தயவு செய்து லேசாக எடுத்துக்கொள்ளாதீர்கள்


தயவு செய்து லேசாக எடுத்துக்கொள்ளாதீர்கள்
x
தினத்தந்தி 24 March 2020 10:30 PM GMT (Updated: 24 March 2020 5:45 PM GMT)

இன்று உலகம் முழுவதுமே கொரோனா வைரஸ் பயத்தால் நடுநடுங்கிக்கொண்டு இருக்கிறது.

ன்று உலகம் முழுவதுமே கொரோனா வைரஸ் பயத்தால் நடுநடுங்கிக்கொண்டு இருக்கிறது. கடந்த டிசம்பர் மாதம் சீனாவில் உள்ள உகான் நகரில் தொடங்கிய இந்த கொடிய வைரஸ், பெரும்பாலான நாடுகளை தன் ஆக்டோபஸ் கரங்களால் தீண்டிவிட்டது. இந்தியாவில் 500 பேருக்கும் மேல் பாதிக்கப்பட்டுள்ளதாக இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் அதிகாரப்பூர்வமாக தெரிவித்துவிட்டது. இதுவரையில் 9 பேர் உயிரிழந்து இருக்கிறார்கள். தமிழ்நாட்டை பொறுத்தமட்டில், பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 15 பேர் என்றும், நேற்று முன்தினமும் நேற்றும் தலா 3 பேருக்கு பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளதாகவும் சுகாதாரத்துறை அமைச்சர் டாக்டர் விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார். 15,298 ஆயிரம் பேர் வீடுகளில் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர். 116 பேர்கள் மருத்துவமனையில் மருத்துவ பரிசோதனையில் உள்ளனர். இதுவரையில் வெளிநாடுகளில் இருந்தவர்களுக்குத்தான் கொரோனா பாதிப்பு ஏற்பட்டு வந்தது. ஆனால், முதல் முறையாக மதுரை அண்ணாநகரை சேர்ந்த 54 வயதுள்ள ஒருவர் எந்த வெளிநாட்டுக்கும் சென்றுவராத நிலையில் பாதிக்கப்பட்டுள்ளார். ஆக, வெளிநாட்டு பயணம் மேற்கொள்ளாத ஒருவர் முதல்முறையாக பாதிக்கப்பட்டுள்ளது மிகுந்த அதிர்ச்சியை அளித்துள்ளது. இவருக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு யார் மூலம் ஏற்பட்டது, அவருக்குள்ள தொடர்பு என்னென்ன என்பதையெல்லாம் ஆராய்ந்துகொண்டு இருக்கிறார்கள். ஆக, தமிழ்நாட்டில் வெளிநாட்டு பயணம் மேற்கொள்ளாதவர்களுக்கும்கூட கொரோனா வைரஸ் பாதிப்பு ஏற்படுகிறது என்று அபாய எச்சரிக்கை மணி அடிக்கப்பட்டுவிட்டது. 

கொரோனா வைரஸ் பாதிப்பை மக்கள் லேசாக எடுத்துக்கொள்ளக்கூடாது. எந்தநேரத்திலும் யாருக்கும் பாதிப்பு ஏற்படலாம் என்ற எச்சரிக்கை உணர்வோடு எல்லோரும் நமக்கும் இந்த பாதிப்பு வந்துவிடக்கூடாது என்று விழிப்போடு இருக்கவேண்டும். இந்தியாவில் 30 மாநிலங்கள், 7 யூனியன் பிரதேசங்கள் முழுமையாக முடக்கப்பட்டுள்ளன. மராட்டியம், கேரளா, பஞ்சாப் போன்ற மாநிலங்களில் முழு ஊரடங்கு அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழ்நாட்டில் நேற்று மாலை 6 மணிமுதல் 31–ந்தேதிவரை 144 தடை உத்தரவு அமலுக்கு வந்துள்ளது. இதன்படி, அத்தியாவசிய, அவசர பணிகளைத்தவிர, மற்ற போக்குவரத்து, தனியார் போக்குவரத்து, கார், ஆட்டோ, டாக்சி போன்றவை இயங்காது என்று அறிவிக்கப்பட்டுள்ளது. அரசு தன் அறிவிக்கையில் பல கட்டுப்பாடுகளை விதித்துள்ளது. அதை அப்படியே பின்பற்றவேண்டும். பொதுமக்களும் தேவையில்லாமல் வெளியே செல்லக்கூடாது. அடிக்கடி சோப்புபோட்டு கைகளை கழுவவேண்டும். 5 பேருக்கும் மேல் இருக்கும் கூட்டத்தில் தானும் ஒருவராக நிச்சயம் இருக்கக்கூடாது. ஒருவருக்கொருவர் கண்டிப்பாக 6 அடி இடைவெளி விடவேண்டும். கொரோனாவால் பாதிக்கப்பட்டவர் இருமும்போதும், தும்மும்போதும் வெளியிடும் நீர்த்துளிகளாலோ, அவர்கள் தொட்ட பொருட்களை தொடுவதாலோ, கொரோனா வைரஸ் பரவும் என்பதால் தேவையில்லாமல் எதையும் தொடுவதோ, எல்லோருடனும் நெருங்கி பழகுவதோ கூடாது. கொரோனா வைரஸ் ஒருவர் உடலில் உட்புகுந்தால் 14 நாட்கள்வரை கண்டுபிடிக்க முடியாது. எனவே, யாருக்கு கொரோனா வைரஸ் இருக்கிறது என்பது யாருக்கும் தெரியாது. 

இந்த சூழ்நிலையில், தமிழக அரசு 144 தடை உத்தரவை அப்படியே முழுமையாக பின்பற்றவேண்டியது மக்களின் கடமையாகும். அரசும் தீவிரமாக அமல்படுத்தவேண்டும். மக்கள் இதை இன்னும் பெரிதாக எடுத்துக்கொள்ளவில்லை என்பதை பிரதமர் தனது டுவிட்டர் செய்தியில் வருத்தத்துடன் தெரிவித்துள்ளார். பெரும்பாலான மக்கள் இன்னும் மாநிலங்கள் முடக்கப்பட்டதை தீவிரமாக எடுத்துக்கொள்ளவில்லை. தயவுசெய்து உங்களை காப்பாற்றிக்கொள்ளுங்கள், உங்கள் குடும்பத்தை காப்பாற்றுங்கள். அரசு வெளியிட்டுள்ள அறிவுரைகளை மிகக்கவனமாக பின்பற்றுங்கள். மாநில அரசுகளும், விதிகளும், சட்டங்களும் முறையாக பின்பற்றப்படுவதை உறுதி செய்ய வேண்டும் எனக் கூறியுள்ளார். மொத்தத்தில், மக்கள் இந்தக்கொடிய அரக்கன் தங்கள்மீது விழுந்துவிடக்கூடாது என்பதில் மிகுந்த எச்சரிக்கையுடனும், முன்னெச்சரிக்கையுடனும் இருக்கவேண்டும்.

Next Story