பொது மக்கள்தான் எச்சரிக்கையோடு இருக்க வேண்டும்


பொது மக்கள்தான் எச்சரிக்கையோடு இருக்க வேண்டும்
x
தினத்தந்தி 16 March 2020 11:00 PM GMT (Updated: 2020-03-16T20:31:49+05:30)

உலகம் முழுவதும் அனைத்து நாடுகளிலும் மற்ற பிரச்சினைகளையெல்லாம் பின்னுக்கு தள்ளிவிட்டு கொரோனா பிரச்சினைதான் முன்னால் நிற்கிறது. இது மனிதர்களிடம் இருந்துதான் மனிதர்களுக்கு பரவுகிறது. கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டவர் இருமும்போதோ, தும்மும்போதோ அல்லது பேசும்போதோ தெறிக்கும் துளிகளில் இருந்து பரவுகிறது.

சீனாவில் தொடங்கிய கொரோனா வைரஸ் ஒவ்வொரு நாடாக பரவி இப்போது 148 நாடுகளில் பரவியுள்ளது. இந்தியாவில் 14 மாநிலங்களில் இந்த நோயின் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. தமிழகத்தில் ஓமன் நாட்டில் இருந்து வந்த ஒருவருக்கு கொரோனா வைரஸ் இருக்குமோ என்று மருத்துவமனையில் பரிசோதனை நடந்தது. ஆனால் அவருக்கும் இப்போது இல்லை என்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. ஆக தமிழ்நாடு கொரோனா வைரஸ் பாதிப்பு இல்லாத மாநிலமாக இருக்கிறது. இருந்தாலும் இந்தியாவில் இந்நோய் பேரிடராக அறிவிக்கப்பட்டுள்ளது. 

தமிழ்நாட்டிலும் அறிவிக்கப்பட்ட நோயாகவும், கொரோனா வைரஸ் பரவுவதற்கான அச்சுறுத்தல் இருப்பதாகவும் தமிழக அரசு அறிவித்துள்ளது. இதுமட்டுமல்லாமல் பல வழிமுறைகள் அறிவிக்கப்பட்டுள்ளன. இந்தியாவில் பல மாநிலங்களில் பள்ளிக்கூடங்கள், சினிமா தியேட்டர்கள் மூடப்பட்டுள்ளன. பொதுமக்கள் கூட்டமாக கூடும் விழாக்களுக்கு தடை செய்யப்பட்டுள்ளது. சபரிமலையில் பக்தர்கள் வரவேண்டாம் என்று வேண்டுகோள் விடுக்கப்பட்டுள்ளது. 

தமிழ்நாட்டில் பஸ்களில் ஒவ்வொரு டிரிப் முடிந்த பின்பும் லைசால் என்ற கிருமி நாசினி மூலம் சுத்தம் செய்யப்பட வேண்டும் என்றும், இதுபோல, ஓட்டல்கள், வீடுகள், திருமண மண்டபங்களிலும் லைசால் தெளிக்கப்பட வேண்டும் என்ற உத்தரவு மிகவும் வரவேற்கத்தக்கது. 

அரசு என்னதான் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்தாலும் இந்த நோய் பரவாமல் இருக்க வேண்டுமென்றால் அது நிச்சயமாக பொதுமக்கள் கையில்தான் இருக்கிறது. பொதுமக்கள் கடைப்பிடிக்க வேண்டிய முன்னெச்சரிக்கைகள் குறித்து முதல்–அமைச்சர் எடப்பாடி பழனிசாமி அறிவித்துள்ள நடவடிக்கைகளை பின்பற்றினால் போதும். நோய் வராமல் தடுப்பதே அது வந்தவுடன் குணமாக்குவதை விட சிறந்தது. அதுபோல கொரோனா வைரஸ் நோய் தாக்காமல் இருக்க வேண்டுமென்றால் ஒவ்வொருவரும் மிகக் கவனமாக செயல்படவேண்டும். 

அடிக்கடி கைகளை சோப்புப் போட்டு சுத்தம் செய்து கொள்ள வேண்டும். முகத்தையோ, மூக்கையோ, கண்களையோ கைகளை சுத்தம் செய்யாமல் தொடக்கூடாது. இப்போது பள்ளி, கல்லூரி உள்பட அனைத்து கல்வி நறுவனங்கள் 31ந் தேதி வரை மூடப்படுகிறது. மாநிலம் முழுவதும் திரையரங்குகள், வணிக வளாகங்கள் 31ந் தேதி வரை மூடப்பட வேண்டும் என கூறப்பட்டுள்ளது.  இந்த நேரத்தில் விடுமுறை நாட்களின்போது குழந்தைகள் குழுவாக விளையாடாதவாறு கண்காணிக்க வேண்டும் என்றும் முதல்–அமைச்சர் வெளியிட்டுள்ள வழிமுறைகளில் கூறப்பட்டுள்ளது. 

தமிழ்நாட்டில் இருந்து, பிற மாநிலங்களுக்கு பயணிப்பதையும், பொது இடங்களில் அதிக எண்ணிக்கையில் கூடுவதையும் பொதுமக்கள் அடுத்த 15 நாட்களுக்கு தவிர்க்க வேண்டும், வயதானவர்கள், நோய்வாய்ப்பட்டவர்கள், குழந்தைகள் மற்றும் நோய் எதிர்ப்பு சக்தி குறைந்த நபர்கள் கூட்டம் நிறைந்த பொது இடங்களுக்கு செல்வதை தவிர்க்க வேண்டும் என்ற வழிமுறையை அப்படியே அனைவரும் கடைபிடிக்க வேண்டும். 

அமெரிக்காவில் உள்ள வாஷிங்டனில் கடந்த ஞாயிற்றுக்கிழமை கிறிஸ்தவ கோவில்களில் பிரார்த்தனைகள் நடக்கவில்லை. ஆன்–லைன் மூலமாக நடந்த பிரார்த்தனையில்தான் அனைவரும் வீட்டில் இருந்தே கலந்து கொண்டனர். கொரோனா வைரஸ் தமிழ்நாட்டில் காலூன்றாமல் தடுக்க வேண்டும் என்றால் அரசின் நடவடிக்கைகளும் வேண்டும். அதற்கும் மேலாக பொதுமக்கள் அனைவரும் அதை தடுப்பதற்கான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளில் ஈடுபட வேண்டும். அப்படி என்றால்தான் இதில் வெற்றி பெற முடியும், முதலில் தன்னை ஒவ்வொருவரும் காத்துக்கொள்ள வேண்டும். 

எந்த பிரச்சினைக்கும் தீர்வு பொதுமக்களிடம் இருந்துதான் தொடங்குகிறது என்ற வகையில் ஒவ்வொருவரும் இதில் கண்ணுங்கருத்துமாக இருக்க வேண்டும். பொதுக் கூட்டங்கள், பொது பிரார்த்தனைகள், விழாக்கள், மக்கள் கூடுகைகளை கொரோனா வைரஸ் பாதிப்புக்கு முற்றுப்புள்ளி வைக்கும் வரையில் தள்ளிப்போட வேண்டும்.

Next Story