100 ஏரிகளை நிரப்பும் புதிய திட்டம்


100 ஏரிகளை நிரப்பும் புதிய திட்டம்
x
தினத்தந்தி 5 March 2020 10:30 PM GMT (Updated: 5 March 2020 4:16 PM GMT)

எல்லா வளமும் அபரிமிதமாக உள்ள தமிழ்நாட்டில், நீர்வளம் நிறைவாக இல்லை என்பதே நிதர்சனமான உண்மையாகும்.

ல்லா வளமும் அபரிமிதமாக உள்ள தமிழ்நாட்டில், நீர்வளம் நிறைவாக இல்லை என்பதே நிதர்சனமான உண்மையாகும். ஆனால் பல நேரங்களில் ஆறுகளில் மழைக்காலத்தில் பெருவெள்ளம் ஓடி, அதைத் தேக்கி வைக்க தகுந்த உள்கட்டமைப்பு வசதிகள் இல்லாததால் வீணாக கடலில்போய்க் கலக்கிறது. இந்த நிலையை மாற்ற அப்படி வீணாக கடலில் போய்க் கலக்கும் தண்ணீரை திருப்பிவிட்டு சேமிக்க புதிய திட்டங்கள் நிறைவேற்றப்படவேண்டும் என்று ஒவ்வொரு பகுதியிலும் கோரிக்கைகள் விடுக்கப்பட்டு வருகின்றன. ஒரு சில திட்டங்கள் தொடங்கப்பட்டு, அதற்கு காலக்கெடு நிர்ணயிக்கப்படாததால் நிறைவு பெறாமல் நிற்கின்றன. ‘‘தாமிரபரணி–கருமேனியாறு–நம்பியாறு’’ இணைப்புத்திட்டம், 2009–ம் ஆண்டு தொடங்கப்பட்டு இன்னும் முடிக்கப்பட முடியாத அவலநிலையில் இருக்கிறது. 

இந்தநிலையில் கடந்த 1¾ ஆண்டுகளுக்கு முன்பு இதுபோல, கடலிலே வீணாய் போய்க் கலக்கும் மழைநீரை சேமிப்பதற்காக திட்டம் வகுக்க ஓய்வு பெற்ற 2 தலைமை பொறியாளர்கள், 3 கண்காணிப்பு பொறியாளர்கள் என 5 பேர் அடங்கிய ஒரு உயர்மட்ட குழுவை முதல்–அமைச்சர் எடப்பாடி பழனிசாமி அமைத்தார். அந்தக்குழு அளித்த பரிந்துரைப்படி, மேட்டூர் அணையில் இருந்து வெள்ளநீரை சரபங்கா வடிநிலத்துக்கு திருப்பி, 100 வறண்ட ஏரிகளுக்கு நீரேற்று மூலம் தண்ணீர் கொண்டு செல்லும் திட்டத்துக்கு முதல்–அமைச்சர் எடப்பாடி பழனிசாமி அடிக்கல் நாட்டியுள்ளார். இந்த திட்டத்தை ரூ.565 கோடி செலவில் நிறைவேற்ற அரசு உத்தரவும் பிறப்பிக்கப்பட்டுள்ளது. இதை நிறைவேற்றுவதன் மூலம் வினாடிக்கு 214 கனஅடி தண்ணீர் 30 நாட்களுக்கு நீரேற்று குழாய் மூலம் இந்த ஏரிகளுக்கு அனுப்பப்படும். ஆக, மேட்டூர் அணையில் இருந்து 555 மில்லியன் கனஅடி உபரிநீர் இந்த ஏரிகளுக்கு அனுப்பப்படும் என்று கணக்கிடப்பட்டுள்ளது. 4 ஆயிரத்து 238 ஏக்கர் நிலம் பாசன வசதி பெறுவது மட்டுமல்லாமல், இந்த ஏரிகளில் எல்லாம் தண்ணீர் இருக்கும்போது, அந்தப்பகுதியில் உள்ள நிலத்தடி நீர்மட்டமும் உயர்வதற்கு வாய்ப்பு உள்ளது. 

இந்த திட்டத்தில் மிகவும் பாராட்டத்தக்க அம்சம் என்னவென்றால், திட்டப்பணிகளை நிறைவேற்ற முதல்–அமைச்சர் 11 மாதங்கள் காலக்கெடு இதற்கு நிர்ணயித்துள்ளார். அடிக்கல் நாட்டும்போதே, 11 மாதங்களில் மேட்டுப்பட்டி ஏரி நிரம்பி இந்தப்பகுதிகளில் உள்ள வேளாண் பணிகள் சிறக்கும். குடிநீர் பிரச்சினைகள் முழுவதும் தீர்க்கப்படும் என்று முதல்–அமைச்சர் உறுதி அளித்துள்ளார். சேலம் மாவட்டத்தில் உள்ள 9 ஒன்றியங்களில் இருக்கும் 12 பொதுப்பணித்துறை ஏரிகள் மற்றும் 88 ஊராட்சி ஒன்றிய ஏரிகள் மற்றும் குட்டைகள் என 100 ஏரிகளை நிரப்பும் இந்த திட்டத்துக்கு 11 மாதங்கள் காலக்கெடு நிர்ணயித்திருப்பது நிச்சயம் வரவேற்கத்தக்கது. தாமிரபரணி, வைகை, காவிரி உள்பட தமிழ்நாட்டில் உள்ள பல ஆறுகளில் மழைக்காலத்தில் தண்ணீர் பெருக்கெடுத்து ஓடி வீணாகக் கடலில்போய்க் கலந்து கொண்டிருப்பது, பல ஆண்டுகளாக நடக்கும் நிகழ்வாக இருக்கிறது. சேலம் மாவட்டத்தைப்போல, அனைத்து மாவட்டங்களிலும் இதுபோல, ஆறுகளில் ஓடி கடலில்போய்க் கலக்காமல், அந்தப்பகுதியில் வறண்டு போய்க்கிடக்கும் ஏரிகள், குளங்கள், குட்டைகளை நிரப்பும் திட்டங்களை அதிகப்படியாக நிறைவேற்றினால் தமிழ்நாடு செழிக்கும். மக்கள் மனதில் மகிழ்ச்சி பெருக்கெடுத்து ஓடும். மேலும் தாமிரபரணி திட்டம்போல தொடங்கப்பட்டு, நத்தைவேகத்தில் நகர்ந்து கொண்டிருக்கும் அனைத்து திட்டங்களையும் நிறைவேற்றுவதற்கு சேலத்தில் நிர்ணயிக்கப்பட்ட 11 மாதம்போல, காலக்கெடு நிர்ணயித்து நிறைவேற்ற வேண்டும் என்பது விவசாயிகளின் கோரிக்கையாக உள்ளது. இதுமட்டுமல்லாமல், நீண்ட நெடுநாட்களாக தமிழக மக்கள் கோரிவருவது என்னவென்றால், கேரளாவில் மேற்கு நோக்கிப்பாய்ந்து வீணாக தண்ணீர் கடலில் போய்க் கலக்கும் நிலையை மாற்றி, கிழக்கே திருப்பிவிட்டால் தமிழ்நாட்டில் உள்ள பல மாவட்டங்கள் தண்ணீர் பஞ்சத்தால் தவிக்காது. அதற்கும் தமிழக அரசு, கேரள அரசோடு பேசி முயற்சிகளை மேற்கொள்ள வேண்டும்.

Next Story