எச்சரிக்கையின் உச்சத்தில் சென்னை


எச்சரிக்கையின் உச்சத்தில் சென்னை
x
தினத்தந்தி 29 April 2020 10:30 PM GMT (Updated: 2020-04-30T01:08:17+05:30)

எச்சரிக்கையின் உச்சத்தில் சென்னை.


தமிழ்நாட்டில் மார்ச் 7-ந்தேதி மஸ்கட்டில் இருந்து வந்த பொறியாளர் ஒருவரால் கொரோனா பாதிப்பு தொடங்கியது. அதன்பிறகு தத்தி, தத்தி நடந்து கொண்டு வந்த பரவல் மார்ச் 31-ந்தேதி பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 57-ல் இருந்து 124 ஆனது. ஏப்ரல் 12-ந்தேதி ஆயிரத்தையும் தாண்டிய நிலையில், கடந்த 28-ந்தேதி 2 ஆயிரத்தையும் தாண்டி நேற்றைய மொத்த எண்ணிக்கை 2,162-ஆக உயர்ந்தது. இதில் பல மாவட்டங்களில் வெகுவாக கட்டுப்படுத்தப்பட்டுவிட்டது. குறிப்பாக கிருஷ்ணகிரி மாவட்டத்தில் இதுவரை கொரோனாவால் காலெடுத்து வைக்க முடியவில்லை. இந்தநிலையில், நீலகிரி சிறிய மாவட்டம் என்றாலும், ஊரடங்கு அறிவிக்கப்படும் முன்பே அந்த மாவட்ட கலெக்டர் இன்னசென்ட் திவ்யா மாவட்ட எல்லைகளை மூட உத்தரவிட்டார். இதுமட்டுமல்லாமல், பாதிக்கப்பட்ட 9 பேரையும் உடனடியாக சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி அவர்களோடு தொடர்பு கொண்ட அனைவரையும் தனிமைப்படுத்தினார். அந்த 9 பேரும் குணமடைந்து திரும்பி விட்டனர். தொடர்ந்து அடுத்த சில நாட்கள் யாருக்கும் கொரோனா பாதிப்பு இல்லையென்றால், நீலகிரி பச்சை மண்டலத்துக்குச் சென்றுவிடும். அதுபோல ஈரோடு மாவட்டத்திற்கு வந்த தாய்லாந்து நாட்டைச் சேர்ந்த 2 பேருக்கு கொரோனா தொற்று இருந்தநிலையில் அவர்கள் மூலம் பரவத்தொடங்கியது. மொத்தம் 70 பேர் பாதிக்கப்பட்டு இருந்தனர். ஒருவர் மட்டும் உயிரிழந்துள்ளநிலையில் மீதமுள்ள 69 பேரும் இப்போது குணமடைந்துவிட்டனர். ஈரோடு மாவட்ட கலெக்டர் சி.கதிரவன் எடுத்த தீவிர நடவடிக்கையால் இப்போது அந்த மாவட்டத்தில் கொரோனா பாதிக்கப்பட்டவர்கள் ஒருவர் கூட கிடையாது. ஈரோடும், சிவப்பு மண்டலத்தில் இருந்து ஆரஞ்சு மண்டலத்திற்கு சென்று விட்டது.

கன்னியாகுமரி மாவட்டத்தில் பாதிக்கப்பட்ட 16 பேர்களில் 10 பேர் நேற்று முன்தினம்வரை குணமடைந்து வீடு திரும்பினர். இப்போது 6 பேர் மட்டும் மருத்துவமனையில் இருக்கிறார்கள். மாவட்ட கலெக்டர் பிரசாந்த் வடநேரே எடுத்த முயற்சியால் மேலும் பரவாமல், கடந்த 15 நாட்களாக கட்டுப்படுத்தப்பட்டு ஆரஞ்சு மண்டலத்திற்கு போய்விட்டது. ராணிப்பேட்டை மாவட்டத்தில் 39 பேர்கள் பாதிக்கப்பட்டு இருந்த நிலையில் 33 பேர் குணமடைந்து வீடு திரும்பிவிட்டனர். மேலும் அதிகமாக பரவிவிடுமோ என்ற அச்சம் இருந்தநிலையில் மாவட்ட கலெக்டர் திவ்யதர்ஷினி திட்டமிட்டு செயலாற்றிய நடவடிக்கைகளால், கடந்த 16 நாட்களாக புதிய பாதிப்பு இல்லாமல் இந்த மாவட்டமும் ஆரஞ்சு மண்டலத்திற்கு சென்று விட்டது. ஏற்கனவே மேலும் 7 மாவட்டங்கள் ஆரஞ்சு மண்டலத்தில் இருக்கின்றன. கொரோனாவால் பாதிக்கப் பட்டவர்களின் தொடர்புகளை தேடிப்பிடித்து கட்டுப்பாட்டு பகுதிகளில் எடுக்கப்பட வேண்டிய நடவடிக்கைகளை மாவட்ட கலெக்டர்கள் மிக கடுமையாக எடுத்ததாலும், எல்லாவற்றுக்கும் மேலாக மக்களின் ஒத்துழைப்பாலும் இந்த 11 மாவட்டங்களில் கொரோனாவை கட்டுப்படுத்த முடிந்தது.

இப்படி எல்லா மாவட்டங்களுமே வேகமாக கொரோனா பாதிப்பில் இருந்து மீண்டு எழுந்துகொண்டு இருக்க முயற்சிக்கும்நிலையில், சென்னையில் மட்டும் பாதிப்புகள் அதிகரித்து, வேகமாக பரவிக்கொண்டு இருக்கிறது. இப்படி பரவும் வேகத்தை பார்த்தால் சென்னை சமூகப் பரவல் நிலைக்கு போய்விடுமோ? என்ற அச்சம் ஏற்பட்டுள்ளது. அந்தநிலைக்கு போய்விட்டால் கட்டுக்கடங்காமல் போய், அது கொள்ளை நோயாக மாறிவிடும். எனவே முதல்-அமைச்சர் கூறியதுபோல, கொரோனாவை பொதுமக்கள் யாரும் விளையாட்டுத்தனமாக நினைக்கக்கூடாது. புதிதாக யாருக்கும் பாதிப்பு ஏற்பட்டுவிடக்கூடாது என்றால், ஊரடங்கு உத்தரவை முழுமையாக பின்பற்ற வேண்டும். கட்டுப்படுத்தப்பட்ட பகுதிகளுக்குள் யாரும் செல்லவும் கூடாது, வெளியே வரவும் கூடாது. அதேபோல, மற்ற பகுதிகளில் இருந்து தவிர்க்கமுடியாமல் வெளியே செல்பவர்கள், கண்டிப்பாக முக கவசம் அணிந்து கொண்டும், சமூக இடைவெளியை பின்பற்றவும் வேண்டும். வெளியே சென்றுவிட்டு வீட்டிற்குள் செல்லும்முன்பு கைகளை சோப்பு போட்டு கழுவ வேண்டும். இதை முழுமையாக கடைப்பிடிக்க வேண்டும். இல்லையெனில் பக்கத்தில் இருக்கும் சமூகப் பரவல் உள்ளே வந்துவிடும். இன்று முதல் கடைகள் திறக்கப்படும் என்றநிலையில், கோயம்பேடுக்கு போனதுபோல, மக்கள் கடைகளுக்கு பெருவெள்ளம்போல் சென்றுவிடக்கூடாது.

Next Story