துள்ளி வருது வேலைவாய்ப்புகள்


துள்ளி வருது வேலைவாய்ப்புகள்
x
தினத்தந்தி 27 Feb 2020 10:30 PM GMT (Updated: 2020-02-27T21:43:19+05:30)

ஒரு நாட்டின் வளர்ச்சிக்கு வேலைவாய்ப்புகள் அளிப்பது மிக முக்கியமான விதையாக கருதப்படுகிறது.

ரு நாட்டின் வளர்ச்சிக்கு வேலைவாய்ப்புகள் அளிப்பது மிக முக்கியமான விதையாக கருதப்படுகிறது. பிரதமர் நரேந்திரமோடி கூட 2014–ம் ஆண்டு ஆட்சிக்கு வரும் முன்பே, 2013–ம் ஆண்டு நவம்பர் மாதம் ஆக்ராவில் நடந்த ஒரு பொதுக்கூட்டத்தில் பா.ஜ.க. ஆட்சிக்கு வந்தால், ஒரு கோடி இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு அளிக்கப்படும் என்று உறுதி அளித்தார். 35 வயதுக்கு கீழ் உள்ளவர்களே இந்திய மக்கள் தொகையில் 65 சதவீதம் பேர் இருக்கிறார்கள். அவர்கள் இப்போது வேலைவாய்ப்பு இல்லாமல் அல்லல்படுகிறார்கள். நாட்டின் வளர்ச்சிக்கு அவர்கள் பாய்ந்து செல்லும் சக்தியாக உருவெடுக்க முடியும் என்று கூறினார். அதிலிருந்து ஒவ்வொரு பட்ஜெட்டிலும் வேலைவாய்ப்பை மையப்படுத்தி பல திட்டங்கள் அறிவிக்கப்படுகின்றன. 

இந்தநிலையில், இன்றைய காலக்கட்டத்தில் உள்ள இளைஞர்களுக்கு அரசு பணி மீது ஒரு தணியாத ஆசை இருக்கிறது. மத்திய அரசாங்க பணிகளை பொறுத்தமட்டில், மொத்தம் 38 லட்சத்து 2 ஆயிரத்து 779 பணிகள் அனுமதிக்கப்பட்ட பணிகள் ஆகும். இதில் தற்போது 31 லட்சத்து 18 ஆயிரத்து 956 பணி இடங்களில்தான் ஊழியர்கள், அலுவலர்கள் பணிபுரிந்து கொண்டிருக்கிறார்கள். 6 லட்சத்து 83 ஆயிரத்து 823 பணி இடங்கள் பல்வேறு துறைகளில் நிரப்பப்படாமல் காலியாக இருக்கின்றன. தற்போது மத்திய அரசாங்கம் இதில் 3 லட்சத்து 10 ஆயிரத்து 832 பணியிடங்களுக்கு தேர்வு நடத்தி பணியாளர்கள், அதிகாரிகளை நியமிக்க முடிவு எடுத்துள்ளது. மத்திய அரசாங்க பணிகளுக்கு மத்திய அரசு பணியாளர் தேர்வாணையம், ஸ்டாப் செலக்‌ஷன் கமி‌ஷன், ரெயில்வே தேர்வு வாரியம் ஆகிய 3 அமைப்புகளும் சேர்ந்து ஒரு லட்சத்து 34 ஆயிரத்து 785 பணியிடங்களுக்கு தேர்வு நடத்த பரிந்துரை செய்து இருக்கிறது. ரெயில்வே நிர்வாகம் ஒரு லட்சத்துக்கும் மேற்பட்ட பணியிடங்களுக்கு தேர்வு நடத்த திட்டமிட்டு இருக்கிறது. இந்த 3 அமைப்புகளும் தேர்வுகளை நடத்தும்போது, ஆன்–லைன் மூலமாக தேர்வுகளை நடத்துகிறது. கெஜட்டடு பதவிகள் இல்லாத மற்ற பணிகளுக்கு நேர்முகத்தேர்வு கைவிடப்பட்டுள்ளது. கேந்திரிய வித்யாலயா பள்ளிகளில் மட்டும் 5 ஆயிரத்து 949 ஆசிரியர் பணி இடங்கள் காலியாக இருக்கின்றன. இவைகளை எல்லாம் நிரப்ப அரசு ஒருபக்கம் முயற்சிகளை மேற்கொண்டு இருக்கும் நிலையில், மேலும் ஏராளமானவர்கள் ஓய்வு பெற்று காலி இடங்களின் எண்ணிக்கை அதிகரித்துக் கொண்டே போகும். எனவே, இதை ஒரு சுழற்சியானமுறையில், எடுத்துக்கொண்டு, ஒவ்வொரு ஆண்டும் எத்தனை பேர் பதவியில் இருந்து ஓய்வு பெறுகிறார்களோ, அதற்கு இணையான அளவு புதிய பணியாளர்களை தேர்வு செய்யும் பணிகள் முன்பே தொடங்கப்பட்டுவிட வேண்டும். இதுமட்டுமல்லாமல், அரசு பணிகளுக்கான தேர்வு நடக்கும்போது எந்தவித முறைகேடும் இல்லாமல் நேர்மையாக நடப்பதை உறுதி செய்ய வேண்டும். 

தமிழ்நாட்டில் உள்ள பல மத்திய அரசு பணிகளில் வடமாநிலங்களை சேர்ந்தவர்களே ஏராளமானபேர் இடம் பெற்று இருப்பதை பார்த்தால், அங்குள்ள மாநிலங்களில் நடக்கும் தேர்வுமுறை மீது சற்று சந்தேகம் ஏற்படுகிறது. அதை உறுதிப்படுத்தும்வகையில், தபால் அலுவலக அடிப்படை ஊழியர்களுக்கான தேர்வில் வடமாநிலங்களை சேர்ந்த பலர் தமிழர்களைவிட, தமிழ்த்தேர்வில் அதிக மதிப்பெண்களை பெற்று இருக்கிறார்கள். எனவே தற்போது தேர்வு நடத்தப்போகும் 3 லட்சத்து 10 ஆயிரத்து 832 பணி இடங்களுக்கும் எந்தவித முறைகேடும் இல்லாமல் தேர்வு நடத்தவேண்டும் என்பதைத்தான் இன்றைய இளைஞர்கள் எதிர்பார்க்கிறார்கள். தமிழ்நாட்டை சேர்ந்த இளைஞர்கள் இந்த தேர்வுகளுக்கு தங்களை தயார்படுத்தி நிறைய பேர் தேர்ந்தெடுக்கப்பட வேண்டும். இதேபோல தமிழக அரசு பணிகளிலும் காலியாக உள்ள இடங்களுக்கு தேர்வு நடத்தி புதிய பணியாளர்களை தேர்ந்தெடுக்கவேண்டும். முறைகேடுகளுக்கு இடமில்லாமல் தேர்வு நடந்தால், திறமையுள்ளவர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டு அரசு பணிகளில் ஜொலிப்பார்கள்.

Next Story