ஊரடங்கு நேரத்தில் 84 லட்சம் பேருக்கு வேலைவாய்ப்பு


ஊரடங்கு நேரத்தில் 84 லட்சம் பேருக்கு வேலைவாய்ப்பு
x
தினத்தந்தி 15 April 2020 10:30 PM GMT (Updated: 15 April 2020 6:34 PM GMT)

ஊரடங்கு நேரத்தில் 84 லட்சம் பேருக்கு வேலைவாய்ப்பு.


கடந்த மார்ச் மாதம் 25-ந்தேதி முதல் இந்த 14-ந் தேதிவரை அறிவிக்கப்பட்ட ஊரடங்கு உத்தரவு, இப்போது மேலும் 19 நாட்கள் அதாவது, மே 3-ந் தேதிவரை நீட்டிக்கப்படும் என்று பிரதமர் நரேந்திரமோடி நேற்று முன்தினம் அறிவித்திருந்தார். இதுகுறித்து தெளிவான வழிமுறை நாளை வெளியிடப்படும் என்று அப்போது தெரிவித்திருந்தார். ஆனால் அதற்கு முன்பாக நேற்று அதிகாலையிலேயே, வருகிற 20-ந்தேதி முதல் நடைமுறைப்படுத்த வேண்டிய வழிகாட்டு நெறிகளை மத்திய உள்துறை அமைச்சகம் வெளியிட்டது. இதன்படி, ஏற்கனவே இருப்பது போல விமானம், ரெயில், பஸ், மெட்ரோ ரெயில் போக்குவரத்து மீதான தடை நீடிக்கிறது. கல்வி நிறுவனங்கள், சினிமா தியேட்டர்கள், வணிக வளாகங்கள் போன்றவை தொடர்ந்து மூடப்பட்டிருக்கும். அனைத்து சமூக, அரசியல், விளையாட்டு, பொழுது போக்கு, கல்வி, கலாசார, மத ரீதியிலான விழாக்கள், கூட்டங்களுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளன. மத வழிபாட்டுதலங்கள் மூடப்பட்டு இருக்கும். சாவு ஏற்படும் நேரத்தில் 20 பேருக்குமேல் கூட்டம் கூடக்கூடாது. இவ்வாறு பல தடைகள் விதிக்கப்பட்டுள்ள நிலையில், பல இனங்களுக்கு விதிவிலக்கும் அறிவிக்கப்பட்டுள்ளது.

மருத்துவமனைகள், பரிசோதனைக்கூடங்கள், கால்நடை மருத்துவமனைகள், அனுமதி அளிக்கப்பட்டுள்ள தனியார் நிறுவனங்கள் திறந்து இருக்கலாம் என்று கூறப்பட்டுள்ளது. அனைத்து விவசாயப்பணிகள், தோட்டக்கலை பணிகளையும் தொடர்ந்து நடத்தலாம். மீன்பிடித் தொழிலை நடத்தவும், விற்பனை செய்யவும் அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. இதுபோல, முக்கியமான அறிவிப்பாக 100 நாள் வேலைத்திட்டம் சில கட்டுப்பாடுகளோடு நடைமுறைப்படுத்தலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது, கிராமப்புறங்களில் வாழ்வாதாரம் இல்லாமல் தவிக்கும் மக்களுக்கு இது பெரிதும் நன்மை பயக்கும். ஆனால், பணியாற்றும்போது ஒவ்வொருவருக்கும் இடையில் சமூக இடைவெளி விட வேண்டும். முககவசம் அணிந்திருக்க வேண்டும். நீர்பாசனம், நீர்பராமரிப்பு பணிகளுக்கு முன்னுரிமை வழங்க வேண்டும் என்று தெளிவாக கூறப்பட்டுள்ளது.

தமிழ்நாட்டில் ஏற்கனவே முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி கடந்த மாதம் 24-ந்தேதி வெளியிட்ட அறிவிப்பில், மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதித்திட்டத்தின் கீழ் மார்ச் மாதத்தில் பணி புரிந்த தொழிலாளர்களுக்கு 2 நாட்களுக்கான ஊதியம் சிறப்பு ஊதியமாக கூடுதலாக வழங்கப்படும் என்று அறிவித்திருந்தார். ஊரடங்கு உத்தரவினால் நடைபெறாமல் இருந்த 100 நாள் வேலைத்திட்டத்தின் பணிகளை நடத்தலாம் என்று மத்திய அரசாங்கம் அறிவித்து விட்ட பிறகு, தமிழக அரசு 20-ந்தேதி முதல் இதை தொடங்க உத்தரவு பிறப்பிக்க வேண்டும். தமிழ்நாட்டில் இந்த 100 நாள் வேலைத்திட்டத்தில் பணிபுரிய 84 லட்சம் பேர் பதிவு செய்துள்ளனர். அவர்களுக்கு தினக்கூலியாக ஒரு நாளைக்கு அதிகபட்சமாக ரூ.256 வீதம் ஒவ்வொரு வாரமும் கூலி வழங்கப்படுகிறது. மத்திய அரசாங்கத்தின் இந்த அறிவிப்பு, தமிழ்நாட்டில் பதிவு செய்துள்ள 84 லட்சம் பேருக்கும் நிச்சயம் வாழ்வு அளிக்கும். எல்லா ஊர்களிலும் இந்த திட்டப்பணிகள் நடத்தப்பட வேண்டும். இதுபோல, அனைத்து சரக்கு போக்குவரத்துகளுக்கும் அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.

தினசரி பயன்பாட்டுக்கான உணவு, மளிகைப்பொருட்கள், சுகாதார பொருட்கள், பழங்கள், காய்கறிகள், பால்பொருட்கள், இறைச்சி, மீன் விற்கும் சிறு கடைகள் உள்பட அனைத்து கடைகள், தள்ளுவண்டிகள் விற்பனை செய்ய அனுமதிக்கப்பட வேண்டும். அவர்கள் கடைகளை திறப்பது, மூடுவது குறித்து எந்த கட்டுப்பாடும் இல்லாமல் சமூக இடைவெளி விடவேண்டும் என்பதை மட்டும் கட்டுப்பாடாக வைத்து திறக்க அனுமதிக்க வேண்டும் என்று கூறப்பட்டுள்ளது. ஆக, இனி சிறு கடைகள், அத்தியாவசிய பண்டங்கள் விற்கும் கடைகள் எந்தவித கட்டுப்பாடுகளும் இல்லாமல் இயங்கும் என்பதால், மக்கள் அடித்துப்பிடித்து கூட்டமாக செல்ல வேண்டிய அவசியமில்லை. இதுபோன்ற பொருட்களை வாங்கச் செல்லும்போது காரில் சென்றால் டிரைவரோடு சேர்த்து ஒருவரும், இருசக்கர வாகனமாக இருந்தால் ஓட்டிச் செல்லும் ஒருவர் மட்டுமே அனுமதிக்கப் படுவார்கள் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. முத்தாய்ப்பாக பொதுஇடங்களிலும், பணியிடங்களிலும் அனைவரும் முககவசம் கண்டிப்பாக அணிய வேண்டும் என்பது உறுதி யாக்கப்பட்டுள்ளது. மொத்தத்தில், நேற்று வெளியிடப்பட்ட இந்த வழிமுறைகள் 20-ந்தேதி முதல் அன்றாட வாழ்க்கையில் நிச்சயமாக மக்களுக்கு நன்மை பயக்கும்.


Next Story