எம்.பி.க்கள் நிதி 2 ஆண்டுகளுக்கு இல்லை


எம்.பி.க்கள் நிதி 2 ஆண்டுகளுக்கு இல்லை
x
தினத்தந்தி 9 April 2020 10:30 PM GMT (Updated: 2020-04-10T00:18:17+05:30)

எம்.பி.க்கள் நிதி 2 ஆண்டுகளுக்கு இல்லை.


உலகமே சுழலாமல் அப்படியே நின்றுபோய் விட்டதோ என்று எண்ணும் வகையில், கொரோனா என்ற கொடிய அரக்கனின் பிடியில் சிக்கி எல்லோரும் தவிக்கிறார்கள். இதில் அந்த நாடா? இந்த நாடா? என்ற பேதமில்லை. எல்லா நாடுகளும் பாதிக்கப்பட்டுள்ளன. வேகமான பொருளாதார வளர்ச்சியை கண்டுகொண்டிருந்த இந்தியா, இப்போது நிலைக்குத்தி நின்றுகொண்டிருக்கிறது. மத்திய-மாநில அரசுகளின் மொத்த கவனமும் கொரோனாவை விரட்டினால்தான் மற்ற வளர்ச்சி, சமூகநலத்திட்டங்கள், மக்களுக்கான திட்டங்களில் கவனம் செலுத்த முடியும் என்றநிலை இருக்கிறது. இந்த நிலையில், அரசாங்கத்தின் நிதி முழுமையும் கொரோனா ஒழிப்புக்காகவே செலவழிக்கப்படுகிறது. அரசுக்கு வருமானம் இல்லாத நிலையில், கொரோனா ஒழிப்புக்கான செலவுக்கு, மற்ற எந்த செலவை குறைக்கலாம், எந்த நிதியை ரத்து செய்யலாம் என்று பூதக்கண்ணாடி வைத்து மத்திய-மாநில அரசுகள் தேடிக்கொண்டு இருக்கின்றன. முதலில் பிரதமர், அமைச்சர்கள், எம்.பி.க்கள் வழிகாட்ட வேண்டும் என்ற வகையில், மத்திய அமைச்சரவையில் அனைத்து நாடாளுமன்ற உறுப்பினர்கள் சம்பளத்திலும் 30 சதவீதத்தை குறைப்பது என முடிவு எடுக்கப்பட்டது. இதுபோல, ஒவ்வொரு எம்.பி.க்கும் ஒரு ஆண்டுக்கு ஒதுக்கப்பட்டிருக்கிற ரூ.5 கோடி தொகுதி மேம்பாட்டு நிதி, இனி 2 ஆண்டுகளுக்கு கிடையாது. அதன் மூலம் கிடைக்கும் ரூ.7,800 கோடி அரசின் தொகுப்பு நிதியில் சேர்க்கப்பட்டு, அந்த தொகை கொரோனா ஒழிப்புக்கான மருத்துவ உள்கட்டமைப்பு வசதிகளுக்காக செலவழிக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்த அறிவிப்பையொட்டி, ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த், துணை ஜனாதிபதி வெங்கையா நாயுடு மற்றும் மாநில கவர்னர்களும் தாங்களாகவே முன்வந்து தங்கள் சம்பளத்தில் 30 சதவீத தொகையை குறைத்துக் கொள்ள கூறி இருக்கிறார்கள். கடந்த மாதம் மத்திய அரசாங்கம், எம்.பி.க்கள் தங்கள் தொகுதி மேம்பாட்டு நிதியில் இருந்து குறைந்தது ரூ.5 லட்சமாவது அந்த தொகுதியில் உள்ள அரசு மருத்துவமனைகளுக்கு தேவையான மருத்துவ உபகரணங்கள் வாங்க வழங்கலாம் என்று அறிவித்து இருந்தது. இதுபோல, முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமியும் தமிழ்நாட்டில் உள்ள 234 எம்.எல்.ஏ.க்களுக்கும் வழங்கப்படும் தொகுதி மேம்பாட்டு நிதியில் இருந்து ரூ.1 கோடி எடுத்து கொரோனா ஒழிப்புக்காக செலவழிக்கப்படும் என்று அறிவித்துள்ளார். எம்.பி.க்கள் தொகுதி மேம்பாட்டு நிதியை அரசு ரத்து செய்வதற்கு பலத்த எதிர்ப்பு கிளம்பியுள்ளது. 1993-ம் ஆண்டு டிசம்பர் மாதம் அப்போதைய பிரதமர் நரசிம்மராவ் இந்த தொகுதி மேம்பாட்டு திட்டத்தை அறிவித்ததில் இருந்தே ஏராளமான தலைவர்கள் இதை ரத்து செய்யவேண்டும் என்று வலியுறுத்தி வந்தனர். அப்போது சபாநாயகராக இருந்த சோம்நாத் சட்டர்ஜி, மாவட்ட நிர்வாகம் முடிவு செய்ய வேண்டிய முன்னுரிமை திட்டங்களுக்கு இது இடைஞ்சல் செய்கிறது என்று அறிவித்தார். 2005-ம் ஆண்டு சோனியா காந்தி தலைமையில் இருந்த தேசிய ஆலோசனை கவுன்சிலும் இதை ரத்து செய்யும்படி பரிந்துரை செய்தது. முன்னாள் கர்நாடக முதல்-மந்திரி வீரப்பமொய்லி தலைமையில் அமைக்கப்பட்ட 2-வது நிர்வாக சீர்திருத்த ஆணையமும் இதை ரத்து செய்ய பரிந்துரை செய்தது. இப்படி பல பரிந்துரைகளுக்கு இடையேதான் இந்த தொகுதி மேம்பாட்டு நிதி திட்டம் நீடித்து வந்தது.

நாட்டில் தற்போது ஒரு அசாதாரண நிலை நிலவுகிறது. இந்த நிலையைப்போக்க, ஒவ்வொருவரும் தியாகங்களை செய்யவேண்டும். அந்த வகையில், மத்திய மந்திரிகளும் சரி, தமிழக அமைச்சர்களும் சரி, நாடாளுமன்ற, சட்டமன்ற உறுப்பினர்களும் சரி, தியாகம் செய்ய தங்களுக்கு கிடைத்த வாய்ப்பாக கருதி இதை முழுமனதுடன் ஏற்றுக்கொள்ளவேண்டும். தொகுதி மேம்பாட்டு நிதியில் கைவைத்த மத்திய அரசாங்கம், ஒவ்வொரு தொகுதியிலும் அந்தந்த நாடாளுமன்ற உறுப்பினர்கள் கொரோனா ஒழிப்புக்காக என்னென்ன பரிந்துரைகளை செய்கிறார் களோ, அதை நிறைவேற்றுவதற்கு பரிசீலிக்கவேண்டும். தமிழக அரசும் இதே நடைமுறையைப் பின்பற்றலாம்.

Next Story