மோடி வெளியிட்ட சஸ்பென்ஸ்


மோடி வெளியிட்ட சஸ்பென்ஸ்
x
தினத்தந்தி 3 March 2020 10:30 PM GMT (Updated: 2020-03-03T21:43:41+05:30)

தகவல் தொழில்நுட்ப வளர்ச்சி என்ற அழகிய மலர்த் தோட்டத்தில் பூத்த மணமிக்க மலர்கள்தான் டுவிட்டர், பேஸ்–புக், இன்ஸ்டாகிராம் மற்றும் யூ–டியூப்.

கவல் தொழில்நுட்ப வளர்ச்சி என்ற அழகிய மலர்த் தோட்டத்தில் பூத்த மணமிக்க மலர்கள்தான் டுவிட்டர், பேஸ்–புக், இன்ஸ்டாகிராம் மற்றும் யூ–டியூப். இவற்றை அதிகமாக பயன்படுத்தி மக்களோடு நேரடித்தொடர்பில் இருந்த பிரதமர் நரேந்திர மோடி, நேற்று முன்தினம் இரவு 8.56 மணிக்கு டுவிட்டரிலும், தொடர்ந்து 9.30 மணிக்கு பேஸ்–புக்கிலும், அதன்பிறகு 

சில நிமிடங்கள் கழித்து இன்ஸ்டாகிராமிலும் வெளியிட்ட செய்தி நாடு முழுவதும் மட்டுமல்ல, உலகம் முழுவதும் வியப்பை ஏற்படுத்தியது. இந்த ஞாயிற்றுக்கிழமை, நான் பேஸ்–புக், டுவிட்டர், இன்ஸ்டாகிராம், யூ–டியூப் போன்ற சமூக வலைத்தள கணக்குகளை விட்டுவிடலாம் என்று நினைக்கிறேன். உங்கள் அனைவருக்கும் இதுகுறித்து தகவல் தெரிவிக்கிறேன் என்று கூறினார். பிரதமர் நரேந்திர மோடியின் டுவிட்டர் பக்கத்தை 5 கோடியே 33 லட்சம் பேர் பின்தொடர்கிறார்கள். பேஸ்–புக்கை 4 கோடியே 47 லட்சம் பேரும், இன்ஸ்டாகிராமை 3 கோடியே 52 லட்சம் பேரும் பின்தொடர்கிறார்கள். ஆக மொத்தம் அவரது சமூக வலைத்தள பக்கங்களில் மட்டும் 13 கோடியே 32 லட்சம் பேர் பின்தொடர்கிறார்கள். அமெரிக்க ஜனாதிபதி டிரம்பைக்கூட, மோடியைவிட குறைவாக 11 கோடியே 

71 லட்சம் பேர்தான் பின்தொடர்கிறார்கள். மோடியை பொறுத்தமட்டில், அவர் வகுக்கும் எந்த திட்டங்கள் என்றாலும் சரி, அவர் உரையாற்றும் உரையாடல்கள் என்றாலும் சரி, அவர் கலந்துகொள்ளும் நிகழ்ச்சிகள் என்றாலும் சரி, அடுத்த சில நிமிடங்களில் மக்களுக்கு சமூக வலைத்தள பக்கங்களில் தெரிவிப்பது மிகவும் பயனுள்ள நடைமுறையாக இருந்தது. 

பிரதமர் எதற்காக சமூக வலைத்தளங்களை விட்டு வெளியே செல்ல திட்டமிட்டுள்ளார் என்ற விவரம் உடனடியாக முழுமையாக தெரிவிக்கப்படவில்லை. ஆனால் எல்லோருமே அவர் சமூக வலைத்தளத்தை விட்டு விலகக்கூடாது என்றுதான் பதறினார்கள். இந்த செய்தியை அவர் வெளியிட்ட சில நிமிடங்களிலேயே, ‘‘நோ சார், நீங்கள் விலகக்கூடாது’’ என்று ஆயிரக்கணக்கானவர்கள் வெளியிட்ட செய்திதான் டிரெண்டிங் ஆக இருந்தது. ராகுல்காந்திகூட, ‘‘வெறுப்பை விட்டுவிடுங்கள், சமூக வலைத்தள கணக்குகளை அல்ல’’ என்று கூறியுள்ளார். சமூக வலைத்தளங்கள் மக்களை எளிதில் சென்றடைகிற தங்க நாற்கரங்களாக மின்னி வருகின்றன. சரித்திரத்தை வடிவமைக்கும் மோடி போன்ற தலைவர்கள் சமூக வலைத்தள பக்கங்களை பயன்படுத்தும்போது, அவர்கள் தெரிவிக்க விரும்பும் செய்தி பாய்ச்சலாக சென்று பொதுமக்களை அடைகிறது. அதுமட்டுமல்லாமல், நாட்டில் எந்த இடத்தில் எந்த பிரச்சினை நடந்தாலும், அவர்கள் தெரிவிக்கும் பின்னூட்டம், தெளிவுரை போன்றவை அவற்றை முளையிலேயே கிள்ளி எறிய உதவியாக இருக்கின்றன. 

மோடி சமூக வலைத்தளங்களை மிகவும் செம்மையாக பயன்படுத்தி வந்தார். அவர் பதிவிடும் தகவல்களை உலகமே ஆர்வத்துடன் கண்ணுற்று இருந்தது. அதுமட்டு மல்லாமல், பல நேரங்களில் அவரது பதிவுகள் பொதுமக்களின் அச்சத்தை, சந்தேகத்தை, குழப்பத்தை தீர்க்கும் வகையில் அமைந்து இருந்தன. எனவே, அவர் சமூக வலைத்தளங்களை விட்டு விலகியிருக்கக்கூடாது என்ற கருத்து பரவலாக எதிரொலித்தது. ஆனால் நேற்று டுவிட்டரில் இந்த சஸ்பென்சை மோடி போட்டு உடைத்து விட்டார். அவர் குறிப்பிட்ட ஞாயிற்றுக்கிழமை சர்வதேச மகளிர் தினம். இந்த மகளிர் தினத்தில் நான் என் சமூக வலைத்தள கணக்கை தங்கள் வாழ்க்கை, உழைப்பு மூலம் நம்மை ஊக்குவிக்கும் பெண்களிடம் கொடுக்கப் போகிறேன். அந்த வகையிலான பெண்கள் அல்லது அவ்வாறு நம்மை ஊக்குவிக்கும் பெண்கள் பற்றி உங்களுக்கு தெரிந்து இருந்தால், #SheInspiresUs என்ற ஹேஷ்டேக்கில் பகிரலாம் என்றும் பதிவிட்டுள்ளார். யூ–டியூப்பிலும் வீடியோ அனுப்பலாம் என்று தெரிவித்துள்ளார். 16 மணி நேரத்துக்கு மேல் நாட்டையே பரபரப்பாக்கிய அவரது செய்திக்கு அவரே முடிவு கட்டிவிட்டார். எந்தெந்த பெண்கள் எல்லாம் இந்த வகையில் மோடி சமூக வலைத்தளத்தை நிர்வகிக்கப்போகிறார்கள் என்பதுதான் இப்போது பலத்த எதிர்பார்ப்பாக இருக்கிறது. 

Next Story