தாங்காதய்யா; தாங்காது


தாங்காதய்யா; தாங்காது
x
தினத்தந்தி 11 April 2020 12:45 AM GMT (Updated: 11 April 2020 12:45 AM GMT)

தாங்காதய்யா தாங்காது.


ஒட்டுமொத்த இந்தியாவும், இன்று பிரதமர் நரேந்திரமோடி, மாநில முதல்-மந்திரிகளுடன் காணொலி காட்சி மூலம் நடத்தும் கலந்துரையாடலுக்குப் பிறகு என்ன அறிவிப்பு வெளியாகப்போகிறதோ? என்று ஆவலுடன் எதிர்பார்த்துக் கொண்டு இருக்கிறது. கடந்த மாதம் 24-ந்தேதி முதல் கொரோனா வைரஸ் பாதிப்பை ஒழிக்க நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப் பட்டது. ஏற்கனவே மாநில முதல்-மந்திரிகளுடன், பிரதமர் மோடி நடத்திய கூட்டத்தில் படிப்படியாக ஊரடங்குச் சட்டத்தை தளர்த்த எல்லோரும் பொதுவான ஒரு செயல்திட்டத்தை வகுத்துக்கொண்டு அடுத்த கூட்டத்திற்கு வரும்படி கேட்டுக்கொண்டார். ஊரடங்குச் சட்டம் அறிவிக்கப்பட்டதில் இருந்து நாடே முடங்கிப்போய்விட்டது. தொழிற்சாலைகள் எல்லாம் இயங்கவில்லை. உற்பத்தி வீழ்ச்சி, விற்பனை வீழ்ச்சி, வியாபார வீழ்ச்சி, ஒட்டு மொத்தத்தில் பொருளாதாரம் அதல பாதாளத்துக்கு சென்றுவிட்டது. இந்தியா முழுவதும் முறைசாரா தொழில்களில் அதாவது, அன்றாடம் வேலைக்கு சென்றால்தான் சம்பளம் என்ற நிலையில் உள்ள 40 கோடிக்கும் மேலான தொழிலாளர்கள் வறுமைக்குள் தள்ளப்பட்டுவிடும் நிலை இருக்கிறது என்றும், 19 கோடியே 50 லட்சம் பேர் முழுநேர வேலையை இழக்கும்நிலை ஏற்படும் என்றும், ஐ.நா. தொழிலாளர் அமைப்பு எச்சரிக்கை விடுத்துள்ளது.

முறைசாரா தொழில்களில் உள்ள தொழிலாளர்கள் தமிழ்நாட்டில்தான் கணிசமான எண்ணிக்கையில் இருக்கிறார்கள். தமிழக அரசு நிவாரண உதவிகள் அளித்தாலும், எல்லோருக்கும் அது போய்ச்சேரவில்லை. விவசாயம், சிறு, குறு, நடுத்தர தொழிற்சாலைகள், ஏன் பெரிய நிறுவனங்கள்கூட வருவாய் பாதிப்பினால் விழிபிதுங்கிப் போய்நிற்கின்றன. கொரோனாவை ஒழிக்க தீவிர நடவடிக்கைகளை மத்திய-மாநில அரசுகள் எடுத்துவரும் நிலையில், இதன் கொடிய பாதிப்பால் வீழ்ந்து கிடக்கும் விவசாயம், தொழில் நிறுவனங்கள், வர்த்தக நிறுவனங்கள் தலை தூக்க அனைத்து உதவிகளையும் செய்யவேண்டும். இன்னும் அந்தப்பக்கம் மத்திய அரசும் சரி, தமிழக அரசும் சரி திரும்பவே இல்லை என்பது பெரிய மனக்குறையாக இருக்கிறது. உலகில் பல நாடுகள் இத்தகைய தொழில் நிறுவனங்களுக்கு உதவிக்கரம் நீட்டி இருக்கின்றன. இந்த 21 நாட்கள் பாதிப்பிலேயே மக்கள் அதுவும் நலிந்த மக்கள் சுருண்டு போய்விட்டார்கள். இப்போதே சமையல் பொருட்கள், குறிப்பாக கோதுமை மாவு, பருப்பு போன்ற அத்தியாவசிய பொருட்களுக்கு தட்டுப்பாடு தொடங்கிவிட்டது. மாதச்சம்பளம் வாங்கு பவர்கள் வேலைக்கு போனாலும் சரி, போகா விட்டாலும் சரி, சம்பளம் எப்படியும் வந்துவிடும் என்ற நம்பிக்கையில் ஊரடங்கு சட்டத்தை நீடித்தால் பெரிதும் பொருட்படுத்த மாட்டார்கள். அதனால் அவர்களுக்கு பாதிப்பும் இருக்காது. ஆனால், இப்போதே எப்படி வாழ்க்கை நடத்தப்போகிறோம் என்ற அச்சத்தில் உறைந்துபோய் நிற்கும் மற்ற மக்களால் வாழ்க்கை நடத்தவே முடியாது.

ஒரு பக்கம் தொழில்கள் முடக்கம், வர்த்தகம் முடக்கம், மக்களின் அன்றாட வாழ்க்கை பாதிப்பு என்ற நிலைக்கு மேல் இன்னும் ஊரடங்குச் சட்டத்தை நீட்டித்தால் மக்கள் “தாங்காதய்யா தாங்காது” என்று தவித்துவிடுவார்கள். மக்களுக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுவிடக்கூடாது. அவர்களது சகஜவாழ்க்கையும் பாதித்துவிடக்கூடாது. பசி, பட்டினி என்ற நிலை யாருக்கும் ஏற்பட்டுவிடக்கூடாது என்ற நிலையில் மத்திய அரசும், தமிழக அரசும் இதில் தீவிர கவனம் செலுத்தி முடிவுகளை எடுக்க வேண்டும். சமூக இடைவெளியை கண்டிப்பாக நடைமுறைபடுத்தி கட்டுப் பாடுகளுடன் கூடிய ஒரு முறையில் ஊரடங்கு உத்தரவை படிப்படியாகத் தளர்த்த யோசிக்கலாம். ஒரு வேளை அதற்கான சூழ்நிலை இல்லை, ஊரடங்கு உத்தரவை நீட்டித்துத்தான் ஆகவேண்டும் என்றால், எல்லோருக்கும் பையில் பணம் இருக்கும் வகையிலும், அனைத்து பொருட்களும் தட்டுப்பாடு இல்லாமல் வீட்டு வாசலுக்கே வந்து சேரும் என்ற நிலையையும் உருவாக்கவேண்டும். மக்களுக்கு அளிக்கும் நிவாரண உதவிகளைப்போல, பாதிக்கப்பட்ட தொழில் நிறுவனங்கள், வர்த்தக நிறுவனங்கள் அனைத்துக்கும் உதவிக்கரம் நீட்ட வேண்டும். உதவி என்பது இப்போது சாதாரண மக்களுக்கு மட்டுமல்ல, தொழில் நிறுவனங்களுக்கும் தேவைப்படும் ஒன்றாகும்.

Next Story