இந்த தியாக சீலர்களை எவ்வளவு பாராட்டினாலும் தகும்


இந்த தியாக சீலர்களை எவ்வளவு பாராட்டினாலும் தகும்
x
தினத்தந்தி 12 April 2020 10:30 PM GMT (Updated: 2020-04-12T22:35:23+05:30)

இந்த தியாக சீலர்களை எவ்வளவு பாராட்டினாலும் தகும்.


கொரோனா வைரஸ் அபாயத்தால் நாடு முழுவதும் ஊரடங்கு சட்டம் அமல்படுத்தப்பட்டுள்ளது. மக்கள் அனைவரும் வெளியே வரவேண்டாம், வீட்டிலேயே இருங்கள், பாதுகாப்பாக இருங்கள், விலகியே இருங்கள் என்று மத்திய-மாநில அரசுகள் அறிவுரைகள் வழங்கி யுள்ளன. எல்லோருமே கொரோனாவுக்கு பயந்து வீட்டிலே இருந்து வாழ்க்கையை நடத்தினாலும், நாம் பாதுகாப்பாக இருப்பதற்காக டாக்டர்கள், நர்சுகள், மருத்துவப்பணி யாளர்கள், தூய்மைப்பணியாளர்கள், காவல்துறையினர், அத்தியாவசிய பணியில் உள்ள அரசு ஊழியர்கள், விவசாயிகள், அத்தியாவசிய பண்டங்களை கொண்டு போய்ச் சேர்க்க லாரிகளை ஓட்டும் டிரைவர்கள், வியாபாரிகள், வீட்டுக்கே பொருட்களை கொண்டுவந்து சேர்க்கும் பணியில் உள்ளோர், குடிநீர், மின்சார ஊழியர்கள், உள்ளாட்சி அமைப்பு ஊழியர்கள், ஊடகத்தினர் என்று ஒரு பட்டாளமே நமக்காக தங்கள் உயிரையும் பொருட்படுத்தாமல், வீடுகளில் இருக்காமல் வீதிகளில் இறங்கிப் பணியாற்றி வருகிறது. நாம் வீட்டில் சுகமாக இருக்கிறோம். அவர்கள் நம் நல்வாழ்வுக்காக வீதியிலும், வெளியேயும் நின்று அல்லல்படுகிறார்கள். ஏற்கனவே கடந்த மார்ச் மாதம் 22-ந் தேதி பிரதமர் இந்த தியாக சீலர்களுக்கு நமது நன்றியை தெரிவிக்க வேண்டும் என்று மாலை 5 மணிக்கு நாட்டு மக்கள் அனைவரும் வீட்டு வாசலிலோ, பால்கனியிலோ, ஜன்னல் அருகிலோ நின்றுக்கொண்டு 5 நிமிடங்கள் அவர்களுக்கு நன்றி தெரிவிக்க வேண்டும். நாம் நமது கைகளைத்தட்டி, தட்டுகளை அடித்து, மணிகளை ஒலித்து அவர்களது மன உறுதியை ஊக்குவிக்கும் வகையில் அவர்களது சேவைக்கு தலைவணங்க வேண்டும் என்று விடுத்த வேண்டுகோளை ஏற்று, நாட்டு மக்கள் அவர்களுக்கு நன்றி தெரிவித்தனர். அந்த நன்றி இன்று மட்டுமல்ல, என்றென்றும் தொடரும்.

இப்போது சென்னை ஐகோர்ட்டில் நீதிபதிகள் என்.கிருபாகரன், ஆர்.ஹேமலதா ஆகியோர் ஒரு வழக்கில் பிறப்பித்துள்ள உத்தரவில், “கொரோனாவுக்கு எதிராக நடைபெறும் போரில் முன்னணி போர் வீரர்களாக நிற்பவர்கள் டாக்டர்கள், நர்சுகள், மருத்துவப்பணியா ளர்கள், தூய்மைப்பணியாளர்கள், காவல்துறையினர் உள்ளிட்டோர்தான். எனவே, அவர்களுக்கு இந்த கொடிய வைரஸ் பரவாமல் இருக்க போதிய உயிர்காக்கும் கவசங்களை வழங்க வேண்டும். தங்களின் இன்னுயிரையும் பொருட்படுத்தாது சேவை புரிந்துவரும் டாக்டர்கள், நர்சுகள், மருத்துவப்பணியாளர்கள், சுகாதாரப்பணியாளர்கள், தூய்மைப்பணியாளர்கள், போலீஸ்காரர்கள் உள்ளிட்டோருக்கு எங்களது பாராட்டுகளை தெரிவித்துக்கொள்கிறோம். இவர்களது பணி மகத்தானது. 24 மணி நேரமும் பணியாற்றி வரும் இவர்களுக்கு தற்போது வழங்கப்பட்டுவரும் ஊதியம் போதுமானதாக இல்லை. எனவே, இவர்களுக்கு மத்திய-மாநில அரசுகள் ஊதிய உயர்வு அளிக்கும் என நம்புகிறோம். நாங்கள் எதிர்பார்க்கிறோம்” என்று தங்களது கருத்தை பதிவு செய்து இருக்கிறார்கள்.

இதில் குறிப்பிடப்பட்டுள்ள டாக்டர்கள், நர்சுகள் போன்றோர் கொரோனா பாதிக்கப்பட்ட நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்கும்போது முழுக்கவச உடை அணிந்து கொள்ளவேண்டும். இந்த உடை 6 அல்லது 7 மணி நேரம்தான் தொடர்ந்து பயன் படுத்தமுடியும். அதற்குமேல் பயன்படுத்த முடியாது. எனவே, இந்த உடையை பயன்படுத்தும் டாக்டர்கள், நர்சுகள் போன்றோர் இந்த 7 மணி நேரமும் தண்ணீர் குடிக்க முடியாது. சாப்பிட முடியாது. இயற்கை உபாதையை தீர்க்க கழிவறைக்கும் போகமுடியாது. கடினமான இந்த உடை அணிந்திருக்கும் போது உடலில் வியர்வை பெருக்கெடுத்து ஓடும். இவ்வாறு சிகிச்சை அளித்துக் கொண்டிருக்கும் டாக்டர்கள், நர்சுகள் சிலருக்கும் இப்போது கொரோனா தொற்று தாக்க தொடங்கி உள்ளது என்ற கவலையளிக்கும் செய்திகளும் வந்துள்ளன. தங்கள் உயிரைப்பற்றி கவலைப்படாமல் இவ்வளவு சீரிய சேவையை செய்யும் டாக்டர்கள், நர்சுகள், மருத்துவப்பணியாளர்கள், அவர்கள் அரசு மருத்துவ மனையில் பணியாற்றினாலும், தனியார் மருத்துவ மனையில் பணியாற்றினாலும் அவர்களது சேவையை மதிக்கும் வகையில் சிறப்பு ஊக்கத்தொகை வழங்கலாம். ஐகோர்ட்டு அளித்த பாராட்டுகளோடு, ஒட்டுமொத்த தமிழ்நாடே எழுந்து நின்று அவர்களுக்கு வணக்கம் செலுத்துகிறது.

Next Story