்டு ஒவ்வொரு குழுவுக்கும் ஒரு சிறிய இடத்தை கொடுத்து தோட்டம் அமைக்கப்படும். தோட்டக்கலை மற்றும் வேளாண்மைத்துறை அதிகாரிகள் எப்படி காய்கறித்தோட்டம் அமைப்பது என்பதை கற்றுக்கொடுப்பதற்கு துணையாக இருப்பார்கள். ஆசிரியர்களும் பெரும்பங்கு வகிப்பார்கள். இதில் விளையும் காய்கறிகளை சத்துணவு கூடங்களுக்கு கொடுப்பதற்கு முன்பு பள்ளிக்கூடத்தில் தினமும் நடக்கும் இறைவணக்கக் கூட்டத்தில், எந்தெந்த மாணவக் குழுக்கள் விளைவித்த காய்கறிகள் அறுவடை செய்யப்பட்டுள்ளன என்பதைச் சொல்லி, அந்த மாணவக் குழுக்களுக்கு பாராட்டும் தெரிவிப்பார்கள். விவசாயத்தை ஊக்குவிக்கும் நோக்கத்தில் அரசு செயல்படுத்தும் இந்த நேரத்தில், இளம் வயதிலேயே விவசாயம் செய்வதற்கான ஆர்வத்தை ஊட்டி சத்துணவு மையங்களுக்கு விளைவிக்கும் காய்கறிகளை வழங்கும் இந்த திட்டத்தை மிகச்சிறந்த முறையில் நிறைவேற்றுவது நிச்சயமாக இன்றைய காலக்கட்டத்தில் தேவையான ஒன்றாகும்.

Next Story