மாநிலங்களவையின் இடத்தைப் பெற போட்டா போட்டி


மாநிலங்களவையின் இடத்தைப் பெற போட்டா போட்டி
x
தினத்தந்தி 28 Feb 2020 10:30 PM GMT (Updated: 2020-02-28T21:49:47+05:30)

மக்களவை உறுப்பினர்கள் நாடு முழுவதும் உள்ள 543 தொகுதிகளில் இருந்து மக்களால் நேரடியாக தேர்ந்தெடுக்கப்படுகிறார்கள்.

க்களவை, மாநிலங்களவை என்ற இரு அவைகளையும் உள்ளடக்கியதுதான் நாடாளுமன்றம். மக்களவை உறுப்பினர்கள் நாடு முழுவதும் உள்ள 543 தொகுதிகளில் இருந்து மக்களால் நேரடியாக தேர்ந்தெடுக்கப்படுகிறார்கள். மாநிலங்களவைக்கான 245 உறுப்பினர்கள் அனைத்து மாநிலங்களிலும் உள்ள சட்டசபை உறுப்பினர்களால் தேர்ந்தெடுக்கப்படுகிறார்கள். மக்களவை உறுப்பினர்களின் பதவிகாலம் 5 ஆண்டுகள். ஆனால், மாநிலங்களவை உறுப்பினர்களின் பதவிகாலம் 6 ஆண்டுகள். மாநிலங் களவை உறுப்பினர்கள் தேர்தல் 2 ஆண்டுக்கு ஒருமுறை நடந்து, மூன்றில் ஒருபங்கு உறுப்பினர்கள் தேர்ந்தெடுக்கப் படுவார்கள். அந்தவகையில், 17 மாநிலங்களைச் சேர்ந்த 55 மாநிலங்களவை உறுப்பினர்களின் பதவிகாலம் ஏப்ரல் மாதம் முடிவடைகிறது. அவர்களுக்கான தேர்தல் மார்ச் 26–ந்தேதி நடக்கிறது. இதற்கான வேட்புமனு தாக்கல் 6–ந்தேதி தொடங்குகிறது. இதில், மராட்டிய மாநிலத்தில் இருந்து 7 உறுப்பினர்களும், மொத்தம் 18 உறுப்பினர் களைக் கொண்ட தமிழ்நாட்டில் இருந்து 6 உறுப்பினர்களும் தேர்ந்தெடுக்கப்படுகிறார்கள். 

மாநிலங்களவையில் தற்போது பெரும்பான்மை இல்லாத பா.ஜ.க.வுக்கு 82 உறுப்பினர்களும், காங்கிரசுக்கு 46 உறுப்பினர்களும், திரிணாமுல் காங்கிரசுக்கு 13 உறுப்பினர்களும், அ.தி.மு.க.வுக்கு 11 உறுப்பினர்களும், சமாஜ்வாடி கட்சிக்கு 9 உறுப்பினர்களும், பிஜு ஜனதா தள கட்சிக்கு 7 உறுப்பினர்களும், ஐக்கிய ஜனதாதளம், தெலுங்கானா ராஷ்டிரீய சமிதி ஆகிய கட்சிகளுக்கு தலா 6 இடங்களும், தி.மு.க., மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி களுக்கு தலா 5 இடங்களும் இருக்கின்றன. சமீபத்தில் குடியுரிமை திருத்த சட்டத்தைக்கூட அ.தி.மு.க.வின் ஆதரவோடுதான் மாநிலங்களவையில் பா.ஜ.க. அரசாங்கத்தால் நிறைவேற்ற முடிந்தது. தமிழ்நாட்டை எடுத்துக் கொண்டால், அ.தி.மு.க.வைச் சேர்ந்த விஜிலா சத்தியானந்த், எஸ்.முத்துக்கருப்பன், கே.செல்வராஜ், அ.தி.மு.க.வில் இருந்து விலக்கப்பட்ட சசிகலா புஷ்பா, தி.மு.க.வைச் சேர்ந்த திருச்சி சிவா, அ.தி.மு.க. ஆதரவுடன் வெற்றிபெற்ற மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி உறுப்பினர் டிகே.ரெங்கராஜன் ஆகியோரின் பதவிகாலம் முடிவடை கிறது. தமிழ்நாடு உள்பட அனைத்து மாநிலங்களிலும் இந்த இடங்களுக்கு யாரை தேர்ந்தெடுப்பது என்பதில் பெரிய போட்டா போட்டி நடக்கிறது. தமிழ்நாட்டை பொறுத்தளவில், இப்போது சட்ட சபையில் உள்ள கட்சிகளின் பலத்தின்படி அ.தி.மு.க.வுக்கு 3 இடங்கள் கிடைக்க வாய்ப்பு இருக்கிறது. தி.மு.க.வுக்கும் 3 இடங்கள் கிடைக்கும். அவ்வாறு இருகட்சி களும் வெற்றி பெற்ற பிறகு மாநிலங்களவையில் அ.தி.மு.க. வின் பலம் ஒன்று குறைந்து 10 ஆகவும், தி.மு.க.வின் பலம் 2 அதிகரித்து 7 ஆகவும் இருக்கும். அ.தி.மு.க.வில் வெற்றி பெறும் 3 வேட்பாளர்களில் தங்களுக்கும் இடம்வேண்டும் என்று தே.மு.தி.க. கேட்டு வருகிறது. தே.மு.தி.க.வுக்கு இடம் கிடைக்குமா?, கிடைக்காதா? என்பதற்கு பதிலாக முதல்–அமைச்சர் எடப்பாடி பழனிசாமி, கேட்பதற்கு எல்லோ ருக்கும் உரிமை இருக்கிறது. ஆனால், அதை அ.தி.மு.க. தலைமைக்கழகம்தான் முடிவு செய்யவேண்டும். அ.தி.மு.க.வில் பல மூத்த தலைவர்கள் இருக்கிறார்கள். அதையும் நாங்கள் பார்க்கவேண்டும். எல்லாமே தலைமைக் கழக நிர்வாகிகள் கூடி முடிவு செய்வார்கள் என்று கூறியிருக்கிறார். 

மத்தியபிரதேச மாநில காங்கிரசை சேர்ந்த 12 மந்திரிகள், அங்கு 2 காங்கிரஸ் உறுப்பினர்கள் வெற்றிபெற வாய்ப்புள்ள நிலையில், ஒரு இடத்தை பிரியங்கா காந்திக்கு கொடுக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளனர். இப்போதுள்ள கணக்குகளை கூட்டிக்கழித்து பார்த்தால், பா.ஜ.க. தலைமை யிலான தேசிய ஜனநாயக கூட்டணிக்கு இப்போதுள்ள 99 இடங்கள், 95 இடங்களாக குறையவும், 64 இடங்களை வைத்திருக்கும் காங்கிரஸ் கூட்டணி, 67 இடங்களில் வெற்றிபெறவும் வாய்ப்பு இருக்கிறது. ஆனால், இருக்கிற இடத்தை தக்கவைத்துக் கொள்ள பா.ஜ.க.வும் பல முயற்சிகளை செய்து வருகிறது. இப்போது தேர்தலை சந்திக்கும் 17 மாநிலங்களில், 6 மாநிலங்களில் பா.ஜ.க.வும் அதன் கூட்டணி கட்சிகளும், 6 மாநிலங்களில் காங்கிரசும் அதன் கூட்டணி கட்சிகளும் ஆட்சியில் இருக்கின்றன. ஒருபக்கம் கட்சிகளும், மற்றொரு பக்கம் தங்களுக்கு இடம் வேண்டும் என்று கேட்கும் கட்சியினரும் பரபரப்பாக நாடு முழுவதும் இயங்கிக்கொண்டு இருக்கிறார்கள். 

Next Story