நாளை மக்கள் ஊரடங்கு


நாளை  மக்கள்  ஊரடங்கு
x
தினத்தந்தி 20 March 2020 10:30 PM GMT (Updated: 2020-03-20T21:50:29+05:30)

இதுவரை 2 உலகப்போர்கள் நடந்துள்ளன. இந்த உலகப்போர்கள் நடந்த நேரத்தில் எல்லாம் அடையாத ஒரு நடுக்கம், கவலை, இப்போது கொரோனா வைரஸ் என்ற கொடிய அரக்கனால் ஏற்பட்டுள்ளது.

துவரை 2 உலகப்போர்கள் நடந்துள்ளன. இந்த உலகப்போர்கள் நடந்த நேரத்தில் எல்லாம் அடையாத ஒரு நடுக்கம், கவலை, இப்போது கொரோனா வைரஸ் என்ற கொடிய அரக்கனால் ஏற்பட்டுள்ளது. கொரோனா வைரஸ் சீனாவில் உகான் நகரில் ஒருவரைத்தான் பாதித்தது. ஆனால் அடுத்த சில நாட்களில் மிகவேகமாக பரவி, 3,245 உயிரிழப்புகளை ஏற்படுத்திவிட்டது. அங்கு மட்டுமல்லாமல், உலகம் முழுவதும் பரவிவிட்டது. 114 நாடுகள் கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டுள்ளன.  இந்தியாவில்  இதுவரை  5 பேர் உயிரிழந்து இருக்கிறார்கள். தமிழ்நாட்டில் இதுவரை 3 பேர் பாதிக்கப்பட்டுவிட்டனர். நாமும் 3 பேர்தானே பாதிக்கப்பட்டுள்ளனர் என்று கவனக்குறைவாக இருந்துவிட முடியாது. சீனா, இத்தாலியை பாடமாகக் கொள்ளவேண்டும். 

மத்திய அரசாங்கமும், தமிழக அரசும் இந்த கோரநோய் தொற்றை கட்டுப்படுத்த எல்லா நடவடிக்கைகளையும் எடுத்து வருகிறது. தமிழக அரசு எடுத்துள்ள முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் நிச்சயமாக பாராட்டுக்குரியது. இந்தநேரத்தில் இந்தியாவில் கொரோனா வைரஸ் அதிக பாதிப்பை ஏற்படுத்தவில்லை என்று லேசாக எடுத்து கொள்ளக்கூடாது. எல்லா முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளையும் இதைவிட அதிகமாக எடுக்கவேண்டும் என்ற உணர்வை நேற்று முன்தினம் நாட்டு மக்களுக்கு பிரதமர் நரேந்திரமோடி ஆற்றிய உரை தெளிவுபடுத்தி உள்ளது. இதுவரை கொரோனா தொற்றை தடுக்க அறிவியல் ரீதியாக உறுதியான தீர்வு கண்டுபிடிக்கப்படவில்லை. எந்தவொரு தடுப்பு ஊசியும் கண்டுபிடிக்கப்படவில்லை என்ற யதார்த்த நிலையை தெரிவித்து இருக்கிறார். கொரோனா வைரஸ் பாதிக்கப்பட்ட நாடுகளில் தொடக்கத்தில் ஒருசில நாட்கள்தவிர, அதன்பிறகு இந்த நோய் ஒரு வெடி விபத்துபோல பயங்கரமாக பாதிப்பை ஏற்படுத்தி வருகிறது. கொரோனாவால் பாதிக்கப்பட்ட மக்களின் எண்ணிக்கையும் வேகமாக அதிகரித்து வருகிறது என்று கூறியது நூற்றுக்கு நூறு உண்மை. 

நாட்டு மக்களின் ஒத்துழைப்பை கோரும்வகையில் ‘‘ஜனதா ஊரடங்கு’’ என்று கூறப்படும் ‘‘மக்கள் ஊரடங்கு’’ நாளை (ஞாயிற்றுக்கிழமை) நாடு முழுவதும் கடைப்பிடிக்கப்பட வேண்டும் என்று பிரதமர், நாட்டு மக்களுக்கு வேண்டுகோள்  விடுத்துள்ளார்.  அதாவது, நாளை காலை 7 மணி முதல் இரவு 9 மணிவரை யாரும் வீட்டைவிட்டு வெளியேறவோ, வீதிகளுக்கு வரவோக்கூடாது. அவசரப்பணி மற்றும் அத்தியாவசிய சேவைகளில் ஈடுபடுவோர் மட்டும் வெளியே வரலாம். இந்த ஊரடங்கின் வெற்றியும், அதிலிருந்து நாம் கற்றுக்கொள்ளும் அனுபவமும், எதிர்கால சவால்களை எதிர்கொள்ள நமக்கு உதவிகரமாக இருக்கும் என்று தெரிவித்ததில் இருந்து வரும் நாட்களிலும் இதுபோன்ற நடவடிக்கைகளுக்கு வாய்ப்புள்ளது என்பதையும் சுட்டிக்காட்டி இருக்கிறார். இப்போது கட்டுக்குள் இருந்தாலும், எதிர்காலத்தில் தேவைப்பட்டால் எடுக்கப்பட வேண்டிய நடவடிக்கைகளுக்கு இது ஒரு ஒத்திகை. அடுத்து ஒரு வேண்டுகோளையும் அவர் விடுத்துள்ளார். அதாவது, இரவு–பகல் பாராமல் சேவையாற்றும் மருத்துவர்கள், நர்சுகள், மருத்துவமனை பணியாளர்கள், துப்புரவு பணியாளர்கள், விமான ஊழியர்கள், அரசு ஊழியர்கள், காவல் துறையினர், ஊடகப்பணியாளர்கள், ரெயில், பஸ் மற்றும் ஆட்டோ ரிக்ஷா சேவைகளில் ஈடுபட்டுள்ளவர்கள் மற்றும் வீட்டிற்கே பொருட்களை கொண்டுவந்து சேர்ப்போர் போன்றோர்களுக்கு, நாளை மாலை சரியாக 5 மணிக்கு நாம் அனைவரும் நமது வீடுகளின் வாசலிலோ, பால்கனியிலோ, ஜன்னல்கள் அருகிலோ நின்றுகொண்டு, 5 நிமிடம் நன்றி தெரிவிக்க வேண்டும். நாம் நமது கைகளை அல்லது தட்டுகளை தட்டியோ அல்லது மணிகளை ஒலித்தோ அவர்கள் சேவைக்கு தலைவணங்க வேண்டும் என்றார். எதிர்வரும் சவால்களை முறியடிக்க பிரதமரின் வேண்டுகோளை ஏற்று தமிழகம் இந்தியாவுக்கு வழிகாட்டும் வகையில், இந்த மக்கள் ஊரடங்கை வெற்றிகரமாக நடத்திக்காட்டவேண்டும். மொத்தத்தில், கொரோனா வைரசை விரட்டி அடிப்பது மத்திய–மாநில அரசு நடவடிக்கைகளால் மட்டுமல்ல, மக்களின் ஒத்துழைப்பும் சேர்ந்தால்தான் முடியும்.

Next Story