உலகம் முழுவதும் பரவும் கொள்ளை நோயா?


உலகம் முழுவதும் பரவும் கொள்ளை நோயா?
x
தினத்தந்தி 2 March 2020 11:00 PM GMT (Updated: 2020-03-02T20:16:20+05:30)

கடந்த டிசம்பர் மாதம் 8–ந்தேதி உலகிலேயே முதல் முறையாக கொரோனா வைரஸ் மூலம் ‘‘கோவிட் 19’’என்ற கொடிய நோய் சீனாவில் உருவாகியது. முதலில் சீனாவில் பரவிய இந்த நோய், அடுத்து ஹாங்காங், ஜப்பான் என்று பரவத்தொடங்கி, இன்று உலகம் முழுவதும் 70 நாடுகளுக்கும் மேல் பரவி, எங்கே உலகம் முழுவதிலும் உள்ள மற்ற நாடுகளையும் தாக்கிவிடுமோ? என்ற அச்சத்தில் உலகமே உறைந்துபோய் நிற்கிறது.

ஆசிய, ஐரோப்பிய மத்திய கிழக்கு நாடுகளில் உள்ள சுற்றுலா தலங்கள் எல்லாம் வெறிச்சோடி கிடக்கின்றன. தற்போது ஆஸ்திரேலியா, தாய்லாந்து நாடுகளில் முதல் உயிரிழப்பு ஏற்பட்டுள்ளது. இத்தாலி நாட்டில் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 24 மணி நேரத்தில் 40 சதவீதம் அதிகரித்துவிட்டது. 15 தமிழ் மாணவர்கள் உள்பட 85 இந்திய மாணவர்கள் வட இத்தாலியில் உள்ள பவியா என்ற பல்கலைக்கழக நகரில் இருந்து இந்தியா திரும்ப முடியாமல் தவித்துக்கொண்டு இருக்கிறார்கள். 

இந்திய சுகாதார அமைச்சகம் வைரஸ் நோய் பாதிப்புக்குள்ளான நாடுகள் குறிப்பாக, சிங்கப்பூர், தென்கொரியா, ஈரான், இத்தாலி போன்ற நாடுகளுக்கு அத்தியாவசியம் இல்லாத பயணங்களை மேற்கொள்ள வேண்டாம் என்று மக்களுக்கு ஆலோசனை வழங்கியுள்ளது.

ஒவ்வொரு நாடாக இதன் தாக்குதலுக்கு உள்ளாகி வருகிறது. காய்ச்சல், சளி, இருமல், மூச்சுவிட சிரமம் போன்ற சாதாரண அறிகுறிகளுடன் தோன்றும் இந்த நோய், சார்ஸ் நோயைவிட வேகமாக பரவக்கூடியது. ஆனால், வேகமாக பரவினாலும் சார்ஸ், எபோலா நோய்களைப்போல, உயிரிழப்புகளை ஏற்படுத்தாது. இது வேகமாக பரவினாலும் தட்டம்மை மற்றும் சின்னம்மை அளவுக்கு அதிவேகமாக பரவக்கூடியது அல்ல. 

ஏனெனில், காற்றின்மூலம் 100 அடி தூரம்வரை அம்மை நோய் பரவும். 11 முதல் 17 பேர்வரை பரவும். ஆனால், கொரோனா வைரஸ் நோயால் பாதிக்கப்பட்டவரில் இருந்து 2 அல்லது 3 பேர்வரையே பரவும். மூச்சுவிடுவதற்கு பாதிப்பை ஏற்படுத்தும் நோய் தொற்று கிருமிகளில் ஒன்றுதான் கொரோனா வைரஸ். உலகம் முழுவதும் ஏறத்தாழ 89 ஆயிரம் பேர் கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டுள்ளனர். 3 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் உயிரிழந்து இருக்கிறார்கள். 

இந்தியாவில் பெரும்பாதிப்பு இல்லை என்றாலும், இத்தாலி, ஐக்கிய அரபு நாடுகளில் சுற்றுப்பயணம் செய்த டெல்லியைச் சேர்ந்த ஒருவரும், தெலுங்கானாவைச் சேர்ந்த ஒருவரும் கொரோனா வைரசால் இப்போது பாதிக்கப்பட்டுள்ளனர். இப்போது 12 நாடுகளில் இருந்து வருபவர்கள் எல்லாம் விமான நிலையங்களில் தீவிர மருத்துவ பரிசோதனைக்கு உட்படுத்தப்படுகிறார்கள். இந்த நோயை உலகம் முழுவதும் பரவக்கூடிய கொள்ளை நோய் என்று அறிவிக்கப்படாவிட்டாலும், அனைத்து நாடுகளும் இதற்குரிய தயார்நிலையில் இருக்கவேண்டும் என்று உலக சுகாதார நிறுவனம் ஆலோசனை வழங்கியது. 

முழுமையாக ஆய்வுகளை மேற்கொள்ளாமல், கொள்ளை நோய் என்று அறிவித்துவிடமாட்டோம். ஆனால், இப்போதுள்ள சூழ்நிலையின் ஆபத்தையோ, இதற்கான இயல்பு கூறுகளையோ நாங்கள் குறைத்து மதிப்பிட விரும்பவில்லை. அதற்கான வாய்ப்புகளும் இருக்கின்றன. இதற்காக தயார்படுத்திக்கொள்ளும் வகையில், உலக சுகாதார நிறுவனம் அனைத்து உதவிகளையும் வழங்குகிறது என்று குறிப்பிட்டுள்ளது. 

இந்த கொரோனா வைரசை குணப்படுத்தும் மருந்தோ, தடுப்பு மருந்துகளோ இன்னும் கண்டுபிடிக்கப்படவில்லை என்ற நிலையை மாற்ற இப்போது நிபுணர்கள் கடும்முயற்சி எடுத்து வருகிறார்கள். 

அமெரிக்காவில் உள்ள ஒரு பயோடெக் நிறுவனம் இதற்கான தீவிர முயற்சியில் ஈடுபட்டு ஓரளவு வெற்றியையும் அடைந்துள்ளது. அடுத்த மாதத்தொடக்கத்தில் மனிதர்களுக்கு பயன்படுத்தி பரிசோதனை நடத்தப்போகிறார்கள். ஆனால், பொதுபயன்பாட்டுக்காக வர சில மாதங்கள் ஆகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதுபோல வேறுசில முயற்சிகளும் நடந்து வருகின்றன. ஆக, கொரோனா வைரசை குணப்படுத்த மருந்துகளை கண்டுபிடிக்கும் முயற்சி வேகமாக நடந்து வருகிறது என்பது ஆறுதலைத் தருகிறது.

Next Story