பெண் குழந்தைகள் பாதுகாப்பு நாள்


பெண் குழந்தைகள் பாதுகாப்பு நாள்
x
தினத்தந்தி 24 Feb 2020 11:00 PM GMT (Updated: 2020-02-24T20:59:06+05:30)

பொதுவாக மறைந்த தலைவர்களின் பிறந்த நாட்களை அவர்களது நினைவைப்போற்றும் வகையிலும், அவர்கள் நாட்டுக்கு ஆற்றிய பங்கை நினைவுகூரும் வகையிலும், சீரும் சிறப்புமாக கொண்டாடப்படுவது வழக்கம். பல விழாக்கள் அரசு விழாக்களாக கொண்டாடப்படுகின்றன.

பல விழாக்கள் கட்சி சார்பிலும் கொண்டாடப்படுகின்றன. அந்த வகையில், மறைந்த முதல்–அமைச்சர் ஜெயலலிதாவின் 72–வது பிறந்தநாள் அரசு சார்பிலும், அ.தி.மு.க. கட்சியின் சார்பிலும் நேற்று கொண்டாடப்பட்டது. ஏற்கனவே கடந்த 19–ந்தேதி சட்டசபையில் 110–வது விதியின்கீழ் முதல்–அமைச்சர் எடப்பாடி பழனிசாமி, ஜெயலலிதாவின் பிறந்தநாளான பிப்ரவரி 24–ந்தேதியை மாநில பெண் குழந்தைகள் பாதுகாப்பு நாளாக அனுசரிக்க அரசு முடிவு செய்துள்ளது என்று அறிவித்தார். 

பெண் குழந்தைகளின் பாதுகாப்பு என்பது இன்றைய காலக்கட்டத்தில் முக்கியத்துவம் கொடுக்கவேண்டிய அம்சமாகும். அந்தவகையில், ஜெயலலிதா நினைவை போற்றும் வகையில் ஆதரவற்ற பெண் குழந்தைகளின் நல்வாழ்வுக்காக 5 திட்டங்களை அறிவித்த எடப்பாடி பழனிசாமி, அந்த திட்டங்களை நேற்று தொடங்கி வைத்தார். 

அரசு இல்லங்களில் வாழும் பெற்றோர், பாதுகாவலர்கள் இல்லாத குழந்தைகள் 21 வயதை நிறைவு செய்யும்போது அவர்களுக்கு தலா ரூ.2 லட்சம் வீதம் அவர்களது வங்கிக்கணக்கில் செலுத்தப்படும் என்று அறிவித்த அறிவிப்பு ஆதரவற்ற பெண் குழந்தைகளுக்கு நிச்சயமாக வாழ்க்கையில் பெரிய உதவியாக இருக்கும். 

ஏற்கனவே தாலிக்கு தங்கம் திட்டம், திருமண உதவித்திட்டம் போன்ற பல உதவித்திட்டங்கள் அவர்களது திருமணத்துக்கு உதவியாக இருக்கும் நிலையில், இந்த ரூ.2 லட்சம் வழங்கும் திட்டம் அவர்களின் வாழ்க்கைக்கு பெரிய உதவியாக இருக்கும். 

இதுபோல, இந்த குழந்தைகள் அரசு குழந்தைகள் இல்லத்தில் இருந்து 18 வயது முடிந்தபிறகு வெளியே சென்ற பின்னர் அவர்களின் பாதுகாப்பு மற்றும் பொருளாதார நிலைக்கு பாதிப்பு ஏற்படுமே ஆனால் அரசு, தாய்–தந்தை நிலையில் இருந்து அவர்களின் சமூக பொருளாதார பாதுகாப்புக்கு உதவி செய்ய ஒரு சிறப்பு உதவித்தொகை வழங்கும். 

இந்த உதவி தொகுப்பு மேற்கல்வி பயில்தல், திறன்மேம்பாடு பயிற்சி, வேலைவாய்ப்பு, சுயதொழில் செய்தல் போன்றவை அடங்கும். அந்த பெண்களுக்கு 50 வயது நிறைவடையும்வரை இந்த உதவி வழங்கப்படும் என்று ஆதரவற்ற பெண் குழந்தைகளுக்கு அரணாக விளங்கும் திட்டங்களை முதல்–அமைச்சர் அறிவித்தார். இதுமட்டுமல்லாமல், ஆதரவற்ற மற்றும் முற்றிலும் கைவிடப்பட்ட சிறுகுழந்தைகளை வளர்க்க உதவும் வகையில், வளர்ப்பு பெற்றோருக்கு 3 ஆண்டுகளுக்கு மாதம் ரூ.2 ஆயிரம் வழங்கப்படுவது இனி ரூ.4 ஆயிரமாக உயர்த்தி, 5 ஆண்டுகளுக்கு வழங்கப்படும் என்று அறிவித்தது, மிகவும் வரவேற்கத்தக்கதாகும். 

தாய்–தந்தை பராமரிப்பு இல்லாமல் ஆதரவற்ற குழந்தைகளை வளர்க்கும் இந்த திட்டங்கள் ஜெயலலிதாவுக்கு பெருமை சேர்க்கும். வெறுமனே பிறந்தநாளை கொண்டாடினோம், அவர்களது படங்கள், சிலைகளுக்கு மாலை அணிவித்தோம் என்று இல்லாமல், அவர்கள் பெயரைச் சொல்லி ஆதரவற்றவர்களுக்கு வழங்கும் இந்த உதவி இன்னும் விஸ்தரிக்கப்படவேண்டும். 

இதுபோல, ஜெயலலிதா தனது 64–வது பிறந்தநாளுக்கு 64 லட்சம் மரக்கன்றுகள் நடும் திட்டத்தை தொடங்கி வைத்தார். அன்று முதல் ஒவ்வொரு ஆண்டும் அவர் பிறந்த நாளன்று அவரது வயதை குறிக்கும் வகையிலான லட்சக்கணக்கான மரக்கன்றுகள் நடப்பட்டு வருகின்றன. 

இந்த ஆண்டு 72–வது பிறந்த நாளையொட்டி, 72 லட்சம் மரக்கன்றுகள் நடும் திட்டத்தையும் முதல்–அமைச்சர் தொடங்கி வைத்தார். இந்த மரக்கன்றுகளை நடும் பணி நேற்று முதல் தொடங்கப்பட்டு டிசம்பர் மாதத்துக்குள் முடிக்கப்படும். ஒரு பக்கம் பெண் குழந்தைகள் பாதுகாப்பையும் உறுதிசெய்து, மறுபக்கம் மரங்கள் நடும் திட்டத்தையும் செயல்படுத்துவது மிகவும் நல்லது. 

ஆனால், இந்த திட்டங்கள் முறையாக செயல்படுத்தப்பட்டு, பராமரிக்கப்படுவதில்தான் வெற்றியே இருக்கிறது. மரக்கன்றுகள் நடுவது பெரிதல்ல. அவற்றையெல்லாம் மரங்களாக வளரச்செய்வதுதான் இந்த திட்டத்தின் முழு வெற்றியே இருக்கிறது.

Next Story