தலையங்கம்

தமிழ்நாடே ஸ்தம்பித்தது + "||" + Tamil Nadu is full shutdown

தமிழ்நாடே ஸ்தம்பித்தது

தமிழ்நாடே ஸ்தம்பித்தது
உலகம் முழுவதுமே என்ன நடக்குமோ? என்ற அச்சத்தில் உழலும் வகையில், கொரோனா வைரஸ் மிகத்தீவிரமாக பரவி வருகிறது.
 ஒவ்வொரு நாட்டிலும் கொரோனா வைரஸ் பாதிப்பால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கையும், பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கையும் உயர்ந்து கொண்டே போகிறது. இந்த நோய் முதலில் தொடங்கிய சீனாவில் இப்போது பெருமளவில் கட்டுப்படுத்திவிட்டனர் என்ற செய்தி, முயற்சி செய்தால் நிச்சயமாக இதை கட்டுப்படுத்திவிட முடியும் என்ற நம்பிக்கையை ஏற்படுத்தியுள்ளது. சீனாவில் ஓரளவுக்கு இதை கட்டுப்படுத்தியதற்கு முக்கிய காரணம் அங்கு ஊரடங்கை முழுமையாக தொடர்ந்து கடைப்பிடித்ததுதான்.

இந்தியாவில் நேற்றைய நிலவரப்படி, 341 பேர் கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டுள்ளனர். உயிரிழந்தோர்களின் எண்ணிக்கை 7-ஆக உயர்ந்துவிட்டது. இதுவரையில் உயிரிழந்தவர்கள் 60 வயதுக்கு மேற்பட்டோர்கள்தான். ஆனால் நேற்று பாட்னாவில் உயிரிழந்தவரின் வயது 38. ஆக எல்லோருமே கவனமாக இருக்கவேண்டியநிலை இந்தியாவில் ஏற்பட்டுள்ளது. தமிழ்நாட்டை பொறுத்தமட்டில், கொரோனா வைரசினால் 7 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இதில் 2 பேர் வெளிநாட்டினர். 5 பேர்களில் தமிழ்நாட்டைச் சேர்ந்த 4 பேர்களும், ஒரு வட மாநிலத்தை சேர்ந்தவரும் ஆவார்கள். அவர்களுடன் யார்? யார்? தொடர்பு கொண்டார்களோ, அவர்களை எல்லாம் தேடி கண்டுபிடித்து அவர்களையும் தனிமைப்படுத்தி, மருத்துவ பரிசோதனையில் ஈடுபடுத்தும் மிகத் தீவிரமான நடவடிக்கைகளை தமிழகஅரசின் சுகாதாரத்துறை எடுத்து வருகிறது. ஆக இனி இந்தியாவில், குறிப்பாக தமிழ்நாட்டில் ரொம்ப கவனமாக இருக்க வேண்டும். 

நேற்று இந்தியா முழுவதும் “ஜனதா ஊரடங்கு” என்று சொல்லப்படும் மக்கள் ஊரடங்கு கடைப்பிடிக்கப்பட்டது. பிரதமரின் வேண்டுகோளின்படி, நேற்று காலை 7 மணி முதல் இரவு 9 மணி வரை இந்தியா அசைவே இல்லாமல் இருந்தது. தமிழ்நாட்டை பொறுத்தமட்டில், இன்று காலை 5 மணி வரை ஊரடங்கு நீட்டிக்கப்பட்டது. தலைநகரமாம் சென்னை உள்பட தமிழ்நாடு முழுவதிலும் சாலையில் மக்கள் நடமாட்டமே இல்லை. வாகனப் போக்குவரத்தும் இல்லை. மருந்து கடைகள் தவிர, வேறு எந்த கடைகளும் திறக்கப்படவில்லை. இதுவரையில் இப்படி ஒருநிலை இருந்தது இல்லை என்று கூறப்படும் அளவுக்கு ஒட்டுமொத்த தமிழ்நாடே ஸ்தம்பித்துப்போய்விட்டது.

பிரதமர் மோடி கூறியதுபோல, கடந்த 2 மாதங்களாக மருத்துவமனைகளில், பணிபுரியும் டாக்டர்கள், நர்சுகள், மக்கள் சேவையில் ஈடுபடும் அரசு ஊழியர்கள், காவல் துறையினர், ஊடக பணியாளர்கள், ரெயில், பஸ், மற்றும் ஆட்டோ ரிக்‌ஷா சேவைகளில் ஈடுபட்டோர் மற்றும் வீடுகளுக்கே பொருட்களை கொண்டு வந்து சேர்ப்பவர்கள் போன்ற தங்களைப்பற்றி கவலைப்படாமல், பிறருக்காக அயராது பணிபுரிவோருக்கு நன்றி தெரிவிக்கும்வகையில், நேற்று மாலை 5 மணிக்கு முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி, துணை முதல்-அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் மற்றும் நடிகர் ரஜினிகாந்த் உள்பட பெருவாரியான மக்கள் தங்கள் வீட்டு வாசலில், பால்கனியில், ஜன்னல் ஓரம் நின்று கொண்டு, கைகளைத்தட்டி, மணிகளை ஒலித்தது, “இதுதான் தமிழ்நாடு” என்ற உணர்வை ஏற்படுத்தியது. 

இந்த ஒருநாளோடு கொரோனா வைரஸ் தடுப்பு நடவடிக்கையில் மக்களின் முழுமையான ஈடுபாடு நின்றுவிடக்கூடாது. இதேபோல, வரும் நாட்களிலும், ஒவ்வொரு நாளும், தேவையற்ற நடமாட்டத்தை குறைக்க வேண்டும். அனைத்து முன்எச்சரிக்கை நடவடிக்கைகளையும் முழுமையாக கடைப்பிடிக்க வேண்டும். இந்திய அரசை பொறுத்தமட்டில், வெளிநாடுகளில் இருந்து வரும் விமான போக்குவரத்து தடை செய்யப்பட்டுள்ளது. 

இனி வெளிநாடுகளில் இருந்து கொரோனா பரவிவிடுமோ என்ற அச்சம் தேவையில்லை. வருகிற 31-ந்தேதி வரை மின்சார ரெயில்கள் உள்பட அனைத்து பயணிகள் ரெயில்களும் முழுமையாக ரத்து செய்யப்பட்டுள்ளது. இப்போது சென்னை, காஞ்சீபுரம், மாவட்டங்கள் முழுமையாக முடக்கப்பட்டுள்ளன. தமிழ்நாட்டில் கொரோனா பரவாமல் தடுக்க அரசும், மக்களும் மிக விழிப்புடன் இருக்க வேண்டிய தருணம் தொடங்கிவிட்டது.

தொடர்புடைய செய்திகள்

1. பொது மக்கள்தான் எச்சரிக்கையோடு இருக்க வேண்டும்
உலகம் முழுவதும் அனைத்து நாடுகளிலும் மற்ற பிரச்சினைகளையெல்லாம் பின்னுக்கு தள்ளிவிட்டு கொரோனா பிரச்சினைதான் முன்னால் நிற்கிறது. இது மனிதர்களிடம் இருந்துதான் மனிதர்களுக்கு பரவுகிறது. கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டவர் இருமும்போதோ, தும்மும்போதோ அல்லது பேசும்போதோ தெறிக்கும் துளிகளில் இருந்து பரவுகிறது.
2. உலகம் முழுவதும் பரவும் கொள்ளை நோயா?
கடந்த டிசம்பர் மாதம் 8–ந்தேதி உலகிலேயே முதல் முறையாக கொரோனா வைரஸ் மூலம் ‘‘கோவிட் 19’’என்ற கொடிய நோய் சீனாவில் உருவாகியது. முதலில் சீனாவில் பரவிய இந்த நோய், அடுத்து ஹாங்காங், ஜப்பான் என்று பரவத்தொடங்கி, இன்று உலகம் முழுவதும் 70 நாடுகளுக்கும் மேல் பரவி, எங்கே உலகம் முழுவதிலும் உள்ள மற்ற நாடுகளையும் தாக்கிவிடுமோ? என்ற அச்சத்தில் உலகமே உறைந்துபோய் நிற்கிறது.
3. பெண் குழந்தைகள் பாதுகாப்பு நாள்
பொதுவாக மறைந்த தலைவர்களின் பிறந்த நாட்களை அவர்களது நினைவைப்போற்றும் வகையிலும், அவர்கள் நாட்டுக்கு ஆற்றிய பங்கை நினைவுகூரும் வகையிலும், சீரும் சிறப்புமாக கொண்டாடப்படுவது வழக்கம். பல விழாக்கள் அரசு விழாக்களாக கொண்டாடப்படுகின்றன.
4. குடியுரிமை திருத்த சட்டத்திற்கு என்னதான் தீர்வு?
குடியுரிமை திருத்த சட்டம் நாடு முழுவதும் பெரிய கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது. கடந்த டிசம்பர் மாதம் நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் குடியுரிமை திருத்த மசோதாவை நிறைவேற்றி, ஜனாதிபதியின் ஒப்புதலும் பெற்று சட்டமாகிவிட்டது.
5. காவிரி டெல்டா விவசாயிகளின் மகிழ்ச்சி
ஏறத்தாழ 28 லட்சம் ஏக்கர் நிலப்பரப்பில் காவிரி டெல்டா விவசாயிகள் குறுவை, சம்பா மற்றும் தாழடி நெல்சாகுபடிகளை செய்து வருகிறார்கள். 33 லட்சம் டன் நெல் விளைச்சல் இந்த பகுதிகளில் இருந்துதான் கிடைக்கிறது.