தங்க முட்டையிடும் வாத்தா எல்.ஐ.சி. நிறுவனம்?


தங்க முட்டையிடும் வாத்தா எல்.ஐ.சி. நிறுவனம்?
x
தினத்தந்தி 23 Feb 2020 10:30 PM GMT (Updated: 2020-02-23T21:45:57+05:30)

பொதுமக்கள் தங்களுக்காகவும், தங்கள் குடும்பத்திற்காகவும் அதிகம் நம்பியிருப்பது எல்.ஐ.சி. நிறுவனத்தைத்தான்.

டந்த 1–ந்தேதி நாடாளுமன்றத்தில் 2020–21–ம் ஆண்டுக்கான பட்ஜெட்டை தாக்கல் செய்யும்போது மத்திய நிதி மந்திரி நிர்மலா சீதாராமன், எல்.ஐ.சி. நிறுவனத்தில் அரசுக்குரிய பங்குகளில் ஒருபகுதியை பொதுபங்கீட்டின் மூலம் விற்க அரசு தற்போது முடிவு செய்துள்ளது என்று ஒரு வரியில் கூறினார். அது இப்போது நாடு முழுவதும் பெரிய விவாதங்களை கிளப்பியுள்ளது. பொதுவாக, நஷ்டத்தில் இயங்கும் பொதுத்துறை நிறுவனங்களில்தான் அரசு தன் பங்குகளை விற்கும். ஆனால், இப்போது நல்ல லாபத்தில் இயங்கிவரும் ஆயுள் காப்பீட்டு நிறுவனம் என்று அழைக்கப்படும் எல்.ஐ.சி. நிறுவனத்தில் 100 சதவீதம் அரசின் பங்குகள்தான் இருக்கின்றன. அதில், 10 சதவீத பங்குகளை விற்க அரசு முடிவு செய்துள்ளது. எல்.ஐ.சி. நிறுவனம் 1956–ம் ஆண்டு செப்டம்பர் 1–ந்தேதி தொடங்கப்பட்டது. எத்தனையோ தனியார் இன்சூரன்ஸ் நிறுவனங்கள் இருந்தாலும், பொதுமக்கள் தங்களுக்காகவும், தங்கள் குடும்பத்திற்காகவும் அதிகம் நம்பியிருப்பது எல்.ஐ.சி. நிறுவனத்தைத்தான். 

தற்போது எல்.ஐ.சி. நிறுவனத்தில் ஏறத்தாழ 40 கோடி பாலிசிகள் உள்ளன. 11 லட்சத்து 48 ஆயிரத்து 811 ஏஜெண்டுகள் உள்ளனர். ஊழியர்களின் கணக்கை எடுத்துக்கொண்டால், 2 லட்சத்து 85 ஆயிரம் பேர் இருக்கிறார்கள். நாட்டில் எல்.ஐ.சி. பாலிசிகளை கணக்கிட்டால் 76 சதவீத பாலிசிகள் எல்.ஐ.சி.யிடம்தான் இருக்கின்றன. முதல் ஆண்டு பிரிமியத்தொகையை கணக்கிட்டால் 71 சதவீதம் எல்.ஐ.சி.யில்தான் கட்டப்படுகிறது. மத்திய அரசு இந்த ஆண்டு 3.8 சதவீத நிதிபற்றாக்குறையை சமாளிக்கவேண்டிய கட்டாயத்தில் இருக்கிறது. வரும் ஆண்டில் ரூ.7.96 லட்சம் கோடி நிதிபற்றாக்குறை இருக்கும் என்று மதிப்பிடப்பட்ட நிலையில், இதை சமாளித்து அரசின் செலவுகளை ஈடுகட்டுவதற்கு பொதுத்துறை நிறுவனங்களில் உள்ள அரசின் பங்குகளை விற்று நிதித்திரட்ட மத்திய அரசு முடிவு செய்துள்ளது. 2019–20–ல் பொதுத்துறைகளில் உள்ள ரூ.1 லட்சத்து 50 ஆயிரம் கோடி மதிப்பிலான அரசின் பங்குகளை விற்க முடிவு செய்துள்ளது. ஆனால், இதுவரை ரூ.18 ஆயிரம் கோடி அளவிற்குத்தான் பங்குகள் விற்கப்பட்டுள்ளன. என்றாலும், மார்ச் மாதத்திற்குள் ரூ.65 ஆயிரம் கோடி மதிப்பிலான பங்குகளை விற்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. 2020–21–ல் ரூ.2 லட்சத்து 10 ஆயிரம் கோடி மதிப்பிலான பொதுத்துறை நிறுவன அரசின் பங்குகளை விற்க முடிவு செய்யப்பட்டுள்ளது. எல்.ஐ.சி. நிறுவனத்தின் சொத்து மதிப்பு தற்போது ரூ.36 லட்சம் கோடியாகும்.

இந்த நிலையில், பொதுத்துறை வங்கிகள், நிதி நிறுவனங்களில் உள்ள அரசின் பங்குகளை விற்று, ரூ.90 ஆயிரம் கோடி நிதித்திரட்ட முடிவு செய்யப்பட்டுள்ளது. எல்.ஐ.சி. நிறுவனம் அரசின் ரூ.5 கோடி முதலீட்டில் தொடங்கப்பட்டது. கடந்த ஆண்டு மட்டும் ரூ.2,611 கோடியை லாப பங்குத்தொகையாக அரசுக்கு வழங்கியது. இப்படி அரசுக்கு அதிக வருவாயையும், பொதுமக்களுக்கு மிகச்சிறந்த சேவையையும் செய்யும் எல்.ஐ.சி. நிறுவனத்தின் பங்குகளை விற்பது, தங்க முட்டையிடும் வாத்தை கொல்வதுபோல் ஆகும் என்று ஊழியர்கள் தரப்பில் கூறப்படுகிறது. ஆனால், வாத்தை கொல்லவில்லை, முட்டையைத்தான் எடுக்கிறோம். அதாவது மொத்த பங்குகளையும் விற்கவில்லை. 10 சதவீத பங்குகளைத்தான் விற்க முடிவு எடுக்கப்பட்டுள்ளது. இதன்மூலம் பொதுமக்களும் பங்குகளை வாங்கலாம். இதை தனியார் நிறுவனத்திற்கு முழுமையாக கொடுத்துவிடப்போவதில்லை. பொதுமக்கள் பங்குகளை வாங்குவதன்மூலம் இந்த நிறுவன செயல்பாடுகளில் ஒரு வெளிப்படைத்தன்மை இருக்கும். பதில் சொல்லவேண்டிய கட்டாயம் நிறுவனத்திற்கு இருக்கும் என்று பதில் கருத்து தெரிவிக்கப்படுகிறது. ஏர் இந்தியா, பி.எஸ்.என்.எல். நிறுவன பங்குகளை விற்கும்போதும் இதுபோல முழுவதுமாக தனியாருக்கு கொடுக்காமல் பொதுமக்களுக்கு பங்குகளை விற்பது நல்லது.  எல்.ஐ.சி. பங்குகளை விற்கும்போது பாலிசிதாரர்களுக்கும், ஏஜெண்டுகளுக்கும், எல்.ஐ.சி. ஊழியர்களுக்கும் சற்று வரிச்சலுகையோடு முன்னுரிமை கொடுக்க வேண்டும் என்ற கோரிக்கையையும் அரசு பரிசீலிக்க வேண்டும்.

Next Story