ஆளுக்கொரு நீதியா?


ஆளுக்கொரு நீதியா?
x
தினத்தந்தி 27 April 2020 10:30 PM GMT (Updated: 2020-04-27T23:14:28+05:30)

ஆளுக்கொரு நீதியா.


கொரோனா தொற்றின் கோரப்பார்வையில் எல்லோரும் ஒன்றுதான். எப்படி மத்திய-மாநில அரசுகளுக்கு பாதிப்பு ஏற்பட்டுள்ளதோ, அதற்கு சற்றும் குறையாமல், இன்னும் சொல்லப்போனால் சற்று அதிகமாகவே பொதுமக்களுக்கு, தனியார் நிறுவனங்களுக்கு, தனியார் கல்வி நிறுவனங்களுக்கு மற்றும் வர்த்தக நிறுவனங்களுக்கு பாதிப்பு ஏற்பட்டுள்ளது. எப்படி அரசுகள் நிதிப்பற்றாக்குறையால் பாதிக்கப்பட்டுள்ளதோ, அதுபோலத்தான் தனியார் நிறுவனங்களும் வருவாய் இல்லாமல் நடைமுறை செலவுக்கே தடுமாறிக் கொண்டிருக்கிறது. இந்தநிலையில் மத்திய அரசாங்கம் தனது நிதி நிலையை சீர்படுத்த பல அதிரடி நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.

மத்திய அரசாங்கத்தில் 48 லட்சத்து 34 ஆயிரம் ஊழியர்கள் பணிபுரிகிறார்கள். அதுபோல, மத்திய அரசாங்க பணிகளில் இருந்து ஓய்வு பெற்று 65 லட்சத்து 26 ஆயிரம் பேர் பென்ஷன் வாங்கிக் கொண்டிருக்கிறார்கள். இவர்களுக்கு வழங்கப்படும் கூடுதல் அகவிலைப்படி இந்த ஆண்டு ஜனவரி முதல் அடுத்த ஆண்டு ஜூலை வரை வழங்கப்பட வேண்டிய 3 உயர்வுகளை நிறுத்தி வைக்க உத்தரவிட்டுள்ளது. இதில் 18 லட்சம் ராணுவ வீரர்கள், 2 லட்சத்து 50 ஆயிரம் எல்லை பாதுகாப்புபடை வீரர்கள் மற்றும் 26 லட்சம் ஓய்வு பெற்ற ராணுவ வீரர்களும் அடங்குவார்கள். இதுதவிர பென்ஷன் வாங்கிக் கொண்டிருப்பவர்களுக்கும் அகவிலைப்படி நிவாரணம் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. இதைத்தொடர்ந்து தமிழக அரசு ஊழியர்களுக்கும், பென்ஷன்தாரர்களுக்கும் 2021-ம் ஆண்டு ஜூலை வரை அகவிலைப்படி உயர்வு நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. மேலும் தமிழக அரசு ஊழியர்கள் ஆண்டுக்கு 15 நாட்கள் ஈட்டிய விடுப்பை சரண்டர் செய்து அந்த 15 நாட்கள் சம்பளத்தை பெறும் நடைமுறையும் ஒரு ஆண்டுக்கு நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. இதுபோல, வங்கி மற்றும் இன்சூரன்ஸ் நிறுவனங்கள் டிவிடெண்டு என்று கூறப்படும் லாப பங்குத்தொகையை பங்குதாரர்களுக்கு வழங்கத் தேவையில்லை என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

அரசு பல சலுகைகளைத் தானே பெற்றுக் கொண்டிருக்கும் நிலையில், தனியார் பற்றி சற்றும் கவலைப்படவில்லை. இப்போது இயங்காமல் இருக்கும் தொழில் நிறுவனங்களையும், வருவாயே இல்லமல் ஏதோ பெயர் அளவுக்கு இயங்கிக் கொண்டிருக்கும் நிலையிலும், ஊழியர்களுக்கு முழுச் சம்பளம் அளிக்க வேண்டும் என்று தொழிலாளர் நலத்துறை அறிவித்துள்ளது. கையில் பணமே இல்லாமல் எப்படி இந்த தொகையை வழங்க முடியும்? தொழிலாளர் அமைச்சக நாடாளுமன்ற நிதிக்குழு தனது பரிந்துரையில் தொழில் நிறுவனங்கள் திரும்பவும் வழக்கம் போல இயங்கும்வரை தொழிலாளர்களுக்கு சம்பளம் வழங்க வேண்டும் என்று நிர்பந்திக்ககூடாது என பரிந்துரை செய்துள்ளது. அதுமட்டுமல்லாமல், எங்கள் பரிந்துரையின் அடிப்படை நோக்கமே தொழில் நிறுவனங்கள் அவர்களுடைய கட்டுப்பாட்டையும் மீறி சந்தித்து கொண்டிருக்கும் நெருக்கடியான இந்த சூழ்நிலையில் அவர்களுக்கு எந்த நிர்ப்பந்தமும் கூடாது என்பதே. இந்தநேரத்தில் தொழில் நிறுவனங்களுக்கு உதவிக்கரம் நீட்ட அரசு முன்வர வேண்டும் என்று அந்த பரிந்துரையில் கூறியுள்ளது. இந்த பரிந்துரையை மக்களவை சபாநாயகர் ஏற்றுக் கொண்டுவிட்டார். பரஸ்பர நிதி நிறுவனங்களுக்கு ரிசர்வ் வங்கி 50 ஆயிரம் கோடி ரூபாய் நிதி உதவி அறிவித்துள்ளது. இதைப்போல கொரோனாவால் வருவாய் இழந்து தவிக்கும் அனைத்து நிறுவனங்களுக்கும் மத்திய-மாநில அரசுகள் அந்த நிறுவனங்கள் இயங்கவும், தொழிலாளர்களுக்கு சம்பளம் வழங்குவது போன்ற செலவுகளுக்கும் உரிய நிதி உதவியை அளிக்க வேண்டும். இதேபோல பல வெளிநாடுகளில் தொழில் நிறுவனங்கள் ஊழியர்களுக்கு வழங்கும் சம்பளத்தில் ஒரு கணிசமான பகுதியை அந்தநாட்டின் அரசாங்கங்களே நிறுவனங்களுக்கு வழங்குகிறது. எனவே இதுபோன்ற கொள்கை முடிவை மத்திய-மாநில அரசுகள் உடனடியாக எடுக்க வேண்டும். தொழிலாளர்களுக்கு உதவிக்கரம் நீட்ட வேண்டும் என்று நினைத்தால் அவர்களுக்கு ஊதியம் வழங்கவும், நிறுவனங்களுக்கு நிதி உதவி அளிப்பதும்தான் சரியான நடவடிக்கையாக இருக்கும். அதுதான் தர்மமும், நீதியும் ஆகும்.

Next Story