கச்சா எண்ணெய் விலை குறைந்தது: பெட்ரோல் விலை குறையவில்லையே?


கச்சா எண்ணெய் விலை குறைந்தது: பெட்ரோல் விலை குறையவில்லையே?
x
தினத்தந்தி 17 March 2020 10:30 PM GMT (Updated: 2020-03-17T21:50:17+05:30)

ஒரு நாட்டின் பொருளாதாரத்திலும் சரி, விலைவாசியை நிர்ணயிப்பதிலும் சரி, பெட்ரோல்–டீசல் விலை பெரிய தாக்கத்தை ஏற்படுத்துகிறது.

ரு நாட்டின் பொருளாதாரத்திலும் சரி, விலைவாசியை நிர்ணயிப்பதிலும் சரி, பெட்ரோல்–டீசல் விலை பெரிய தாக்கத்தை ஏற்படுத்துகிறது. இந்தியாவை எடுத்துக்கொண்டால், நமது பயன்பாட்டுக்கு பெட்ரோல்–டீசல் 80 சதவீதத்துக்கு மேல் வெளிநாடுகளில் இருந்துதான் இறக்குமதி செய்யப்படுகிறது. கச்சா எண்ணெய் விலை ஒரு டாலர் உயர்ந்தாலோ, குறைந்தாலோ, இந்தியாவின் இறக்குமதி செலவு 1.5 பில்லியன் அமெரிக்கா டாலர் கூடவோ, குறையவோ செய்யும். கச்சா எண்ணெய் விலை 10 டாலர் உயர்ந்தால், பெட்ரோல்–டீசல் விலை லிட்டருக்கு 6 ரூபாய் உயரும். சரி, கச்சா எண்ணெய் விலை 10 டாலர் உயரும்போது, பெட்ரோல்–டீசல் விலை லிட்டருக்கு 6 ரூபாய் உயருகிறது. ஆனால், கச்சா எண்ணெய் விலை குறையும்போது, ஏன்? அந்தளவு பெட்ரோல்–டீசல் விலை குறையவில்லை என்பதே இப்போது பொதுமக்களின் கேள்வியாக இருக்கிறது. 

சவுதி அரேபியாவுக்கும், ரஷியாவுக்கும் இடையே ஏற்பட்டுள்ள கச்சா எண்ணெய் வர்த்தகப்போர் காரணமாகவும், உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் ஏற்படுத்தி இருக்கும் பீதியாலும் கச்சா எண்ணெய் விலை வெகுவாகக்குறைந்து வருகிறது. கடந்த ஜனவரி 1–ந்தேதி கச்சா எண்ணெய் விலை ஒரு பீப்பாய்க்கு 61.3 டாலராக இருந்தது. ஆனால் நேற்றைய விலையில் இதன் விலை 31.41 டாலராக குறைந்துவிட்டது. 61.13 டாலர் விலை இருந்தபோது, பெட்ரோல் விலை லிட்டருக்கு 78.12 ரூபாயாகவும், டீசல் 71.86 ரூபாயாகவும் இருந்தது. இப்போது கச்சா எண்ணெய் விலை பீப்பாய்க்கு 31.41 டாலராக இருக்கும் நிலையில், பெட்ரோல்–டீசல் விலை என்னவென்று பார்த்தால், சென்னையில் பெட்ரோல் விலை லிட்டருக்கு 72.22 ரூபாயாகவும், டீசல் லிட்டருக்கு 65.65 ரூபாயாகவும் இருக்கிறது. கச்சா எண்ணெய் விலை குறைந்துவிட்டதே, அதற்கேற்ற வகையில் பெட்ரோல்–டீசல் விலை குறையவில்லையே என்ற கேள்வி மக்களிடையே பெரிதும் எழுந்துள்ளது. 

மத்திய அரசாங்கம் ஒரு லிட்டர் பெட்ரோல் மீது 19.8 ரூபாயும், டீசல் மீது 15.83 ரூபாயும் கலால்வரியாக வசூலித்து வந்தது. இதற்குப்பிறகு தமிழக அரசு தனியாக மதிப்புக்கூட்டு வரியை வசூலித்து வருகிறது. தமிழக அரசை பொறுத்தமட்டில், பெட்ரோலுக்கு 34 சதவீதமும், டீசலுக்கு 25 சதவீதமும் மதிப்புக்கூட்டு வரியாக வசூலிக்கிறது. இந்த கணக்குகளை எல்லாம் கூட்டிப்பார்த்தால் பெட்ரோல்–டீசலின் அடிப்படை உற்பத்தி செலவைவிட இருமடங்கு தொகை கொடுத்துத்தான் வாங்கவேண்டியது இருக்கிறது. இந்தநிலையில், கடந்த சனிக்கிழமை மத்திய அரசாங்கம் சிறப்பு கூடுதல் கலால்வரியாக பெட்ரோலுக்கும், டீசலுக்கும் லிட்டருக்கு தலா 3 ரூபாய் உயர்த்தியுள்ளது. இந்த புதிய வரிவிதிப்பு உடனடியாக அமலுக்கு வந்ததால், இந்த நிதி ஆண்டில் பாக்கி இருக்கும் 15 நாட்களில் மத்திய அரசாங்கத்துக்கு 1,958 கோடி ரூபாய் வருமானத்தை ஈட்டித்தரும். அடுத்த நிதி ஆண்டுக்கு 47 ஆயிரம் கோடி ரூபாயை வருவாயாக ஈட்டித்தரும். மத்திய அரசாங்கமே லிட்டருக்கு 3 ரூபாயை உயர்த்திவிட்டது. நமது வருவாயும், பாதித்துள்ளதே என்று மாநில அரசுகளும் மதிப்புக்கூட்டு வரியை உயர்த்தினால், இப்போது இருக்கும் விலையைவிட, பெட்ரோல்– டீசல் விலை அதிகரிக்கவும் வாய்ப்பு இருக்கிறது. எனவே, எப்போதும் இல்லாத அளவுக்கு கச்சா எண்ணெய் விலை குறைந்துள்ளதே, இந்த சூழ்நிலையில் தன் வருவாய் மட்டும் பாதிக்கக்கூடாது என்று நினைத்து மத்திய அரசாங்கம் லிட்டருக்கு 3 ரூபாய் உயர்த்தி இருப்பதுபோல, இந்த கச்சா எண்ணெய் விலை குறைவால், பொதுமக்களும் கொஞ்சமாவது அதன் பயனை அனுபவிக்க வழிவகை செய்யவேண்டும். பெட்ரோல்–டீசல் விலை குறைந்தால், நிச்சயமாக விலைவாசியும் குறையும். பொதுமக்களுக்கும் பயன்அளிக்கும். பெட்ரோல்–டீசல் விலை மட்டும் என்ன நிலை ஏற்பட்டாலும், குறையாமல் உயர்ந்து கொண்டேபோவது கையை கடிக்கிறது என்கிறார்கள் ஏழை–எளிய நடுத்தர மக்கள்.

Next Story