அமைச்சரவையின் பாராட்டத்தக்க முடிவு


அமைச்சரவையின் பாராட்டத்தக்க முடிவு
x
தினத்தந்தி 25 Feb 2020 10:30 PM GMT (Updated: 2020-02-25T21:51:26+05:30)

அமைச்சரவை கூட்டத்தில் 5–ம் வகுப்பு, 8–ம் வகுப்பு மாணவர்களுக்கு அறிவிக்கப்பட்ட பொதுத்தேர்வு ரத்து செய்யப்பட்டு, பழைய நடைமுறையே தொடரும் என்று முடிவு எடுக்கப்பட்டது.

டந்த பல மாதங்களாக தமிழ்நாடு முழுவதும் பொதுமக்கள் மற்றும் மாணவர்களிடையே பெரிய சர்ச்சையையும், எதிர்ப்பையும் கிளப்பி வந்த ஒரு பிரச்சினைக்கு முதல்–அமைச்சர் எடப்பாடி பழனிசாமி தலைமையிலான அமைச்சரவை கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவு பெரிய நிம்மதி பெருமூச்சை மக்களுக்கு ஏற்படுத்தியது மட்டுமல்லாமல், அமைச்சரவைக்கு ஒரு பாராட்டையும் பெற்றுத்தந்துள்ளது. நாட்டில் கல்வி கற்காதவர்கள் யாருமே இல்லை என்றநிலையை உருவாக்க வேண்டும் என்ற சீரிய நோக்கில், 2009–ம் ஆண்டு கல்வி உரிமை சட்டம் நிறைவேற்றப்பட்டது. இதன் அடிப்படையில் 1–ம் வகுப்பு முதல் 8–ம் வகுப்பு வரையில் படிக்கும் மாணவர்களுக்கு தேர்வுகள் நடத்தலாம். ஆனால் தேர்வில் வெற்றி பெறவில்லை என்பதற்காக யாரையும் பெயிலாக்கக்கூடாது என்று அந்த சட்டத்தில் தெளிவாக கூறப்பட்டிருந்தது. எப்போதுமே எந்தவொரு சட்டத்திற்கும் ஆதரவும் இருக்கும், எதிர்ப்புகளும் இருக்கும் என்றவகையில், தேர்வில் தோற்ற மாணவர்களை பெயிலாக்கக்கூடாது என்றால், தேர்வு நடத்துவதன் நோக்கம் என்ன? யாரும் பெயிலாகமாட்டார்கள் என்றால், மாணவர்களுக்கு படிப்பில் அக்கறை குறைந்துவிடும். ஆசிரியர்களுக்கும் கற்பித்தலில் அக்கறை இருக்காது என்றெல்லாம் கூறப்பட்டது. 

இந்தநிலையில், 2017–ம் ஆண்டு அக்டோபர் 2–ந்தேதி நடந்த மத்திய அமைச்சரவை கூட்டத்தில், 8–ம் வகுப்பு வரை எந்த மாணவரும் பெயிலாகாமல், கட்டாய தேர்ச்சி அளிக்க வேண்டும் என்றமுறையை ரத்து செய்ய தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. அதன்பிறகு கல்வி உரிமை சட்டத்தில் ஒரு திருத்தம் கொண்டு வரப்பட்டு, 5–ம் வகுப்பு, 8–ம் வகுப்பு மாணவர்களுக்கு பொதுத்தேர்வு நடத்த மாற்றங்கள் கொண்டு வரப்பட்டன. இதையொட்டி, மத்திய அரசாங்கம் இந்த ஆண்டு முதல், 5–ம் வகுப்பு, 8–ம் வகுப்பு மாணவர்களுக்கு பொதுத்தேர்வு நடத்த வேண்டும். பொதுத்தேர்வில் தோல்வி அடைந்தால், அடுத்த 2 மாதங்களில் மீண்டும் தேர்வு நடத்த வேண்டும். அதிலும் தோல்வி அடைந்தால் மீண்டும் அதே வகுப்பில்தான் படிக்க வேண்டும் என்று அறிவித்தது. ஆனாலும் மாநில அரசுகள் இதற்கான நடைமுறையை அவர்களே முடிவு செய்து கொள்ளலாம் என்றும் அறிவித்து இருந்தது. தமிழ்நாட்டிலும் முதலில் 5–ம் வகுப்பு 8–ம் வகுப்புகளுக்கு பொதுத்தேர்வு கிடையாது என்று அறிவித்துவிட்டு, சில மாதங்களில் செப்டம்பர் 13–ந்தேதி பொதுத்தேர்வு நடத்த அரசு உத்தரவு பிறப்பித்தது. அதைத்தொடர்ந்து கால அட்டவணை வெளியிட்டு, அருகில் உள்ள பொதுத்தேர்வு மையங்களில்தான் தேர்வு எழுத வேண்டும் என்றுகூறி அதையும் திரும்ப பெற்று, இப்படி குழப்பத்திற்கு மேல் குழப்பமாக மாறி மாறி அறிவிப்புகளை வெளியிட்டது. இந்த பொதுத்தேர்வுகள் 5–ம் வகுப்பு, 8–ம் வகுப்புகளுக்கு தேவையில்லை. இளம்பிஞ்சுகளை அது மிரள வைத்துவிடும். யாரையும் பெயிலாக்கமாட்டோம் என்று அரசு சொன்னாலும், இது தேவையில்லாத பொதுத்தேர்வு என்றவகையில் பொதுமக்களிடையே பெரிய எதிர்ப்பு கிளம்பியது. 

இந்தநிலையில், சமீபத்தில் முதல்–அமைச்சர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் நடந்த அமைச்சரவை கூட்டத்தில் 5–ம் வகுப்பு, 8–ம் வகுப்பு மாணவர்களுக்கு அறிவிக்கப்பட்ட பொதுத்தேர்வு ரத்து செய்யப்பட்டு, பழைய நடைமுறையே தொடரும் என்று முடிவு எடுக்கப்பட்டது. இது எல்லோராலும் வரவேற்கப்பட்டுள்ளது. இந்த ஆண்டு மட்டுமல்லாமல், எந்த ஆண்டும் 5–ம் வகுப்பு, 8–ம் வகுப்புகளுக்கு பொதுத்தேர்வு கிடையாது என்பதில் உறுதியாக இருக்கவேண்டும். மேலும் எந்தவொரு முடிவையும் எடுக்கும்முன்பு அதன் சாதக–பாதகங்களை நன்றாக அலசி ஆராய்ந்தே கல்வித்துறை எடுக்க வேண்டும் என்பதற்கு இதுவொரு எடுத்துக்காட்டு. கல்வி வளர்ச்சிக்கு தடையான எந்த முடிவையும் பரிசீலனைக்கே எடுத்துக்கொள்ளக்கூடாது. மத்திய அரசாங்கம் இதுபோன்ற ஏதாவது ஒரு முடிவை எடுத்தாலும், தமிழ்நாட்டு சூழ்நிலைக்கு அது பொருந்தவில்லை என்றால், முதலிலேயே அதற்குரிய எதிர்ப்புகளை தெரிவித்து, எங்கள் மாநிலத்தில் இதை நிறைவேற்ற முடியாது என்பதை எடுத்துக்கூறி, விலக்கு பெற்றுவிட வேண்டும்.

Next Story