ஒருங்கிணைந்த உழவர் விற்பனை வளாகங்கள்


ஒருங்கிணைந்த உழவர் விற்பனை வளாகங்கள்
x
தினத்தந்தி 20 Feb 2020 10:30 PM GMT (Updated: 20 Feb 2020 4:13 PM GMT)

தமிழக அரசின் பட்ஜெட்டில் விவசாயிகளுக்கு நல்ல பலன் அளிக்கும் ஒரு திட்டம் குறித்த, சில வாசகங்கள் குறிப்பிடப்பட்டு இருந்தன.

மிழக அரசின் பட்ஜெட்டில் விவசாயிகளுக்கு நல்ல பலன் அளிக்கும் ஒரு திட்டம் குறித்த, சில வாசகங்கள் குறிப்பிடப்பட்டு இருந்தன. ஒருங்கிணைந்த உழவர் விற்பனை வளாகங்கள் திருவண்ணாமலை, தர்மபுரி, மதுரை, திருச்சி மற்றும் திருநெல்வேலி மாவட்டங்களில் 5 இடங்களில் முன்னோடித் திட்ட அடிப்படையில் மொத்தம் 50 கோடி ரூபாய் மதிப்பீட்டில் நபார்டு–வேளாண் சந்தை உள்கட்டமைப்பு நிதியின் கீழ் நிறுவப்படும். இந்த வளாகங்கள் இடுபொருள் விற்பனையகங்கள், சேவை மையங்கள் மற்றும் பிற விற்பனை நிலையங்கள் போன்ற வசதிகளுடன், விவசாயிகள் மற்றும் நுகர்வோர் இருதரப்பினரும் பயன்பெறும் வகையில் பொதுவான தளங்களாகச் செயல்படும் என்று குறிப்பிடப்பட்டுள்ளது. இந்த ஒருங்கிணைந்த உழவர் விற்பனை வளாகங்களில் ஒரே வளாகத்துக்குள் விவசாயிகள் தங்கள் விளைபொருட்களை விற்க வசதி அளிப்பதோடு மட்டுமல்லாமல், அவர்கள் உரம் வாங்குவது, டிராக்டர் போன்ற வேளாண் கருவிகளை பழுது பார்ப்பது என்று எல்லா வசதிகளையும் பெற முடியும். அந்தந்த மாவட்டங்களில் என்ன விளைபொருட்கள் விளைகிறதோ, அதற்கேற்ப விவசாயிகளுக்கு என்னென்ன தேவைகள் இருக்கிறதோ, அந்த வசதிகளையெல்லாம் வழங்கும் வகையில் இந்த வளாகங்கள் அமைக்கப்பட இருக்கின்றன. இதில் பெரிய வசதி என்னவென்றால், 25 முதல் 50 டன் வரை வேளாண் விளைபொருட்களை சேமித்து வைப்பதற்காக குளிர்சாதன கிட்டங்கிகளும் இருக்கும். ஒருவேளை அந்தநாளில் விவசாயிகளால் அவர்கள் விற்பனைக்காக கொண்டுவந்த காய்கறிகள், பழங்கள் போன்ற பொருட்களை முழுமையாக விற்க முடியாவிட்டால், அடுத்த சில நாட்களில் விற்று கொள்ளும்வகையில் இந்த குளிர்சாதன கிட்டங்கிகளை பயன்படுத்திக் கொள்ளலாம்.

வெறுமனே விற்பனை செய்ய கடைகள் மட்டுமல்லாமல், மதிப்புக்கூட்டு மையங்கள், விவசாயிகளுக்கு பயிற்சி மையங்கள், மெக்கானிக் ஷாப்கள், ஏ.டி.எம். போன்ற வங்கி வசதிகள், மளிகைக்கடைகள் என எல்லாமே ஒரே கூரையின்கீழ் இருக்கும். தற்போது முன்னோடித்திட்ட அடிப்படையில் இந்த ஆண்டே 5 மாவட்டங்களில் தொடங்க இருக்கிறது. அந்த மாவட்டங்களிலும் எந்த ஊரில் இந்த வளாகங்களை அமைக்கலாம் என்று அதிகாரிகள் இடம் தேர்வு செய்து கொண்டிருக்கிறார்கள். இந்த திட்டத்தின் பலன்களையெல்லாம் பார்க்கும்போது இவற்றை எல்லா மாவட்டங்களிலும் வேகமாக விரிவாக்க வேண்டும். பொதுவாக ஏழை–எளிய நடுத்தர குடும்பங்களில் நாள் ஒன்றுக்கு என்றாலும்சரி, மாதம் ஒன்றுக்கு என்றாலும்சரி, வரவு–செலவு கணக்கிட்டு பட்ஜெட் போட்டுத்தான் செலவழிக்க வேண்டிய நிலை இருக்கிறது. இதில், காய்கறிகள், மளிகை பொருட்களுக்கான செலவு பெரும்பங்கு வகிக்கிறது. வேளாண் விளைபொருட்களை உற்பத்தி செய்யும் விவசாயிகளுக்கும் அவர்கள் விளைபொருட்களுக்கு நியாயமான விலை கிடைக்காமல் இருக்கிறது. அவர்களிடமிருந்து இடைத்தரகர்கள் வாங்கும் விலைக்கும், பொதுமக்கள் வாங்கும் விலைக்கும் நீண்ட நெடிய இடைவெளி இருக்கிறது. ஆக விவசாயிகளுக்கும் பலன் இல்லை. 

இந்த நிலையை மாற்ற மறைந்த முன்னாள் முதல்–அமைச்சர் கருணாநிதி 1999–ம் ஆண்டு நவம்பர் மாதம் 14–ந் தேதி மதுரையில் உழவர் சந்தை திட்டத்தை அறிமுகப்படுத்தினார். இதன் மூலம் விவசாயிகள் நேரடியாகவே தங்கள் விளைபொருட்களை அரசு பஸ்களில் கட்டணம் இல்லாமல் கொண்டுவந்து உழவர் சந்தையில், விற்க உத்தரவிடப்பட்டது. இந்த உழவர் சந்தை திட்டத்திற்கு விவசாயிகள், பொதுமக்களிடம் பெரும் வரவேற்பு இருந்தது. விவசாயிகளுக்கு வியாபாரிகளிடம் விற்பதைவிட, 15 சதவீதத்திற்கு மேல் கூடுதல் விலை கிடைத்தது. பொதுமக்களுக்கும் 20 சதவீதம் அளவிற்கு குறைந்த விலையில் காய்கறிகளை வாங்க முடிந்தது. இந்த திட்டத்தில் தற்போது தொய்வு ஏற்பட்டுள்ளது. பஸ்களில் விவசாயிகள் விளைபொருட்களை இலவசமாக கொண்டு வரும்முறை இப்போது இல்லை. இந்தநிலையில் ஒருங்கிணைந்த உழவர் விற்பனை வளாகங்களைப்போல உழவர் சந்தைகளுக்கும் முக்கியத்துவம் கொடுத்து சீர்திருத்தங்களை செய்தால் விவசாயிகளுக்கும், பொதுமக்களுக்கும் பெரும்பலன் கிடைக்கும்.

Next Story