ஊரடங்கு நீட்டிப்பா? மக்கள் கையில்தான் இருக்கிறது


ஊரடங்கு நீட்டிப்பா? மக்கள் கையில்தான் இருக்கிறது
x
தினத்தந்தி 26 April 2020 10:30 PM GMT (Updated: 26 April 2020 7:05 PM GMT)

ஊரடங்கு நீட்டிப்பு மக்கள் கையில்தான் இருக்கிறது


கொரோனா என்ற கொடிய தொற்று நோய் உலகையே புரட்டி போட்டுக்கொண்டிருக்கிறது. பொருளாதார வளர்ச்சி உள்பட அனைத்து வளர்ச்சிகளிலும் மேலே சென்று கொண்டிருந்த உலகம், இனி எல்லாவற்றையும் முதலில் இருந்துதான் தொடங்க வேண்டும் என்றநிலையில் நிலைமை தலைகீழாக மாறிவிட்டது. இத்தகையச் சூழ்நிலையில் கடந்த மார்ச் மாதம் 25 முதல் ஏப்ரல் 14 வரை 21 நாட்கள் ஊரடங்கை அறிவித்த மத்திய அரசாங்கம், மேலும் 19 நாட்கள், அதாவது ஏப்ரல் 15 முதல் மே 3 வரை நீட்டித்துள்ளது. இந்தநிலையில் மக்கள் ஊரடங்கை சரியாக பின்பற்றாததால், கொரோனா தொற்று பாதிப்பு குறைவதற்கு பதிலாக, அடியோடு ஒழிக்கப்படுவதற்கு பதிலாக அதிகரித்துக்கொண்டே வருகிறது. ஆக, ஊரடங்கின் பலன் இன்னும் முழுமையாக கிடைக்கவில்லை என்பதுதான் இதன் பொருள்.

தற்போது தமிழக அரசு மாநகராட்சி பகுதிகளில் கொரோனா பாதிப்பு அதிகமாகி கொண்டிருக்கும் நிலையில், சென்னை, கோவை, மதுரை ஆகிய மாநகராட்சி பகுதிகளில் 4 நாட்களும், சேலம், திருப்பூர் மாநகராட்சி பகுதிகளில் 3 நாட்களும் முழு ஊரடங்கை அமல்படுத்த உத்தரவிட்டுள்ளது. இதுதவிர, சென்னையை அடுத்த காஞ்சீபுரம், செங்கல்பட்டு, திருவள்ளூர் ஆகிய மாவட்டங்களில் உள்ள விரிவாக்க பகுதிகளிலும் 4 நாட்கள் ஊரடங்கு அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் சில மாவட்டங்களில் நேற்று ஒருநாள் முழு ஊரடங்கு அறிவிக்கப்பட்டது. இதையொட்டி, சனிக்கிழமை அன்று சென்னையிலும், மற்ற பகுதிகளிலும் மக்கள் காய்கறி, மற்ற பொருட்கள் வாங்குவதற்கு கடைகளுக்கு முன்பாக அலையென திரண்டு மேலே இருந்து கடுகை போட்டால்கூட தரையில் விழ முடியாதநிலையில் ஒருவரையொருவர் நெருக்கிக்கொண்டு, முண்டியடித்து கொண்டு திரண்டிருந்த கூட்டத்தின் படம் ‘தினத்தந்தி’யில் வெளியானது. இதை பார்க்கும்போது, சமூக இடைவெளி எங்கே போனது? முக கவசம் அணிய வேண்டும் என்ற உத்தரவு எங்கே போனது? என்று தெரியவில்லை. இவ்வளவு கூட்டம் குவிந்தால் கொரோனா பரவலுக்கு மிக எளிதாக போய்விடும். ஆனால் இவ்வளவு கூட்டம் கூடியதற்கு காரணம் மக்களுக்கு முறையான கால அவகாசம் கொடுத்து ஊரடங்கை அறிவிக்கவில்லை என்பதுதான்.

இந்தநிலையில் மே 3-ந்தேதிக்கு மேல் ஊரடங்கை நீட்டிக்க வேண்டும் என்று டெல்லி, மராட்டியம், மத்திய பிரதேசம், மேற்கு வங்காளம், பஞ்சாப் மற்றும் ஒடிசா ஆகிய மாநிலங்கள் கருத்து தெரிவித்துள்ளன. குஜராத், ஆந்திரா, தமிழ்நாடு, அரியானா, இமாசலபிரதேசம் மற்றும் கர்நாடகா போன்ற மாநிலங்கள், மத்திய அரசாங்கம் எந்த உத்தரவு பிறப்பிக்கிறதோ? அதன்பிறகு முடிவு எடுக்கலாம் என்றநிலையை எடுத்துள்ளன. கேரளாவும், பீகாரும் எடுக்கப்போகும் நிலை இன்று முதல்-மந்திரிகளோடு, பிரதமர் நரேந்திர மோடி காணொலி மூலம் பேசப்போகும் 3-வது கூட்டத்திற்கு பிறகுதான் தெரியும். இந்த 40 நாட்கள் ஊரடங்கிலேயே மக்களின் அன்றாட வாழ்க்கை நிலைகுலைந்து போய்விட்டது. தொழில் நிறுவனங்கள், வர்த்தக நிறுவனங்கள் மீது கொரோனாவால் தாங்கமுடியாத அடி விழுந்துவிட்டது. இனியும் ஊரடங்கை நீட்டித்தால் மக்களின் இயல்பு வாழ்க்கை சீரழிந்துவிடும். எனவே அனைவரும் முக கவசம் அணிந்து கொள்ள வேண்டும், கைகளை அடிக்கடி சோப்பு போட்டு கழுவ வேண்டும், சமூக இடைவெளியை கண்டிப்பாக பின்பற்ற வேண்டும் என்ற அறிவுரைகளை பின்பற்றினாலேயே போதும் கொரோனா பரவாது. எனவே ஊரடங்கை மே 3-ந்தேதியுடன் முடித்துவிட்டு அதன்பிறகு மக்கள் பின்பற்றவேண்டிய இந்த 3 நடைமுறைகளையும் கண்டிப்பாக நடைமுறைப்படுத்த கடுமையான விதிகளை உள்ளடக்கிய நடவடிக்கைகளை எடுத்து ஊரடங்கை தளர்த்தலாம் என்பதே சில நிபுணர்களின் கருத்தாக இருக்கிறது. ஊரடங்கு தளர்த்தப்படுமா? அல்லது நீட்டிக்கப்படுமா? என்பது இன்று பிரதமர் நரேந்திரமோடி, மாநில முதல்-மந்திரிகளோடு என்ன பேசப்போகிறார்? என்பதில்தான் இருக்கிறது.

Next Story