ரஜினி வழி தனி வழி


ரஜினி வழி தனி வழி
x
தினத்தந்தி 12 March 2020 10:30 PM GMT (Updated: 12 March 2020 4:18 PM GMT)

2017–ம் ஆண்டு டிசம்பர் 31–ந் தேதிதான் அவரது வாயாலேயே அவர் அரசியலுக்கு வரப்போவதை உறுதிபட தெரிவித்தார்.

ஜினிகாந்த் அரசியல் கட்சி தொடங்குவாரா?, அப்படி தொடங்கினால் எப்போது தொடங்கப்போகிறார்? என்ற பல கேள்விகளுக்கு நேற்று நடந்த பத்திரிகையாளர் சந்திப்பில் முழு விடையை சொல்லாவிட்டாலும், எல்லோரும் புரிந்துகொள்ளும் வகையில் தன் நிலையை தெளிவுபடுத்திவிட்டார். பொதுவாக ரஜினிகாந்த் படத்தில் ஏதாவது ஒரு பஞ்ச் வசனம் இருக்கும். அது எந்தக்காலத்திலும் பேசப்படும். அப்படி ஒரு வசனமாக ‘முத்து’ படத்தில், ‘‘நான் எப்போ வருவேன், எப்படி வருவேன் என்பது யாருக்கும் தெரியாது. ஆனால், வரவேண்டிய நேரத்தில் கரெக்டா வந்துவிடுவேன்’’ என்பார். 1996–ம் ஆண்டிலிருந்து அவர் சொல்லாவிட்டாலும், எந்த நேரத்திலும் எல்லோரும் அவர் அரசியலுக்கு வருவதை எதிர்பார்த்துக்கொண்டு இருந்தார்கள். 2017–ம் ஆண்டு டிசம்பர் 31–ந் தேதிதான் அவரது வாயாலேயே அவர் அரசியலுக்கு வரப்போவதை உறுதிபட தெரிவித்தார். அதன்பிறகு அவர் வெளிப்படையாக அறிவிக்காவிட்டாலும், இதற்கான ஆயத்தப்பணிகளை வேகமாக செய்யத்தொடங்கிவிட்டார். வரவேண்டிய நேரத்தில் கரெக்டா வந்துவிடுவேன் என்று சொன்னதுபோல, நேற்று செய்தியாளர் சந்திப்பில் தான் வரப்போவதை தெரிவித்துவிட்டார். கெட்டுப்போன சிஸ்டத்தை மாற்ற 3 திட்டங்களை அறிவிக்கிறேன் என்று தொடங்கினார். தேர்தல் நேரத்தில் கட்சியில் உள்ள பதவிகள், தேர்தலுக்குப்பிறகு இருக்காது. அத்தியாவசிய பணிகள்தான் இருக்கும் என்று தொடங்கினார்.

‘‘கட்சி வேறு, ஆட்சி வேறு என்பதில் உறுதியாக இருப்பது என்பதை தெரிவித்துவிட்டு, ஆட்சியில் 50, 55, 60 வயது உள்ளவர்கள் பொறுப்புகளில் 60, 65 சதவீதம் இருப்பார்கள். மீதமுள்ள 35 முதல் 40 சதவீதம் உள்ளவர்கள் வேறு கட்சிகளில் வாய்ப்பு கிடைக்காத நல்லவர்கள், ஓய்வுபெற்ற நீதிபதிகள், ஐ.ஏ.எஸ்., ஐ.பி.எஸ். அதிகாரிகள் போன்றோர் இருப்பார்கள். இதில் பெண்களும் அடங்குவார்கள். அவர்கள் வீடுகளுக்கு எல்லாம் நானே சென்று, ‘‘வாருங்கள், சிஸ்டத்தை சரிசெய்வோம்’’ என்று அழைத்து, ‘‘ஒரு புதிய சக்தியை, மின்சாரத்தை, புது வெள்ளத்தை, புது ரத்தத்தை ஆட்சியில் கொண்டு வருவோம்’’ என்று சொல்வேன் என வித்தியாசமான அணுகுமுறையை தெரிவித்து இருப்பதுடன், ‘‘அவர்களுக்கு வாய்ப்பு கொடுத்து சட்டமன்றத்துக்கு அனுப்பி, ஆட்சி அதிகாரத்தை கையில் எடுத்துக்கொள்ளும்படி செய்யவேண்டும். அதற்கு நான் பாலமாக இருக்கவேண்டும்’’ எனவும் தெளிவுபடுத்தினார்.

இதுவரையில் தமிழ்நாட்டை பொறுத்தவரையில், கட்சித்தலைமை பொறுப்பில் இருந்த தலைவர்களே, ஆட்சிப் பொறுப்பையும் வகித்து வந்திருக்கிறார்கள். ஆனால், ரஜினிகாந்த், தான் தொடங்கப்போகும் கட்சி தலைமைக்கு ஒருவர், ஆட்சி தலைமைக்கு ஒருவர் என்பதை பகிரங்கமாக தெரிவித்துவிட்டார். முதல்–அமைச்சர் பொறுப்பை ஒருபோதும் ஏற்றுக்கொள்ளப்போவதில்லை என்று திட்டவட்டமாக கூறிவிட்டார். ‘‘முதல்–அமைச்சராக எனக்கு எப்போதுமே ஆசை இருந்தது இல்லை. முதல்–அமைச்சராக என்னை கனவில்கூட நினைத்துப் பார்த்தது இல்லை. எனது கட்சியில் இருந்து நேர்மையும், திறமையும் ஒருங்கே அமையப்பெற்ற தன்னம்பிக்கை உள்ள, படித்த சுயமரியாதை உள்ள ஒரு இளைஞரை, அவர் பெண்ணாகவும் இருக்கலாம். அப்படிப்பட்டவரை முதல்–அமைச்சர் பொறுப்பில் அமர்த்துவேன்’’ என்று உறுதிபட தெரிவித்துவிட்டார். எனக்கு பதவி ஆசை இல்லை என்று இப்போது சொல்லவில்லை. 2017–ம் ஆண்டிலேயே சொல்லி இருக்கிறேன் என்று கூறி, அப்போது அவர் பேசிய பேச்சு ‘தந்தி’ டி.வி.யில் ஒளிபரப்பப்பட்டதை போட்டு காட்டினார். நான் கட்சி தலைவனாக இருப்பேன் என்று தெளிவாக தெரிவித்துவிட்டார். நான், அரசியலுக்கு, கட்சிக்கு வருவேன் என்று சொல்லுங்கள். புதிதாக இளைஞர்கள் வந்து அதிகாரத்தை கையில் எடுக்கவேண்டும். மூலை முடுக்கெல்லாம் இந்த எழுச்சி உருவானபிறகு, நான் வருகிறேன் என்று சொல்லிவிட்டார். ஆக, ரஜினிகாந்த் தன் நோக்கத்தை, தன் கட்சியின் நோக்கத்தை, கட்சி வெற்றி பெற்றால் தனது ஆட்சி எப்படி இருக்கும் என்பதை வெளிப்படையாக சொல்லிவிட்டார். அவர் கூறியபடி, மக்களிடையே எழுச்சி ஏற்படுமா? என்பதற்கு அடுத்துவரப்போகும் நாட்கள்தான் பதில் சொல்லவேண்டும்.

Next Story