அன்றாடங் காய்ச்சிகளுக்கு ஆதரவு தேவை


அன்றாடங் காய்ச்சிகளுக்கு ஆதரவு தேவை
x
தினத்தந்தி 17 April 2020 10:30 PM GMT (Updated: 17 April 2020 5:59 PM GMT)

அன்றாடங் காய்ச்சிகளுக்கு ஆதரவு தேவை.


தமிழ்நாட்டில் மாதச்சம்பளம் வாங்குபவர்களின் எண்ணிக்கை கணிசமான அளவு கிடையாது. அன்றாடங் காய்ச்சிகள் அதாவது, அந்தந்த நாளில் வேலைப்பார்த்தால்தான் கையில் கூலி கிடைக்கும். அதை வைத்துத்தான் பிழைப்பு ஓடும் என்ற வகையில் வாழ்க்கை நடத்துபவர்கள்தான் அதிகம். ஒருசில நாட்கள் வேலையில்லை என்றால் அவர்களது நிலைமை மிகவும் பரிதாபமாக மாறிவிடும். அடுப்பைப் பற்றவைக்க முடியாது. வயிறு பட்டினியால் வாடும். மறைந்த கம்யூனிஸ்டு கட்சித்தலைவர் ஜீவா கூறியதுபோல, ‘பாலின்றிப் பிள்ளை அழும், பட்டினியால் தாயழுவாள், வேலையின்றி நாமழுவோம் என் தோழனே வீடுமுச்சூடும் அழும். கையிலொரு காசு மில்லை, கடன் கொடுப்பாரு மில்லை, செய்யும் தொழில் கிட்ட வில்லை என் தோழனே திட்டாட்டம் கொல்லுதடா’ என்ற வகையில் அன்றாடம் வேலையில்லை என்றால், அவர்கள் வாழ்க்கையில் சோககீதங்கள்தான் பாடவேண்டும் என்ற நிலை இருக்கும்.

கொரோனா பாதிப்பினால் ஊரடங்கு உத்தரவு நீட்டிக்கப்பட்ட நிலையில், அமைப்புசாரா தொழிலாளர்கள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளனர். முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி, ‘கட்டிடத்தொழிலாளர் மற்றும் ஓட்டுனர் நலவாரியத்தில் உள்ள ஆட்டோ தொழிலாளர்கள், பதிவு செய்யப்பட்ட நடைபாதை வியாபாரிகளுக்கு தலா ரூ.1,000 நிதி உதவியும், சிறப்பு தொகுப்பாக அவர்களுக்கும், பிறமாநில கட்டுமான மற்றும் அமைப்புசாரா தொழிலாளர்களுக்கும் 15 கிலோ அரிசி, ஒரு கிலோ பருப்பு, ஒரு கிலோ சமையல் எண்ணெய் வழங்கப்படும்’ என்று ஏற்கனவே அறிவித்திருந்தார். அதன்பிறகு அவர் மேலும் விடுபட்டுள்ள தமிழ்நாடு முடிதிருத்துவோர், தமிழ்நாடு சலவை தொழிலாளர், தமிழ்நாடு பனைமர தொழிலாளர், தமிழ்நாடு கைவினை தொழிலாளர், தமிழ்நாடு கைத்தறி மற்றும் கைத்தறி பட்டு நெய்யும் தொழிலாளர், தமிழ்நாடு காலணி, தோல்பொருள் உற்பத்தி மற்றும் தோல் பதனிடும் தொழிலாளர், தமிழ்நாடு ஓவியர், தமிழ்நாடு பொற்கொல்லர், தமிழ்நாடு மண்பாண்ட தொழிலாளர், தமிழ்நாடு வீட்டுப்பணியாளர், தமிழ்நாடு விசைத்தறி நெசவாளர், தமிழ்நாடு சமையல் தொழிலாளர், கிராமிய கலைஞர்கள் ஆகியோருக்கான நலவாரியங்களில் பதிவு செய்த உறுப்பினர்களுக்கு எல்லாம் 1,000 ரூபாய் உதவித்தொகை வழங்கப்படும் என்று அறிவித்திருந்தார். மீண்டும் மீதமுள்ள 12 நலவாரியங்களின் உறுப்பினர்கள் 7 லட்சம் பேருக்கும், 1,370 பட்டாசு தொழிற்சாலைகளில் இ.எஸ்.ஐ. பதிவு செய்த ஒரு லட்சத்து 20 ஆயிரத்து 200 பேருக்கும் தலா ரூ.1,000 வழங்கப்படும் என்று அறிவித்திருந்தார். ஆக, மொத்தம் 35 லட்சத்து 24 ஆயிரத்து 712 பேருக்கு அரசின் நிவாரண உதவியாக தலா ரூ.1,000 கிடைக்கும் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில், தற்போது மேலும் கூடுதலாக 2-வது தவணையாக ரூ.1,000 வழங்கப்படும் என்று அறிவித்து இருக்கிறார். ஆக, இந்த நிவாரணத்தொகையான ரூ.2,000-மும் நலவாரியங்களில் பதிவு செய்யப்பட்டவர்களுக்கு மட்டுமே வழங்கப்படுகிறது. பதிவு செய்யாதவர்களின் எண்ணிக்கை, பதிவு செய்தவர்களின் எண்ணிக்கையைவிட பல லட்சங்கள் இருக்கும் என்று ஒரு ஆய்வு தெரிவிக்கிறது. இதுபோல வெளிமாநில தொழிலாளர்கள் எண்ணிக்கை பல லட்சங்கள் இருக்கும் நிலையில், வெறும் 24 ஆயிரம் பேர்தான் பதிவு செய்துள்ளனர்.

அரசு வழங்கப்போகும் உதவி, பதிவு செய்தவர்களுக்கு மட்டும் என்றால், பதிவு செய்யாமல் வாழும் ஏழை தொழிலாளர்களின் வாழ்வாதாரம் மிகவும் பரிதாபகரமான நிலைக்கு தள்ளப்பட்டுவிடும். அரசு கருணையோடு உதவிசெய்கிறது. அந்த கருணைக்கரங்கள் பதிவு செய்தவர்களை மட்டுமல்லாமல், பதிவு செய்யாதவர்களையும் அரவணைக்கும் வகையில் இருக்க வேண்டும் என்பது அன்றாடங்காய்ச்சிகள் பரிதாபகரமான குரலோடு விடுக்கும் வேண்டுகோளாகும். இதுவரை பதிவு செய்யாதவர்களும், எதிர்காலத்தில் அரசின் உதவியை பெறவேண்டும் என்றால், உடனடியாக பதிவு செய்யவேண்டும் என்பதை மனதில் கொள்ளவேண்டும். நலவாரியங்களில் அரசு திரும்பத் திரும்ப வேண்டுகோள் விடுத்தும் பதிவு செய்யாமல் இருந்தது அவர்களது கவனக்குறைவாகும்.

Next Story