வலுவடைந்த இந்தியா – அமெரிக்கா நட்புறவு


வலுவடைந்த இந்தியா – அமெரிக்கா நட்புறவு
x
தினத்தந்தி 26 Feb 2020 10:30 PM GMT (Updated: 26 Feb 2020 4:18 PM GMT)

உலகிலேயே மிகப்பெரிய வல்லரசு நாடான அமெரிக்காவின் ஜனாதிபதி டிரம்பும், இந்தியாவின் பிரதமர் நரேந்திரமோடியும் சந்தித்து பேசிய பேச்சை உலகமே உற்றுநோக்கியது.

லகிலேயே மிகப்பெரிய வல்லரசு நாடான அமெரிக்காவின் ஜனாதிபதி டிரம்பும், உலகிலேயே பழமையான மிகப்பெரிய ஜனநாயக நாடான இந்தியாவின் பிரதமர் நரேந்திரமோடியும் சந்தித்து பேசிய பேச்சை உலகமே உற்றுநோக்கியது. டிரம்ப் இந்தியாவுக்கு வருவது இதுதான் முதல்முறை. இந்த ஆண்டு கடைசியில் தேர்தலை சந்திக்க இருக்கிற அமெரிக்க ஜனாதிபதி, தன் மனைவி மெலனியா, மகள் இவான்கா, மருமகன் ஜாரெட் குஷ்னர் ஆகியோரோடு இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டார். இந்தியாவில் அவர் தங்கியிருந்தது 36 மணி நேரமேயானாலும், இதையொரு சூறாவளி சுற்றுப்பயணமாக மேற்கொண்டார். முதல்நாள் அவர் ஆமதாபாத்தில் வந்து இறங்கினார். விமான நிலையத்தில் அவரை மோடி வரவேற்கும்போதே, அவர்களது நட்பின் இறுக்கம், அவர்கள் இருவரும் ஒருவரையொருவர் பலமுறை கட்டித்தழுவியதில் இருந்தே வெளிப்படையாக தெரிந்தது. அங்கிருந்து காந்தி வாழ்ந்த சபர்மதி ஆசிரமத்துக்கு சென்ற டிரம்ப், பார்வையாளர்கள் புத்தகத்தில், ‘‘என் சிறந்த நண்பர் மோடிக்கு நன்றி’’ என்று எழுதி, தன் நட்பை வெளிக்காட்டினார். அங்கிருந்து, உலகிலேயே மிகப்பெரிய கிரிக்கெட் ஸ்டேடியமான, மோதிரா ஸ்டேடியத்தில் நடந்த ‘நமஸ்தே டிரம்ப்’ என்ற 1½ லட்சத்துக்கும் மேலான மக்கள் கலந்துகொண்ட நிகழ்ச்சியில் பேசினார். அப்போது, மொத்தம் 30 நிமிடங்கள் பேசியதில், 15 நிமிடங்கள் மோடியை புகழ்ந்தே பேசினார். அமெரிக்க தேர்தலை மனதில்வைத்து, அமெரிக்காவில் 40 லட்சம் இந்தியர்கள் வாழ்வதை கருத்தில்கொண்டு, அவர்களையும் புகழ்ந்து தள்ளினார். 

மோடியும், ‘‘உலகின் மிகப்பெரிய ஜனநாயக நாடு உங்களை மகிழ்ந்து வரவேற்கிறது’’ என்று உணர்ச்சிப்பொங்க பேசினார். அன்றே தாஜ்மகாலை பார்வையிட்ட டிரம்ப், அதன் எழிலைக்கண்டு நெகிழ்ந்தார். ‘‘ஏராளமான அமெரிக்கர்கள் இனி தாஜ்மகாலுக்கு சுற்றுலா வருவார்கள்’’ என்று குறிப்பிட்டார். 2–வது நாள் டெல்லியில் காந்தி சமாதிக்கு சென்று மரியாதை செலுத்திவிட்டு, டிரம்பும், பிரதமர் மோடியும் அதிகாரப்பூர்வமான பேச்சுவார்த்தையை நடத்தினர். ஒரு மணி நேரத்துக்கும் அதிகமாக நடந்த இந்த பேச்சுவார்த்தையில், இரு நாட்டின் நட்பையும், கூட்டுறவையும் வலுப்படுத்தும் வகையில் பல ஒப்பந்தங்கள் கையெழுத்தாகின. ரூ.21 ஆயிரம் கோடி மதிப்பீட்டில் உலகின் மிகச்சிறந்த அமெரிக்க தயாரிப்பான ஹெலிகாப்டர்கள், ராணுவ தளவாடங்கள் இந்தியாவுக்கு வழங்கவும், இரு நாடுகளும் இணைந்து கூட்டு ராணுவ பயிற்சியில் ஈடுபடவும் ஒப்பந்தங்கள் கையெழுத்தாகின. அமெரிக்க சர்வதேச நிதி மேம்பாட்டுக் கழக நிரந்தர அலுவலகம் ஒன்றை இந்தியாவில் அமைக்கவும் முடிவு செய்யப்பட்டது. மனநல ஆரோக்கியம் தொடர்பான ஒரு புரிந்துணர்வு ஒப்பந்தம், மருந்து பொருட்கள் பாதுகாப்பு தொடர்பான புரிந்துணர்வு ஒப்பந்தம், இயற்கை எரிவாயு வழங்குவது தொடர்பான ஒப்பந்தம் என்று சில ஒப்பந்தங்கள் கையெழுத்தாகின. 

பின்பு நடந்த பேட்டியில், குடியுரிமை திருத்த மசோதா குறித்து நாங்கள் எதுவும் பேசவில்லை. அது உள்நாட்டு விவகாரம் என்று கூறியது மிகவும் வரவேற்புக்குரியது. ஆனால், மத சுதந்திரம், காஷ்மீர் பிரச்சினை குறித்து பேசினோம். காஷ்மீர் பிரச்சினையில் இந்தியாவுக்கும், பாகிஸ்தானுக்கும் இடையே மத்தியஸ்தம் செய்யத் தயாராக இருப்பதாகக் கூறியதுதான் ஏற்புடையதாக இல்லை. மோடியை வர்த்தக ஒப்பந்தங்களை மேற்கொள்ளும்போது, ‘‘நல்ல நண்பர், ஆனால் கறார் பேர்வழி’’ என்று சொன்ன டிரம்ப், தான் கறார் பேர்வழி என்பதை நிரூபிக்கும் வகையில், ‘‘இந்தியா அதிகமாக இறக்குமதி வரி விதிக்கிறது. அமெரிக்காவில் அப்படியல்ல. அமெரிக்க பொருட்களுக்கு இந்தியாவில் வரிக்குறைப்பு வேண்டும்’’ என்பதை மறைமுகமாகச் சொல்லி நிரூபித்துவிட்டார். வர்த்தக ரீதியாக மட்டுமல்லாமல், ராஜிய உறவு ரீதியாகவும், இந்தியா–அமெரிக்கா இடையே உள்ள நட்புறவை வலுப்படுத்தும் வகையிலும், டிரம்ப்–மோடி இடையே உள்ள ஆழமான நட்பை வெளிப்படுத்தும் வகையிலும், டிரம்பின் 36 மணி நேர சுற்றுப்பயணம் அமைந்தது என்பதில் மாற்றுக்கருத்து இருக்க முடியாது.

Next Story