முதல்-அமைச்சர் கேட்ட தேவையான கோரிக்கைகள்


முதல்-அமைச்சர் கேட்ட தேவையான கோரிக்கைகள்
x
தினத்தந்தி 28 April 2020 10:30 PM GMT (Updated: 28 April 2020 6:02 PM GMT)

முதல்-அமைச்சர் கேட்ட தேவையான கோரிக்கைகள்.


கொரோனா பாதிப்பு ஏற்பட்டதில் இருந்து பிரதமர் நரேந்திரமோடி முக்கியமான முடிவுகளை எடுக்கும் முன்பு மாநில முதல்-மந்திரிகளோடு காணொலி காட்சி மூலம் ஆலோசனைக்கூட்டம் நடத்திய பிறகே எடுக்கிறார். மாநிலங்களின் கருத்துகளைக்கேட்டு, மத்திய அரசாங்கம் இவ்வாறு முடிவு எடுப்பது மிகவும் வரவேற்புக்குரியது. அந்தவகையில் நேற்று முன்தினம் காணொலி காட்சி மூலம் இதுபோன்ற ஆலோசனையை நடத்தினார். இத்தகைய கூட்டங்களில் இதுவரை பேச வாய்ப்பளிக்கப்படாத 9 மாநில முதல்-மந்திரிகளுக்கு மட்டுமே நேற்று பேச நேரம் ஒதுக்கப்பட்டது. முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி ஏற்கனவே நடந்த கூட்டத்தில் பேசியிருப்பதால், இந்தமுறை அவருக்கு பேச வாய்ப்பு இல்லை. ஆனால் பேசினால்கூட குறைவான நேரம்தான் கிடைத்திருக்கும்.

இந்தநிலையில் தன் கோரிக்கைகளை எல்லாம் மிக விரிவாக பேக்ஸ் மூலம் பிரதமருக்கு அனுப்பிவிட்டார். அதில் தமிழ்நாட்டிற்குத் தேவையான மிக முக்கியமான கோரிக் கைகளை வலியுறுத்தி இருக்கிறார். 100 நாட்கள் வேலைத்திட்டத்தில் பணியாற்றும் தொழிலாளர்களுக்கு தற்போது வங்கிக் கணக்கின் மூலம் ஊதியம் கொடுக்கப்படுகிறது. ஊரடங்கு சட்டம் அமலில் இருக்கும் இந்தநேரத்தில் அவர்கள் எல்லாம் வங்கிகளை நோக்கிச் சென்றால் அங்கு கூட்டம் கூடிவிடும், சமூக இடைவெளி இருக்காது. அதற்கு பதிலாக ஊராட்சி செயலாளர்கள் மூலமாக அந்தந்த கிராமங்களிலேயே ரொக்கமாக வழங்க அனுமதிக்க வேண்டும் என்று கேட்டிருக்கிறார். கொரோனா மருத்துவ பரிசோதனைக்காக தினமும் 10 ஆயிரம் பேருக்கு பரிசோதனை செய்யும்வகையில் அதிக எண்ணிக்கையில் பி.சி.ஆர். பரிசோதனை கருவிகளை வழங்க வேண்டும். விவசாயிகள் உற்பத்தி செய்யும் வேளாண் பொருட்களை நேரடியாக நுகர்வோருக்கு கொண்டு செல்லும்வகையில், விவசாய பொருட்கள் உற்பத்தியாளர்கள் அமைப்புகளுக்கு போக்குவரத்து மானியம் வழங்க வேண்டும். இந்தநேரத்தில் நிதிப்பற்றாக்குறை வரம்பை 3 சதவீதத்தில் இருந்து 4.5 சதவீதமாக உயர்த்த வேண்டும். மாநில அரசு கடன் வாங்க, அனுமதிக்கப்பட்ட வரம்புக்கு மேலாக 33 சதவீதம் அதிகமாக வாங்கிக்கொள்ள அனுமதிக்க வேண்டும் என்று கோரியிருக் கிறார். தற்போதைய சூழ்நிலையில் மாநில அரசுக்கு வருவாயே இல்லாமல், கொரோனா ஒழிப்பு நடவடிக்கைகளுக்கு செலவுகள் மட்டும் செய்து கொண்டிருக்கும் நேரத்தில் மத்திய அரசாங்கம் இதை அனுமதிப்பது சாலச்சிறந்ததாகும்.

நகர்ப்புற மற்றும் ஊரக உள்ளாட்சி அமைப்புகளுக்கு இந்த ஆண்டுக்காக நிதிக்குழு அனுமதித்த மானியத்தில் 50 சதவீதத்தை உடனடியாக வழங்க வேண்டும். கொரோனா ஒழிப்புக்கான மருத்துவம் மற்றும் பாதுகாப்பு உபகரணங்கள் வாங்க தேசிய பேரிடர் நிவாரண நிதியில் இருந்து உடனடியாக ஆயிரம் கோடி ரூபாய் வழங்க வேண்டும். ரேஷன்கார்டு தாரர்களுக்கு இலவசமாக உணவுப்பொருட்கள் வழங்க கூடுதலாக ஒதுக்கீடு செய்யவேண்டும். இதுதவிர ஒரு முக்கியமான கோரிக்கையும் விடுத்திருக்கிறார். தமிழ்நாட்டில் ஏராளமான சிறு, குறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்கள் இருக்கின்றன. இதில், அதிகளவில் தொழிலாளர்கள் வேலை பார்க்கிறார்கள். இந்த நிறுவன ஊழியர்களுக்கு சம்பளம் கொடுக்கவும், அவர்களுடைய பிராவிடண்ட் பண்ட் (பி.எப்.) இ.எஸ்.ஐ. தவணைகளை கட்டவும், மத்திய அரசாங்கம் உதவிக்கரம் நீட்டவேண்டும். அவர்கள் வாங்கிய வங்கி கடன்களுக்கு வட்டியை ரத்து செய்யவேண்டும். அடுத்த 6 மாதங்களுக்கு நடைமுறை மூலதன கடன்களை வழங்க வேண்டும். சரக்கு சேவை அட்வான்ஸ் வரி மற்றும் வருமானவரி கட்டுதல் ஆகியவற்றை 6 மாதங்களுக்கு தள்ளிப்போட வேண்டும் என்று பிரதமருக்கு அனுப்பிய கோரிக்கைகளில் முதல்-அமைச்சர் தெரிவித்து இருக்கிறார். இந்த கோரிக்கை களை எல்லாம் கொரோனா பாதிப்பு கட்டத்தில் மிக மிக தேவையானவைகள் ஆகும். கோரிக்கைகளை விடுத்ததோடு நின்றுவிடாமல், தொடர்ந்து வலியுறுத்த வேண்டும். மத்திய அரசாங்கமும் இந்த கோரிக்கைகளின் அவசர-அவசியம் மற்றும் நியாயத்தை உணர்ந்து உடனடியாக நிறைவேற்ற வேண்டும் என்பதே எல்லோருடைய எதிர்பார்ப்பாக இருக்கிறது.

Next Story