கொரோனா பரவல் சங்கிலியை தகர்த்து எறிய வேண்டும்


கொரோனா பரவல் சங்கிலியை தகர்த்து எறிய வேண்டும்
x
தினத்தந்தி 23 April 2020 10:30 PM GMT (Updated: 2020-04-24T00:46:40+05:30)

கொரோனா பரவல் சங்கிலியை தகர்த்து எறிய வேண்டும்.


கடந்த ஆண்டு டிசம்பர் மாத இறுதியில் சீனாவில் உகான் நகரில் தொடங்கிய கொரோனா நாடுவிட்டு, நாடுதாண்டி எல்லா நாடுகளிலும் பரவிவிட்டது. தமிழ்நாட்டில் மார்ச் 7-ந்தேதி அன்று ஒருவர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட நிலையில், தொடர்ந்து குதிரை பாய்ச்சலில் வேகமாக பரவி நேற்று வரை 1,683 பேர் பாதிக்கப்பட்டுள்ள நிலை ஏற்பட்டுள்ளது. இந்த கொரோனாவை கட்டுப்படுத்த மத்திய அரசாங்கத்தால் மார்ச் 25-ந்தேதி முதல் ஏப்ரல் 14-ந்தேதி வரை 21 நாட்கள் ஊரடங்கு என்று முதலில் அறிவிக்கப்பட்டது. ஆனால் கொரோனாவின் தாக்கம் 21 நாட்களில் முடிவடையாததால், ஊரடங்கு மேலும் மே மாதம் 3-ந்தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. இந்தநிலையில் மே மாதம் 3-ந்தேதிக்கு மேல் இனியும் நீட்டிக்கப்பட்டால் நிச்சயமாக நாடு தாங்காது. கொரோனாவை பொறுத்தமட்டில் ஒருவருக்கு பாதிப்பு ஏற்பட்டால் அவரோடு தொடர்பு கொண்டவர்கள், அந்த தொடர்பு கொண்டவர்களோடு தொடர்பு கொண்டவர்கள், மீண்டும் அவர்களோடும் தொடர்பு கொண்டவர்கள் என்று சங்கிலித்தொடர்போல நிற்காமல் நீண்டுகொண்டு போகிறது.

மே 3-ந்தேதிக்கு மேல் ஊரடங்கு நீட்டிக்கப்படக்கூடாது என்றால், அடுத்த 7 நாட்களில் இந்த கொரோனா பரவல் சங்கிலி தகர்த்து எறியப்பட வேண்டும். 7 நாட்களுக்குள் கொரோனா பாதிப்பு, முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி சொன்னதுபோல பூஜ்ஜியம் என்றநிலை ஏற்பட்டால்தான் அதற்கு அடுத்து வரும் நாட்களில் இனி கொரோனா பரவாது, நிலைநிறுத்தப்பட்டுள்ளது என்றநிலை உருவாகி மே 3-ந்தேதி ஊரடங்கை தளர்த்தமுடியும். இப்போதே பாதிப்பின் கொடூரம் அதிகமாகிவிட்டது. நிறைய மக்கள் தங்களது வாழ்வாதாரத்தை இழந்து வீடு, வீடாக வந்து ஏதாவது உதவி செய்யுங்கள் என்று கையேந்தும் பரிதாபநிலை கண்ணீரை வரவழைக்கிறது. போதும்.... போதும்.... இந்த அவலநிலை. பொருளாதாரமே சீர்குலைந்து போனநிலையில், மாநில அரசுகளும் அடுத்த மாதம் அரசு ஊழியர்களுக்கு எப்படி சம்பளம் கொடுக்கப்போகிறோம்? என்று திணறுகிறது.

மத்திய அரசாங்க ஊழியர்களுக்கு மாதந்தோறும் வழங்கப்படும் கூடுதல் அகவிலைப்படியும், பென்ஷன்தாரர்களுக்கு வழங்கப்படும் அகவிலைப்படி நிவாரணமும் அடுத்த ஆண்டு ஜூன் 30-ந்தேதி வரை வழங்கப்படாது என்று மத்திய அரசாங்கம் அறிவித்துள்ளது. கேரளாவை பொறுத்தமட்டில் இப்போதே முதல்-மந்திரி பினராயி விஜயன் அடுத்த மாதத்தில் இருந்து கேரள அரசு ஊழியர்களின் சம்பளத்தில் மாதம் 6 நாட்கள் வீதம், 5 மாதங்கள் தொடர்ந்து அதாவது ஒரு மாதச்சம்பளம் பிடித்தம் செய்யப்படும் என்று அறிவித்துவிட்டார். தெலுங்கானா முதல்-மந்திரி சந்திரசேகர ராவ் தன்னுடைய அரசு ஊழியர்களுக்கு 50 சதவீதம்தான் சம்பளம் போடப்படும் என்று அறிவித்துவிட்டார். தமிழக அரசு என்ன அறிவிக்கப்போகிறதோ? அரசாங்கங்களுக்கே இந்தநிலை என்றால் வருமானமே இல்லாமல், மிகுந்த நஷ்டத்தை சுமந்து கொண்டிருக்கும் தொழில் நிறுவனங்கள், வர்த்தக நிறுவனங்கள் தங்கள் ஊழியர்களுக்கு மே மாதம் முழுச் சம்பளம் கொடுப்பது என்பது நிச்சயமாக இயலாத ஒன்றாகும். சட்டியில் இருந்தால்தானே, அகப்பையில் எடுத்துக்கொடுப்பதற்கு. மே மாதம் ஏற்படப்போகும் இந்தநிலை அடுத்தடுத்த மாதங்களில் தொடராமல் இருக்க வேண்டும் என்றால், கொரோனா பரவலை உடனடியாக தடுத்து நிறுத்தியே ஆக வேண்டும். இதற்கு முதலாவதாக பரிசோதனைகளை தீவிரப்படுத்த வேண்டும். கொரோனா பாதிப்பால் தொடர்பு கொண்டவர்கள் அனைவரும் அடையாளப்படுத்தப்பட்டு அவர்கள் வாழும் பகுதி முழுவதும் பரிசோதனைகள் தீவிரப்படுத்தப்பட வேண்டும். தமிழ்நாட்டில் தற்போது 23 அரசு மருத்துவமனைகளிலும், 11 தனியார் மருத்துவமனைகளிலும் உள்ள ஆய்வகங்களில் கொரோனா பரிசோதனை செய்யும் வசதி இருக்கிறது. தினமும் ஏறத்தாழ 7ஆயிரம் பேர்களுக்கு பரிசோதனை நடக்கிறது. இந்த வசதிகளையும், பரிசோதனைகளையும் இன்னும் அதிகப்படுத்த வேண்டும்.

Next Story