மாமனிதருக்கு மணிமண்டபம்


மாமனிதருக்கு மணிமண்டபம்
x
தினத்தந்தி 21 Feb 2020 10:30 PM GMT (Updated: 21 Feb 2020 4:15 PM GMT)

‘‘இருந்தாலும், மறைந்தாலும் பேர் சொல்ல வேண்டும், இவர்போல யார் என்று ஊர் சொல்ல வேண்டும்’’ என்று கவிஞர் வாலி எழுதிய பாடலுக்கு இலக்கணமாக வாழ்ந்து மறைந்தவர் பத்மஸ்ரீ டாக்டர் பா.சிவந்தி ஆதித்தனார்.

‘‘இருந்தாலும், மறைந்தாலும் பேர் சொல்ல வேண்டும், இவர்போல யார் என்று ஊர் சொல்ல வேண்டும்’’ என்று கவிஞர் வாலி எழுதிய பாடலுக்கு இலக்கணமாக வாழ்ந்து மறைந்தவர் பத்மஸ்ரீ டாக்டர் பா.சிவந்தி ஆதித்தனார். தமிழ்நாடு முழுவதிலும் மூலை முடுக்குகளில்கூட, அவர் பெயர் சிறந்து விளங்குகிறது. ‘தினத்தந்தி’ குழும பத்திரிகைகளின் அதிபராக பத்திரிகை பணியில் மட்டுமல்லாமல், கல்வி, ஆன்மிகம், விளையாட்டு, சமுதாயப் பணி என அவர் ஒளிவிடும் நட்சத்திரமாக பிரகாசித்து வந்தார். பத்திரிகைகளின் பிதாமகனாக விளங்கி ‘தினத்தந்தி’ சாம்ராஜ்யத்தை விதைத்த அமரர் சி.பா.ஆதித்தனாரின் நேரடி பயிற்சியில் ஒரு பத்திரிகை வெளியாவதற்கு அடிப்படையாக உள்ள அனைத்து பிரிவுகளிலும் பணியாற்றி பயிற்சி பெற்றவர் அவர். 

சென்னைக்கு வெளியே ஒரு மாலை பத்திரிகை பிரசுரிக்க முடியுமா? என்று எல்லோரும் ஐயப்பட்டுக்கொண்டிருந்த நேரத்தில், துணிச்சலாக ‘நெல்லை மாலைமுரசு’ என்ற மாலை பத்திரிகையை தொடங்கி தன் முத்திரையை பதித்தவர். அவரது சீரிய நிர்வாகத்தில் ‘தினத்தந்தி’ ஆல் போல் தழைத்து நிற்கிறது. ராணி, ராணிமுத்து, மாலைமலர், தந்தி டி.வி., ஹலோ எப்.எம். என்று பல முத்துகள் அவரது மேலான நிர்வாகத்தில் உருவாகின. விளையாட்டு பணி என்று எடுத்துக்கொண்டால், இந்திய ஒலிம்பிக் சங்க தலைவராகவும், ஆசிய அளவிலும் பல அமைப்புகளில் நிர்வாகியாகவும் செயல்பட்டவர். இன்று ஆசிய விளையாட்டு போட்டியில், தமிழர்களின் வீர விளையாட்டான கபடியை சேர்க்க முழுக்காரணமாக இருந்தவர் அவர்தான். அவரது பங்களிப்பு இந்திய விளையாட்டுத்துறையை தலைநிமிர வைத்தது. ஆன்மிகப் பணியை எடுத்துக்கொண்டால், எத்தனையோ கோவில்களை இறை புனரமைத்து இருக்கிறார். இந்து கோவில்களுக்கு மட்டுமல்லாமல், கிறிஸ்தவ தேவாலயங்கள், இஸ்லாமிய வழிபாட்டு தலங்களுக்கும் உதவி செய்து இருக்கிறார். எல்லாவற்றும் முத்தாய்ப்பாக தென்காசியில் காசி விசுவநாதர் கோவிலில் 178 அடி உயரமுள்ள 9 நிலைகளுடன் ராஜகோபுரம் கட்டியதுதான். 

கல்விப்பணியை எடுத்துக்கொண்டால், அவர் வலது கை கொடுத்தது, இடது கைக்கு தெரியாத அளவில், எத்தனையோ பள்ளிக்கூடங்களுக்கும், கல்லூரிகளுக்கும் உதவி செய்தது மட்டுமல்லாமல், படிக்க வசதி இல்லாத பல்வேறு ஏழை–எளிய மாணவர்களுக்கும் உதவி செய்து இருக்கிறார். திருச்செந்தூரில் தன் தந்தை பெயரிலும், தாயார் பெயரிலும், தன் பெயரிலும் பல கல்லூரிகளை தொடங்கி நடத்தி வந்தார். இவ்வாறு அவர் தொட்டதெல்லாம் துலங்கி புகழ் வீசும் வரலாற்றுக்கு சொந்தக்காரர். இவ்வாறு புகழின் உச்சியில் இருந்த பா.சிவந்தி ஆதித்தனார் கடந்த 19–4–2013–ல் இவ்வுலகை விட்டு மறைந்தார். அவருக்கு திருச்செந்தூரில் அரசு சார்பில் ஒரு மணிமண்டபம் கட்டப்படும் என்று தூத்துக்குடியில் நடந்த எம்.ஜி.ஆர். நூற்றாண்டு விழாவில் அறிவித்த முதல்–அமைச்சர் எடப்பாடி பழனிசாமி, அதற்காக 1 கோடியே 34 லட்சத்து 28 ஆயிரம் ரூபாய் நிதியையும் ஒதுக்கினார். டாக்டர் பா.சிவந்தி ஆதித்தனார் தொடங்கிய, நடத்திய கல்லூரிகளுக்கு அருகிலேயே 60 சென்ட் இடத்தில் அரசு சார்பில் அவரது வெண்கல சிலையோடு, பூங்கா, நூலகத்தோடு அமைக்கப் பட்டு, அவரது மணி மண்டபம் எழில் வாய்ந்ததாக கட்டப்பட் டுள்ளது. இன்று அந்த மணிமண்டபத்திற்கு நேரடியாக வந்து முதல்–அமைச்சர் எடப்பாடி பழனிசாமி திறந்துவைக்கிறார். துணை முதல்–அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் தலைமை தாங்குகிறார். கடம்பூர் ராஜூ, கே.பாண்டியராஜன் உள்பட பல அமைச்சர்கள் கலந்துகொள்கிறார்கள். சமுதாயத்திற்கு மகத்தான பணிகளை செய்த ஒரு மாமனிதருக்கு கட்டப் பட்டுள்ள இந்த மணிமண்டபம் நிச்சயமாக காலமெல்லாம் அவரது புகழ் பாடும். அவரது சாதனைகள் அந்த மணிமண்ட பத்தில் கல்வெட்டுகளாக பொறிக்கப்பட்டுள்ளன. எதிர்கால சந்ததியினர் இதை படிக்கும்போதெல்லாம் அவரைப்பற்றி முழுமையாக தெரிந்து கொள்ளலாம். பா.சிவந்தி ஆதித்தனாரின் புகழுக்கு மகுடமாக இந்த மணிமண்டபத்தை அமைத்த தமிழக அரசுக்கு என்றென்றும் தமிழ்கூர் நல்லுலகம் நன்றி கூறும். 

Next Story