பாதிப்பும் உண்டு, பலனும் உண்டு


பாதிப்பும் உண்டு, பலனும் உண்டு
x
தினத்தந்தி 10 March 2020 10:30 PM GMT (Updated: 10 March 2020 4:14 PM GMT)

பங்குசந்தையில் வரலாறு காணாத வீழ்ச்சி, தங்கம் விலை தொடர்ந்து ஏற்றம் என்று பல ஏற்ற இறக்கங்களை இந்தியா சந்தித்து வருகிறது.

5 லட்சம் டிரில்லியன் டாலர் பொருளாதாரத்தை அடையவேண்டும் என்ற இலக்கை நோக்கி இந்தியா பயணம் செய்யும்போது, சாண் ஏறினால் முழம் சறுக்கும் என்ற நிலை ஏற்பட்டு வருகிறது. ஒருபக்கம் கொரோனா வைரஸ் பாதிப்பு, மற்றொரு பக்கம் சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலைகுறைவு, யெஸ் வங்கி பிரச்சினை, பங்குசந்தையில் வரலாறு காணாத வீழ்ச்சி, தங்கம் விலை தொடர்ந்து ஏற்றம் என்று பல ஏற்ற இறக்கங்களை இந்தியா சந்தித்து வருகிறது. கொரோனா வைரஸ் பாதிப்பால் சர்வதேச வர்த்தகம் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது. உள்நாட்டிலும் பொருளாதாரத்தில் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. விமானத்தில் பயணம் செய்வோரின் எண்ணிக்கை 15 சதவீதம் குறைந்துவிட்டது. இதன் காரணமாக நேற்று முன்தினம் நூற்றுக்கணக்கான விமான பயணிகள் கொரோனா வைரஸ் பீதியால் விமான பயணங்களை ரத்து செய்தநிலையில், கட்டணம் அதலபாதாளத்துக்கு சென்றுவிட்டது. 

1991–ம் ஆண்டு நடந்த வளைகுடா போருக்கு பிறகு, கடந்த 2 நாட்களாக கச்சா எண்ணெய் விலை பெரிதும் சரிந்து நேற்று மாலை 3.15 மணிக்கு ஒரு பீப்பாய் கச்சா எண்ணெய் விலை 36.66 டாலராக இருந்தது. இன்னும் குறைய வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது. கச்சா எண்ணெய் உற்பத்தி நாடுகளுக்கும், ரஷியாவிற்கும் உற்பத்தியை குறைப்பது தொடர்பாக ஏற்பட்டுள்ள பிரச்சினை காரணமாகத்தான் இந்த விலை குறைந்தது என்றாலும், கொரோனா வைரஸ் பாதிப்பால் கச்சா எண்ணெய் பயன்பாடு பெருமளவில் குறைந்துவிட்டதும் ஒரு காரணமாகும். பங்குசந்தையும் வரலாறு காணாத வீழ்ச்சி அடைந்து, முதலீட்டாளர்களுக்கு ரூ.7 லட்சம் கோடி அளவில் இழப்பை ஏற்படுத்திவிட்டது. கச்சா எண்ணெய் 30 சதவீத விலைச்சரிவும், கொரோனா வைரஸ் பாதிப்பு தொடர்ந்து இருப்பதும்தான் உலக பங்குசந்தையை உலுக்கிவிட்டது. சென்செக்ஸ் 1,942 புள்ளிகள் சரிந்து 35,634 புள்ளிகளில் நிலைகொண்டிருந்தது. இதேபோல நிப்டி 538 புள்ளிகள் சரிந்து 10,451 புள்ளிகளில் நிலைகொண்டிருந்தது. எல்லோருமே தங்கத்தில் முதலீடு செய்ய தொடங்கிவிட்டதால் தங்கம் விலை ஏறிக்கொண்டே இருக்கிறது. இதுபோல ரூபாயின் மதிப்பும் கடந்த 17 மாதங்களில் இல்லாத அளவு நேற்று ஒரு டாலருக்கு இந்திய ரூபாயின் மதிப்பு 73.80 ரூபாயாக இருந்தது. 

இவ்வளவு பாதிப்பிலும் இந்திய பொருளாதாரத்துக்கு சில நன்மைகள் இருப்பதை யாரும் மறுத்துவிடமுடியாது. இந்தியாவில் கச்சா எண்ணெய் உற்பத்தி பெருமளவில் கிடையாது. 80 சதவீதத்துக்கும் மேலான தேவையை வெளிநாடுகளில் இருந்து இறக்குமதி செய்துதான் பூர்த்தி செய்யவேண்டியது உள்ளது. இந்த நிலையில், நடப்பு கணக்கு பற்றாக்குறைக்கு அதாவது ஏற்றுமதிக்கும், இறக்குமதிக்குமான வித்தியாசத்தை அதிகப்படுத்துவதுதான் கச்சா எண்ணெய்க்கு ஆகும் செலவாகும். 2018–19–ம் ஆண்டில் கச்சா எண்ணெய் இறக்குமதிக்காக 111.9 பில்லியன் டாலர் செலவானது. இப்போதைய விலை நீடித்தால் அடுத்த நிதி ஆண்டுக்கான செலவு 47 பில்லியன் டாலரை மிச்சப்படுத்தும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. கச்சா எண்ணெய் விலை குறைவால், பெட்ரோல்–டீசல் விலையை குறைத்தால் கலால்வரியும், மதிப்பு கூட்டுவரியும் குறைவான வசூலைக்காண வழி இருக்கிறது. ஆனால் பொதுமக்களின் பெரிய எதிர்பார்ப்பு இந்த விலை குறைப்பினால் கிடைக்கும் பலனை ஓரளவாவது பெட்ரோல்–டீசல் வாங்குபவர்களுக்கு கிடைக்க செய்யவேண்டும் என்பதே. கொரோனா வைரஸ் பீதியால் சீனாவில் இருந்து வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்யும் பல பொருட்களுக்கு பாதிப்பு இருக்கிறது. அந்த சந்தையை இந்தியா பெற்றுக்கொள்வதற்கு நிறைய வாய்ப்பு இருக்கிறது. குறிப்பாக தேன், உருளைக்கிழங்கு, திராட்சை, சோயா பீன்ஸ், நிலக்கடலை உள்பட 27 வேளாண் பொருட்களை சீனா ஏற்றுமதி செய்யமுடியாமல் இருக்கும் நிலையில், அந்த வேளாண் விளைபொருட்களை இந்தியா ஏற்றுமதி செய்யவும், தொடர்ந்து அதை தக்க வைத்துகொள்வதற்கும் பெரிதும் வாய்ப்பு இருக்கிறது. ஆக, மொத்தத்தில், பாதிப்பும் இருக்கிறது, பலனும் இருக்கிறது.

Next Story