பிரதமரின் 7 வேண்டுகோள்கள்


பிரதமரின் 7 வேண்டுகோள்கள்
x
தினத்தந்தி 14 April 2020 10:30 PM GMT (Updated: 2020-04-14T22:45:10+05:30)

அனைத்து மக்களும் பின்பற்றவேண்டிய 7 வேண்டு கோள்களை பிரதமர் நரேந்திரமோடி விடுத்துள்ளார்.


உலகம் முழுவதும் அப்படியே ஸ்தம்பித்துப்போன நிலையில், ஒட்டுமொத்த இந்தியாவும் நிலை குலைந்து போய் நிற்கிறது. உலகில், முதல் கொரோனா வைரஸ் பாதிப்பு சீனாவில் உள்ள உகான் நகரில் கடந்த டிசம்பர் 30-ந்தேதி கண்டுபிடிக்கப்பட்டது. இந்தியாவில் முதல் பாதிப்பு கேரளாவில் ஜனவரி 20-ந்தேதியும், தமிழ்நாட்டில் மார்ச் 7-ந்தேதியும் கண்டறியப்பட்டது. மார்ச் மாதம் முழுவதும் காட்டாற்று வெள்ளம்போல எல்லாத் திசைகளிலும் கொரோனா பரவிவிட்டது. இந்தியாவில் மராட்டியம், டெல்லி, தமிழ்நாடு ஆகிய மாநிலங்களில் பாதிப்பு மிக அதிகமாக இருக்கிறது. ஒட்டுமொத்த இந்தியாவில் 10 லட்சம் பேரில், சராசரியாக 6.5 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ள நிலையில், தமிழ்நாட்டில் 13 பேருக்கு மேல் பாதிக்கப்பட்டுள்ளார்கள் என்ற அதிர்ச்சியான செய்தி கிடைத்துள்ளது. இந்தநிலையில், மார்ச் 25-ந்தேதி முதல் ஏப்ரல் 14-ந் தேதி வரை 21 நாட்கள் நாடுமுழுவதும் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்படுகிறது என்று பிரதமர் அறிவித்திருந்தார். நாட்டின் பொருளாதாரம் சீர்குலைந்தது. மக்களின் அன்றாட வாழ்க்கை, வாழ்வாதாரம் எல்லாம் தலைகீழாக மாறிவிட்டது. பற்றாக்குறை தலையெடுத்துள்ளது. தொழில் உற்பத்தி, வர்த்தகம் எல்லாமே ஆழம் காண முடியாத பள்ளத்துக்கு போய்விட்டது.

நேற்று காலை 10 மணிக்கு பிரதமர் நரேந்திரமோடி டெலிவிஷனில் உரையாற்றும்போது, மே 3-ந் தேதிவரை ஊரடங்கு நீட்டிக்கப்படுகிறது. இதற்கான வழிமுறைகள் இன்று அறிவிக்கப்படும். 20-ந் தேதிக்குப்பிறகு சில தளர்வுகள் வெளியிடப்படும் என்று அறிவித்துவிட்டு, அனைத்து மக்களும் பின்பற்றவேண்டிய 7 வேண்டு கோள்களை விடுத்தார். அந்த 7 வேண்டுகோள்களையும் நாடு முழுவதும் ஒரு கட்டளையாக பின்பற்றினால் கொரோனாவை விரட்டவும், இனியும் ஊரடங்கை நீட்டிக்க வேண்டிய அவசியமில்லாமல் கட்டுப்படுத்திவிடவும் முடியும். வீட்டில் உள்ள முதியோரை கண்ணும் கருத்துமாக பார்த்துக்கொள்ளுங்கள். ஊரடங்கை முழுமையாக பின்பற்றி சிறிதும் பிசகாமல் கடைபிடிக்க வேண்டும். வீட்டிலேயே தயாரிக்கப்பட்ட முககவசத்தை எப்போதும் அணிந்து கொள்ள வேண்டும். நமது உடலில் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க ஆயுஷ் அமைச்சக வழிகாட்டு முறைகளை பின்பற்ற வேண்டும். சுடு தண்ணீர் உள்பட சூடான பானங்களையே குடிக்க வேண்டும். அவ்வப்போது வெந்நீரால் கொப்பளிக்க வேண்டும். ஆரோக்கிய சேது செயலியை செல்போனில் பதிவிறக்கம் செய்யவேண்டும். கூடுமான வரையில் ஏழை குடும்பங்களுக்கு உதவுவதோடு, அவர்களுக்கு உணவு அளிக்க வேண்டும். உங்கள் தொழிற் சாலைகளிலும், வர்த்தக நிறுவனங்களிலும் பணிபுரியும் தொழிலாளர்களிடம் பரிவுகாட்டுங்கள். யாரையும் வேலையை விட்டு அனுப்பி விடாதீர்கள். கொரோனா ஒழிப்பில் முன்னணி வீரர்களாக உள்ள டாக்டர்கள், நர்சுகள், தூய்மை பணியாளர்கள், போலீசாரை மதியுங்கள் என்று கூறிவிட்டு, மே 3-ந் தேதிவரை முழுமையாக ஊரடங்கு சட்டவிதிகளை பின்பற்றுங்கள் என்று கூறினார்.

பிரதமர் கூறிய வேண்டுகோள் நிறைவேற்றப்பட வேண்டுமென்றாலும், அதற்கு தேவையான பொருளாதார வசதி, தொழில்முனைவோரிலிருந்து, சாதாரண ஏழை-எளிய மக்கள் வரை இருக்க வேண்டும். கடந்த 21 நாட்களாக எல்லா தொழிலும் அப்படியே முடங்கிப்போன பிறகு வருவாய் இல்லாமல் தத்தளிக்கிறது. வியாபாரமும் படுத்து விட்டது. எந்த தொழிலிலும் வருமானம் இல்லை. தொழில் அதிபர்கள் எல்லோரும் நடைமுறை மூலதனத் திற்கு என்ன செய்யப்போகிறோம்? என்று திணறிக்கொண்டு இருக்கிறார்கள். ஏப்ரல் 1-ந்தேதி கடன் வாங்கியோ, கையில் இருந்த இருப்புகளையெல்லாம் துடைத்து எடுத்தோ சம்பளம் வழங்கிவிட்டார்கள். பையிலே பணம் இல்லை, பையில் இருந்தால்தானே கையில் எடுத்துக் கொடுக்க முடியும். உற்பத்தியோ, வருமானமோ இல்லாத நிலையில், அடுத்த மாதம் தொழில் அதிபர்கள், ஊழியர்களுக்கு சம்பளம் வழங்க வேண்டுமென்றால், டென்மார்க், கனடா, இங்கிலாந்து, மலேசியா, ஆஸ்திரேலியா, அயர்லாந்து, நெதர்லாந்து, நியூசிலாந்து போன்ற பல நாடுகளில் தொழிலாளர்களுக்கு சம்பளம் கொடுக்க தொழில் நிறுவனங்களுக்கு ஓரளவு தேவையான நிதியை அரசாங்கம் வழங்குவது போல, மத்திய-மாநில அரசுகளும், இதுவரை கவனிக்காத தொழில் நிறுவனங்கள் மீதும் உதவிக்கரம் நீட்டினால்தான், தொழிலாளர்களின் வேலையும் பிழைக்கும். அடுத்தமாதம் சம்பளமும் கிடைக்கும்.

Next Story