போராட்டங்களுக்கு என தனி இடம்


போராட்டங்களுக்கு என தனி இடம்
x
தினத்தந்தி 4 March 2020 10:30 PM GMT (Updated: 4 March 2020 4:17 PM GMT)

டெல்லியில் பரபரப்பு மிகுந்த ‌ஷகீன் பாக் என்ற இடத்தில் முஸ்லிம் பெண்கள் கடந்த டிசம்பர் மாதம் 15–ந்தேதி முதல் சாலையில் அமர்ந்து போராட்டத்தை நடத்திவருகிறார்கள்.

ரசியல் கட்சிகள், அரசு ஊழியர்கள், தொழிற்சங்கங்கள், மாணவர்கள், ஏன் பல நேரங்களில் பொதுமக்கள் என்று எல்லா தரப்பினரும், தங்கள் எதிர்ப்புகளை தெரிவிக்கும் வகையிலும், கோரிக்கைகளை கூறும் வகையிலும், அரசின், மக்களின் கவனத்தை ஈர்க்கும் வகையிலும் பலவிதமான போராட்டங்களை நடத்துகிறார்கள். ஆனால், இத்தகைய போராட்டங்கள் எல்லாம் போக்குவரத்து மிகுதியாக உள்ள சாலைகளில் நடப்பதால் மக்கள் பெரும் பாதிப்புக்குள்ளாகிறார்கள். எந்தவொரு போராட்டமும், மக்களின் ஆதரவு இருந்தால்தான் வெற்றி பெறமுடியும். ஆனால் இதுபோல போராட்டங்கள் நடக்கும்போது, மக்களுக்கு பெரும் பாதிப்பு ஏற்படும் நிலையில், மக்களின் எதிர்ப்பைத்தான் கட்டாயம் சந்திக்க நேரிடும். போக்குவரத்து தடைபடும்போது, பணிகளுக்கு என்றாலும் சரி, கல்விக்கூடங்களுக்கு என்றாலும் சரி, மருத்துவமனைக்கு என்றாலும் சரி, ரெயில், பஸ் மற்றும் விமானம் போன்றவற்றை பயன்படுத்த குறிப்பிட்ட நேரத்திற்குள் செல்வது என்றாலும் சரி, முடியாதநிலை ஏற்படும்போது மக்கள் அல்லல்பட்டு, சலித்து கண்டனத்தைத்தான் தெரிவிப்பார்கள். இவ்வாறு பொது இடங்களில் போராட்டம் நடத்துவதை ஒழுங்குபடுத்துவதற்கு யார் நடவடிக்கை எடுப்பார்கள்? என்று எல்லோரும் எதிர்பார்த்துக் கொண்டிருந்தார்கள். ஆனால் சுப்ரீம் கோர்ட்டு அதற்கு இப்போது ஒரு வழியை காட்டிவிட்டது. 

டெல்லியில் பரபரப்பு மிகுந்த ‌ஷகீன் பாக் என்ற இடத்தில் முஸ்லிம் பெண்கள் கடந்த டிசம்பர் மாதம் 15–ந்தேதி முதல் சாலையில் அமர்ந்து போராட்டத்தை நடத்திவருகிறார்கள். போராட்டம் அமைதியான போராட்டம்தான். எந்தவித வன்முறைக்கும் அங்கு இடமில்லை. யாருக்கும் எந்தவித பாதிப்பும்இல்லை. என்றாலும், பரபரப்பு மிகுந்த அந்தப்பகுதியில் போக்குவரத்து முழுமையாக தடை செய்யப்பட்டுவிட்டதாகவும், போக்குவரத்து பாதிக்கப்படுவதாகவும், மக்களுக்கு இடையூறு ஏற்படுவதாகவும் இந்த போராட்டத்தை தடை செய்யவேண்டும் என்றும் சுப்ரீம் கோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கை விசாரிக்கும் நீதிபதிகள் சஞ்சய் கி‌ஷன் கவுல் (சென்னை ஐகோர்ட்டு தலைமை நீதிபதியாக இருந்தவர்) மற்றும் கே.எம்.ஜோசப் ஆகியோர் ஒரு வரலாற்று சிறப்புமிகுந்த கருத்தை தெரிவித்துள்ளனர். பெண்கள் மற்றும் குழந்தைகள் சாதாரண குடிமக்களுக்கு குடியுரிமை சட்டத்திற்கு எதிராக போராடுவதற்கு உரிமை இருக்கிறது. போராட்டம் நடத்துவதற்கு மக்களுக்கு உரிமை இருக்கிறது. ஆனால் எங்கே போராடலாம் என்பதுதான் கேள்விக்குறி?. பொதுச்சாலைகளை மறிப்பதுதான் எங்களுக்கு கவலை அளிக்கும் விதமாக இருக்கிறது. ஜனநாயகம் பல்வேறு கோணத்தில் செயல்படுகிறது. அதில் எங்களுக்கு மாற்றுக்கருத்து இல்லை. போராட்டம் நடத்துவதற்கு என ஆயிரம் இடங்கள் உருவாக்கப்பட்டாலும், நாங்கள் அதை பொருட்படுத்தப்போவதில்லை. எங்கள் கவலை எல்லாம் சாலைகளை மறிக்காமல், பொதுஇடங்களுக்குள் போகாமல் நீங்கள் போராட முடியுமா? என்பதுதான். ஒவ்வொருவருக்கும் உரிமையோடு பொறுப்பும் கூடவே வருகிறது. நாளையே வேறொரு சட்டம் வந்து அதற்கும் மக்கள் எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் மக்கள் சாலைகளை மறித்தால் என்னவாகும்? இதற்கு 2 வக்கீல்களை மத்தியஸ்தர்களாக நியமிக்கிறோம். 

பொதுமக்களுக்கு இடையூறு இல்லாமல் போராட்டத்தை தொடர அரசு வழங்கும் மாற்று இடத்திற்கு செல்வதுபற்றி போராட்டக்காரர்களுடன் அவர்கள் பேசுவார்கள் என்று தெரிவித்தனர். சென்னை வண்ணாரப்பேட்டையில் ஒரு தெருவில் பெண்கள் போராட்டம் நடத்துவதில் எந்த இடைஞ்சலும் இல்லை. போக்குவரத்திற்கும் பாதிப்பு இல்லை. மதநல்லிணக்கமும் தழைக்கிறது. இதுபோல, எல்லா போராட்டங்களும் போக்குவரத்திற்கு பாதிப்பு இல்லாமலும், பொதுமக்களுக்கு இடையூறு இல்லாமலும் நடந்தால் எந்தவித பாதிப்பும் இல்லை. அந்தவகையில், மாநில அரசுகள் போராட்டம் நடத்துவதற்கு என்றே பொதுமக்களுக்கு சில குறிப்பிட்ட இடங்களை ஒவ்வொரு ஊரிலும் குறிப்பிட்டு அங்குதான் போராட்டம் நடத்தவேண்டும் என்று அனுமதி அளிக்கவேண்டும். நீதிபதிகள் கூறியதுபோல, போராட்டம் நடத்துவது ஜனநாயக உரிமை. ஆனால் அதேநேரம் அந்த போராட்டத்தால் பொதுமக்களுக்கு பாதிப்பு இல்லாமல் இருக்கவேண்டும் என்ற பொறுப்பும் இருக்கவேண்டும். அந்தவகையில், எதிர்காலத்தில் போராட்டங்களால் போக்குவரத்து பாதிப்போ, பொதுமக்களுக்கு பாதிப்போ இல்லாமல் இருப்பது உறுதிப்படுத்தப்பட்டுவிட்டால் எல்லோருக்கும் நல்லது.

Next Story