சொந்த மாநிலங்களுக்குச் செல்லலாம்


சொந்த மாநிலங்களுக்குச் செல்லலாம்
x
தினத்தந்தி 30 April 2020 10:30 PM GMT (Updated: 2020-05-01T01:04:32+05:30)

சொந்த மாநிலங்களுக்குச் செல்லலாம்.


வடக்கு மற்றும் வடகிழக்கு மாநிலங்கள் உள்பட இந்தியாவில், பல மாநிலங்களில் உள்ள வேலையில்லா தொழிலாளர்களுக்கும், வேலைதேடி வருபவர்களுக்கும் சொர்க்க பூமியாக விளங்குவது தமிழ்நாடு. கடந்த பல ஆண்டுகளாகவே தமிழ்நாட்டிற்கு வந்தால் பிழைத்துக் கொள்ளலாம் என்ற மனநிலையில், வெளிமாநிலங்களில் இருந்து வரும் ஏராளமான இளைஞர்களை கையில் ஒரு பையுடன், சென்னை சென்டிரல் ரெயில் நிலையத்தில் தினமும், ஊரடங்கிற்கு முன்புவரை காண முடிந்தது. இவர்கள் சென்னையைச்சுற்றி மட்டுமல்லாமல், அனைத்து மாவட்டங்களிலும் உள்ள குக்கிராமங்களில்கூட நிரந்தரமாக தங்கி வேலை பார்க்கிறார்கள்.

இந்தநிலையில் கடந்த மார்ச் 25-ந்தேதி ஊரடங்கு அறிவிக்கப்பட்டதில் இருந்தே எல்லா தொழில்களும் முடங்கிப்போனநிலையில், குறிப்பாக கட்டிடத்தொழில் கவலைக்கிடமான நிலையில் களையிழந்து போனபிறகு இவர்கள் வாழ்வாதாரம் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது. இவர்களில் சிலர் வேலையில்லாமல், தங்கள் சொந்த மாநிலத்திற்குப்போய் குடும்பத்தோடு இருக்கலாம் என்றால் ரெயில்களும் இல்லை, பஸ் போக்குவரத்தும் இல்லை. இதனால் சிலர் இருசக்கர வாகனங்களிலும், சைக்கிள்களிலும், நடந்தும் செல்ல முயற்சித்தார்கள். சென்னையில் மீன்பிடித்தொழிலில் ஈடுபட வந்த தொழிலாளர்களில் சிலர் மோட்டார் பொருத்தப்பட்ட படகுகளை வாங்கி தங்கள் சொந்த மாநிலங்களான ஆந்திராவுக்கும், ஒடிசாவுக்கும் திரும்பிச்சென்று இருக்கிறார்கள். ஆயிரம் கிலோமீட்டர் வரை கடலில், இவ்வாறு 90 மீன்பிடி தொழிலாளர்கள் 10 படகுகளில் சென்று இருக்கிறார்கள். அதில் ஒரு பெரிய படகில் மட்டும் ஒடிசாவுக்கு 33 பேர் சென்று இருக்கிறார்கள். இந்தநிலையில் மத்திய அரசாங்கம் ஒரு உத்தரவை பிறப்பித்துள்ளது. அதன்படி பல மாநிலங்களில் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்ட பிறகு, தங்கள் மாநிலங்களுக்குச் செல்லமுடியாமல் தவிக்கும், புலம்பெயர்ந்த தொழிலாளர்கள், சுற்றுலாப்பயணிகள், யாத்திரை வந்தவர்கள் மற்றும் மாணவர்கள் ஆகியோர் தங்கள் சொந்த மாநிலங்களுக்குச் செல்ல அனுமதி வழங்கியுள்ளது. இதற்கான ஏற்பாடுகளை அவர்கள் எந்த மாநிலத்தில் இருந்து தங்களது சொந்த மாநிலத்திற்குச் செல்ல வேண்டும் என்று விரும்புகிறார்களோ, அந்த 2 மாநிலங்களின் உயர் அதிகாரிகளும் கலந்துபேசி, பஸ்கள் மூலம் சமூக இடைவெளியைப் பின்பற்றி உரிய பாதுகாப்புடன் அனுப்ப வேண்டும். புறப்படும் முன்பு கொரோனா தொற்று இருக்கிறதா? என்று பார்ப்பதுடன், சொந்த மாநிலங்களில் இறங்கியபிறகும் அவ்வாறு சோதனை நடத்தப்படும் என்று கூறப்பட்டுள்ளது.

தமிழ்நாட்டைப் பொறுத்தமட்டில், முதல்-அமைச்சர் ஏற்கனவே கூறியபடி, இங்கு புலம்பெயர்ந்து வந்த தொழிலாளர்களின் எண்ணிக்கை 1 லட்சத்து 34 ஆயிரத்து 569 பேர்கள். தமிழ்நாட்டில் இருந்து வெளிமாநிலங்களில் சென்று வேலை பார்க்கும் தொழிலாளர்கள் எண்ணிக்கை 7 ஆயிரத்து 198. இதற்குமேல் ஏராளமான பதிவுசெய்யாத தொழிலாளர்கள் இருக்கிறார்கள். இந்தநிலையில் இவர்களை எல்லாம் பஸ்களில் அனுப்புவது என்பது, அதுவும் வடகிழக்கு மாநிலங்கள் போன்ற தொலைதூர மாநிலங்களுக்கு அனுப்புவது என்பது இயலாத காரியம். முன்னாள் மத்திய நிதி மந்திரி ப.சிதம்பரம் கூறியதுபோல, போதிய சுகாதார பாதுகாப்புகளுடன் சிறப்பு ரெயில்களை அனுமதிக்கலாம். பல ரெயில் பெட்டிகளுடன் ஒரு ரெயிலை அனுப்புவது என்பது சாத்தியம் இல்லை என்றாலும், இப்போது ஓடிக்கொண்டிருக்கும் சரக்கு ரெயில்களில் ஓரிரு பயணிகளின் பெட்டிகளை இணைத்து அனுப்புவதற்கு மத்திய அரசாங்கம் பரிசீலிக்கலாம். வெளிமாநிலங்களில் இதுபோல இருக்கும் தமிழ்நாட்டைச் சேர்ந்தவர்களையும் பத்திரமாக அழைத்துவர ஏற்பாடு செய்ய வேண்டும். ஆனால் தமிழ்நாட்டில் இருந்து எத்தனை தொழிலாளர்கள் இப்படி தங்கள் சொந்த மாநிலங்களுக்குச் செல்வார்கள்? என்பது சந்தேகமே. பல தொழிலாளர்கள் தமிழ்நாட்டிலேயே இருக்கிறோம், நிலைமை சரியான உடன் எங்களுக்கு மீண்டும் வேலை கிடைக்கும், எங்கள் பிழைப்பும் தொடரும் என்று சொல்கிறார்கள். ஆக, விரும்புகிறவர்களை முழு பாதுகாப்புடன் வழியனுப்புவோம், இங்கேயே இருக்க விரும்புகிறவர்களுக்கு தொடர்ந்து உணவு அளித்து, தங்கும் இடம் வசதி அளிப்போம்.

Next Story