கொரோனாவுக்கு தமிழ்நாடு மருந்து கண்டுபிடிக்குமா?


கொரோனாவுக்கு தமிழ்நாடு மருந்து கண்டுபிடிக்குமா?
x
தினத்தந்தி 22 April 2020 11:56 PM GMT (Updated: 22 April 2020 11:56 PM GMT)

கொரோனாவுக்கு தமிழ்நாடு மருந்து கண்டுபிடிக்குமா.


உலகில் மனிதன் சந்திரனில்போய் கால்வைக்கும் அளவுக்கு ஆராய்ச்சி செய்து வெற்றி பெற்றுள்ளான். ஆனால், உலகையே ஆட்டிப்படைக்கும் கொரோனாவை தடுக்கவோ, குணப்படுத்தவோ மட்டும் இன்னும் யாரும் மருந்து கண்டுபிடிக்கவில்லை என்பது பெரிய குறை. உலகமே இதற்கான முயற்சியில் தீவிரமாக ஈடுபட்டு கொண்டு இருக்கிறது. பல்வேறு ஆராய்ச்சிகளும் நடந்து வருகின்றன. சமீபத்தில் பிரதமர் நரேந்திரமோடி கூட நமது இளைஞர் சமுதாயம் கொரோனா தடுப்பு மருந்து கண்டுபிடிக்கும் தொடர்பான ஆராய்ச்சிகளில் தீவிரமாக ஈடுபட வேண்டும். ஆயுஷ் மருத்துவத்துறையும் இதற்கான ஆராய்ச்சிகளில் ஈடுபட வேண்டும் என்று வேண்டுகோள் விடுத்தார். இன்றைய சூழ்நிலையில் நம்நாட்டில் கொரோனா பற்றிய பரிசோதனைக்குத்தான் கருவிகள் இருக்கின்றன. குணப்படுத்துவதற்கு மருந்துகள் இல்லை. இதையொட்டி, தமிழ்நாட்டில் உள்ள டாக்டர் எம்.ஜி.ஆர். மருத்துவப் பல்கலைக்கழகம் கொரோனா தடுப்பு மருந்தை கண்டுபிடிக்கும் தீவிர ஆராய்ச்சியில் ஈடுபட்டு வருகிறது. இந்த ஆராய்ச்சியின் முதல்கட்டத்தில் வெற்றி பெற்றுள்ளதாகவும், சில அனுமதிகளை பெற்றபிறகு அடுத்தக்கட்ட ஆராய்ச்சி தொடங்கப்படுகிறது என்றும் துணைவேந்தர் டாக்டர் சுதா சேஷய்யன் தெரிவித்துள்ளார். இந்த முதல்கட்ட ஆராய்ச்சி வெற்றியே, தமிழ்நாட்டுக்கு மிகவும் பெருமை அளிக்கத்தக்கதாகும். இறுதிக்கட்ட ஆராய்ச்சியிலும் வெற்றிபெற்று ஒரு தடுப்பு மருந்தை கண்டுபிடித்துவிட்டால், தமிழ்நாட்டின் புகழ் கொடி, உலகின் உச்சியில் பறக்கும். ஒருபக்கம் ஆங்கில மருத்துவத்தில் இதற்குரிய மருந்துகளை கண்டுபிடிக்கட்டும். மற்றொரு பக்கம் பிரதமரின் வேண்டுகோளை ஏற்று ஆயுர்வேதம், யோகா மற்றும் இயற்கை மருத்துவம், யுனானி, சித்த மருத்துவம் மற்றும் ஓமியோபதி ஆகிய மருத்துவங்களை உள்ளடக்கிய ஆயுஷ் பிரிவும் இதற்கான ஆராய்ச்சியில் தீவிரமாக ஈடுபட வேண்டும்.

சென்னையில், சைதை துரைசாமி மேயராக இருந்தபோது, டெங்கு காய்ச்சல் மாநிலம் முழுவதும் பரவியது. அந்தநேரத்தில் நிலவேம்பு கசாயமும், பப்பாளி இலைச்சாறையும் பயன்படுத்தினால் டெங்குவை தடுக்கமுடியும் என்ற சித்த மருத்துவர்களின் ஆலோசனையை ஏற்று நிலவேம்பு கசாயத்தையும், பப்பாளி இலைச்சாறையும் தயாரிக்கச்சொல்லி, அதை கிண்டியில் உள்ள கிங் இன்ஸ்டிடியூட்டுக்கு அனுப்பி அவர்களின் சான்றிதழை பெற்றார். பின்பு அதை அப்போதைய முதல்-அமைச்சர் ஜெயலலிதாவிடம் எடுத்துச்சென்று விளக்கியநேரத்தில், ஜெயலலிதா அதை தீவிரமாக ஆராய்ந்து தமிழ்நாடு முழுவதும் உள்ள அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகளில் நிலவேம்பு கசாயம் வழங்க அரசு உத்தரவை பிறப்பித்தார். இப்போது மத்திய அரசாங்க ஆயுஷ் அமைச்சகம் கொரோனா சிகிச்சைக்கான மருந்துகளை கண்டுபிடிக்க, இந்த பிரிவுகளுக்கான துறைகளில் அறிவியல் ஆலோசனை அமைப்பிடம் இருந்து முறையான அனுமதியையும், பதிவையும் பெற்று மருந்து தயாரிக்கும் ஆராய்ச்சியில் ஈடுபடலாம் என்று அனுமதி அளித்துள்ளது. கேரளாவில் அந்த மாநில பாரம்பரிய மருத்துவத்தை பயன்படுத்த அரசு உத்தரவு வழங்கியதால்தான் இந்த நோய் கட்டுப்படுத்தப்பட்டதாக கூறப்படுகிறது.

தமிழ்நாட்டிலும் சித்த மருத்துவத்தில் உள்ள கபசுர குடிநீர் போன்ற சில மருந்துகள் உடலில் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகப்படுத்தும். எனவே இந்த மருந்துகள் கொரோனா ஒருவரை பாதிக்காமல் தடுக்கும் என்று கூறுகிறார்கள். தமிழ்நாட்டிலும், இந்திய மருத்துவத்திற்கு என தனித்துறை இருக்கிறது. சென்னையில் சித்த மருத்துவமனை இருக்கிறது, பல நிபுணர்களும் இருக்கிறார்கள். எனவே மத்திய அரசாங்கம் அனுமதி அளித்ததுபோல, தமிழக அரசும் நமது இந்திய மருத்துவத் துறையும், உடனடியாக நல்ல ஆராய்ச்சிகளை மேற்கொண்டு நிலவேம்பு குடிநீர் டெங்குவை கட்டுப்படுத்தியதுபோல, கொரோனா வராமல் தடுப்பதற்கு என்ன பாரம்பரிய மருந்தை பயன்படுத்தலாம்? என்ற ஆராய்ச்சியில் ஈடுபட வேண்டும். ஒருபக்கம் டாக்டர் எம்.ஜி.ஆர். மருத்துவப் பல்கலைக்கழகம், மற்றொரு புறம் இந்திய பாரம்பரிய மருத்துவம் ஆகிய 2 இடங்களிலும் தீவிரமாக ஆராய்ச்சி நடக்கட்டும். கொரோனா தடுப்பு மருந்தையும் கண்டுபிடித்த பெருமை தமிழ்நாடு பெறட்டும்.

Next Story