பணப்புழக்கத்தை அதிகரிக்க ரிசர்வ் வங்கியின் உதவி


பணப்புழக்கத்தை அதிகரிக்க ரிசர்வ் வங்கியின் உதவி
x
தினத்தந்தி 19 April 2020 10:30 PM GMT (Updated: 2020-04-19T22:45:43+05:30)

பணப்புழக்கத்தை அதிகரிக்க ரிசர்வ் வங்கியின் உதவி.


கொரோனா பாதிப்பால் இந்தியாவின் பொருளாதார சக்கரம் சுழலாமல் அப்படியே நின்றுவிட்டது. அதை மீண்டும் சுழலவைக்க ஒரு மசகு எண்ணெய் தடவுவதுபோல, ரிசர்வ் வங்கி நிதிச்சந்தைக்கு ரூ.1 லட்சம் கோடி இப்போது கூடுதலாக ஒதுக்கீடு செய்துள்ளது. நாட்டில் சிறு, குறு, நடுத்தர தொழில்கள் உள்பட கனரக தொழில்கள் எல்லாமே அப்படியே இயங்காமல் நின்று போய்விட்டன. இதில் பல தொழிற்சாலைகள் 24 மணி நேரமும் கண்டிப்பாக இயங்க வேண்டிய தொழிற்சாலைகள் ஆகும். விவசாயப் பணிகள் செய்வதற்கு ஆட்களும் கிடைக்காமல், விளைந்த பொருட்களுக்கு செலவு செய்த தொகைக்கூட கிடைக்காமல், பல இடங்களில் வீணாக கொட்டிவிடுகிறார்கள். சில இடங்களில் இப்படி வீணாக கொட்டுவதற்கு பதிலாக, கொஞ்சமாவது கிடைக்கிறதே என்ற எண்ணத்தில் அடிமாட்டு விலைக்கு விற்றுவிடுகிறார்கள். எந்தத் தொழிலும் இல்லாமல், மக்கள் கையில் பணமும் இல்லாமல், வர்த்தகமும் படுத்துவிட்டது. பணப்புழக்கம் சுத்தமாக நின்றுவிட்டது. கடந்த வியாழக்கிழமை தென்னக ரெயில்வேயின் 167-வது ஆண்டு விழா. உலகப்போர்கள் நடந்த நேரத்திலும், 1974-ம் ஆண்டு நடந்த ரெயில்வே ஊழியர்கள் வேலை நிறுத்தத்தின் போதும்கூட இவ்வளவுநாள் பயணிகள் ரெயில்கள் ஓடாமல் இருந்தது இல்லை.

இந்த நிலையில், நாட்டின் நிதிநிலைமைக்கு சற்று உயிரூட்டும் வகையிலும், பணப்புழக்கத்தை சற்று தலையெடுக்கச் செய்யும் வகையிலும், ரிசர்வ் வங்கி, நிதிச்சந்தைக்கு ரூ.1 லட்சம் கோடி கூடுதலாக ஒதுக்கீடு செய்துள்ளது. இதில், வங்கிகளுக்கு மட்டும் தாங்கள் தாராளமாக நிறுவனங்களுக்கும், மக்களுக்கும் கடன் வழங்குவதற்காக ரூ.50 ஆயிரம் கோடி ஒதுக்கப்பட்டுள்ளது. விவசாயிகளுக்கும், சிறு, குறு, நடுத்தர நிறுவனங்கள், வீட்டுவசதி ஆகியவற்றுக்கு எளிதில் கடன் கிடைக்கவேண்டும் என்பதற்காக நபார்டு வங்கிக்கு ரூ.25 ஆயிரம் கோடி, இந்திய சிறுதொழில் வளர்ச்சி வங்கிக்கு ரூ.15 ஆயிரம் கோடி, தேசிய வீட்டுவசதி வங்கிக்கு ரூ.10 ஆயிரம் கோடி என்று வழங்குகிறது. இதுமட்டுமல்லாமல், தற்போதைய நிலையில் வங்கிகள் எந்தவித கஷ்டமும் படாமல், தங்களுக்கு வருமானம் கிடைக்கவேண்டும் என்ற நோக்கில் ரூ.6 லட்சத்து 9 ஆயிரம் கோடியை ரிசர்வ் வங்கிக்கு கடனாக கொடுத்துள்ளது. இந்தத் தொகைக்கு ரிசர்வ் வங்கி அளித்து வந்த 4 சதவீத வட்டி, இப்போது 3.75 சதவீதமாக குறைக்கப்பட்டுள்ளது. இதன் காரணமாக வங்கிகள் இனி தங்களிடம் உள்ள உபரித்தொகையை சற்றும் அலுங்காமல் ரிசர்வ் வங்கிக்கு கொடுத்து வட்டியை பெறும் நிலையில் இருந்து கொஞ்சம் விலகி, தொழில் நிறுவனங்கள், வர்த்தகர்கள், பொதுமக்களுக்கு கூடுதலாக கடன் கொடுக்க முன்வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இதுபோல, வங்கிகளிடமிருந்து வாங்கும் கடன்களை குறித்த காலத்தில் திரும்ப செலுத்த தவறினால், 90 நாட்களுக்குப்பிறகு அவை வராக்கடன்களாக கருதப்பட்டு நடவடிக்கை எடுக்கப்படும். இப்போது அந்த கால அவகாசம் 180 நாட்களாக உயர்த்தப்பட்டுள்ளது. இதுபோல, மாநில அரசுகள் தங்கள் அவசர தேவைகளுக்காக ரிசர்வ் வங்கியிடம் இருந்து பெறும் வழிவகை முன்பணம் என்ற வகையில் கூடுதலாக 60 சதவீதம் கடன் உதவி பெறுவதற்கு செப்டம்பர் 30-ந்தேதிவரை அனுமதி அளிக்கப்படுகிறது. ஆனால், மார்ச் 31-ந்தேதியுடன் முடிவடைந்த நிதி ஆண்டுக்கான ஈவுத்தொகையை வங்கிகள், கூட்டுறவு வங்கிகள், பங்குதாரர்களுக்கு அளிக்க தடைவிதிக்கப்பட்டுள்ளது நிச்சயமாக வங்கி பங்குகளில் முதலீடு செய்தவர்களுக்கு பாதிப்பை ஏற்படுத்தும். கொரோனா பாதிப்பில் படுத்துவிட்ட பொருளாதாரத்தை கைதூக்கிவிட வங்கிகள் சற்று தாராளமாக நடந்து கொள்ளவேண்டும். நிச்சயமாக ரிசர்வ் வங்கி வெளியிட்ட இந்த அறிவிப்புகள் பிரதமர் கூறியதுபோல, வங்கிகள் கடன் வழங்குவதையும், பணப்புழக்கத்தையும் அதிகரிக்கும். நாட்டில் உள்ள சிறு, குறு, நடுத்தர தொழில் நிறுவனங்கள், விவசாயிகள், ஏழைகள் ஆகியோருக்கு உதவியாக இருக்கும்.

Next Story