அச்சம் வேண்டாம், அலட்சியமும் வேண்டாம்


அச்சம் வேண்டாம், அலட்சியமும் வேண்டாம்
x
தினத்தந்தி 18 March 2020 10:30 PM GMT (Updated: 18 March 2020 4:23 PM GMT)

உலகம் முழுவதையும் கொரோனா வைரஸ் நடுநடுங்க வைத்து இருக்கிறது. உலக பொருளாதாரமே இதனால் சரிந்துவிட்டது.

லகம் முழுவதையும் கொரோனா வைரஸ் நடுநடுங்க வைத்து இருக்கிறது. உலக பொருளாதாரமே இதனால் சரிந்துவிட்டது. ஒரு துறை பாக்கியில்லாமல் எல்லா துறைகளிலும் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. மற்ற நாடுகளை ஒப்பிடும்போது, இந்தியாவில் அவ்வளவு வேகமாக பரவவில்லை என்பது ஆறுதல் அளிக்கிறது. ஏனெனில், முதல் கொரோனா வைரஸ் பாதிப்பு ஜனவரி 30–ந்தேதிதான் கண்டுபிடிக்கப்பட்டது. இப்போது 7–வது வாரம் நடந்து கொண்டிருக்கிறது. 3 பேர் உயிரிழந்து இருக்கிறார்கள். கொரோனா வைரசில் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 147 ஆக உயர்ந்துவிட்டது. தமிழ்நாட்டை பொறுத்தமட்டில், இதுவரை கொரோனாவால் ஒருவர் பாதிக்கப்பட்டுள்ளார். 2,021 பேர் மருத்துவ கண்காணிப்பில் இருக்கிறார்கள். சுற்றிலும் எரியும் தீக்கு நடுவில் ஒரு கற்பூரமாக தமிழ்நாடு இருக்கிறது. அதாவது, நம் அண்டை மாநிலங்களில் எல்லாம் நம்மைவிட அதிகமான பாதிப்பு இருக்கிறது. கேரளாவில் வெளிநாட்டைச் சேர்ந்த 2 பேர் உள்பட 27 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். கர்நாடக மாநிலத்தில் 13 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். ஆந்திராவில் ஒருவரும், புதுச்சேரியில் ஒருவரும் பாதிக்கப்பட்டுள்ளனர். 

இந்தநிலையில், முன்னெச்சரிக்கையாக அதாவது ‘‘வருமுன் காப்போம்’’என்ற பழமொழிக்கு ஏற்ப பல நடவடிக்கைகளை முதல்–அமைச்சர் எடப்பாடி பழனிசாமி அறிவித்துள்ளார். அனைத்து பள்ளிக்கூடங்கள், கல்லூரிகள், அங்கன்வாடி மையங்கள், திரையரங்குகள், வணிக வளாகங்கள் போன்ற மக்கள் அதிகம் கூடும் அனைத்து இடங்களையும் மூட உத்தரவிட்டிருப்பது வரவேற்கத்தக்கது. தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் கொரோனா நோய் தொடர்பாக அரசு அறிவித்துள்ள ‘வருமுன் காப்போம்’ நடவடிக்கைகளை நான் உள்ளபடியே வரவேற்கிறேன் என்று சொன்னது பாராட்டுக்குரியது. ஆளுங்கட்சி, எதிர்க்கட்சி என்ற பேதமில்லாமல், அரசு எடுக்கும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் முழுமையாக நடைமுறைப்படுத்தப்படுகிறதா? என்பதை கண்காணிக்கும் பொறுப்பு எல்லா எதிர்க்கட்சிகளுக்கும் இருக்கிறது. பொதுமக்களும் தேவையில்லாமல் வெளியே செல்வதையும், கூட்டங்கள் கூடுவதையும் தவிர்க்க வேண்டும். 

சென்னை வண்ணாரப்பேட்டையில் குடியுரிமைச் சட்டத்திற்கு எதிராக கடந்த 33 நாட்களாக நடந்த தொடர் போராட்டம் தற்காலிகமாக ஒத்திவைக்கப்பட்டுள்ளது பாராட்டுக்குரியது. இதுபோல, கொரோனா வைரஸ் அச்சம், பயம் இனி இல்லை என்று வரும்வரை அரசு ஊழியர்கள், அரசியல் கட்சிகள், தொழிற்சங்கங்களின் போராட்டங்கள், உண்ணாவிரதங்கள், ஆர்ப்பாட்டங்கள் போன்றவை ஒத்தி வைக்கப்பட வேண்டும். முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளின் ஒரு பகுதியாக ஷீரடி சாய்பாபா கோவில், மும்பை சித்தி விநாயகர் கோவில் போல, அனைத்து மத வழிபாட்டு தலங்களையும் மூடுவதற்கு பரிசீலிக்க வேண்டும். எல்லா இடங்களிலும் அதிலும் குறிப்பாக பஸ்கள், ரெயில் பெட்டிகளில் கிருமி நாசினியை (சானிட்டைசர்) அனைவரும் கைகளில் தடவிக்கொண்ட பிறகு பயணம் செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும். மத்திய அரசாங்கம் அலுவலகங்களில் பார்வையாளர்கள் வருவதற்கான பாஸ்கள் வழங்குவதை தற்காலிகமாக நிறுத்தி வைத்துள்ளது. இதுபோல, அலுவலகங்களில் இருக்கும் உடற்பயிற்சி கூடங்கள், பொழுதுபோக்கு மையங்கள், குழந்தைகள் காப்பகங்களையும் மூட உத்தரவிட்டு இருக்கிறது. அதுபோன்ற நடவடிக்கைகளை தமிழக அரசு அலுவலகங்களிலும் எடுக்கலாம். கொரோனா வைரஸ் தொடர்பாக யாரும் அச்சப்படத் தேவையில்லை என்று அமைச்சர் டாக்டர் விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார். முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுக்கும்போது, மக்களுக்கு தேவையற்ற அச்சம் ஏற்படாதவகையிலும், நடவடிக்கைகளில் அலட்சியம் இல்லாமலும் பார்த்துக் கொள்ளவேண்டும். எக்காரணத்தைக் கொண்டும் தமிழ்நாட்டில் கொரோனா வைரஸ் பாதிப்பு ஏற்பட்டுவிடக்கூடாது. அதேநேரத்தில், மக்களுக்கு அத்தியாவசிய சேவைகள், உணவுப்பொருட்கள் சப்ளை, காய்கறிகள், மளிகை பொருட்கள், மருந்து பொருட்கள் போன்றவை கிடைப்பதில் எந்த தடங்கலும் ஏற்பட்டுவிடக்கூடாது. எதிர்க்கட்சிகள் கோரிக்கைகளின்படி, பல மாநிலங்களில் சட்டசபை ஒத்தி வைக்கப்பட்டதைப்போல, தமிழ்நாட்டிலும் சட்டசபையை ஒத்திவைத்துவிட்டு, மக்கள் பிரதிநிதிகள் தங்கள் தொகுதிகளில் கொரோனா வைரஸ் பாதிப்பு நடவடிக்கைகளை மேற்பார்வையிடுவதற்கு வழிவகை செய்யலாமா? என்பதை அரசும், சபாநாயகரும் ஆலோசித்து முடிவு எடுக்கவேண்டும்.

Next Story