இது ஒரு மகத்தான பணி!


இது ஒரு மகத்தான பணி!
x
தினத்தந்தி 1 May 2020 10:30 PM GMT (Updated: 1 May 2020 8:49 PM GMT)

இது ஒரு மகத்தான பணி.


கொரோனா வைரஸ் தொற்றை ஒழிக்கும் முயற்சி தமிழ்நாட்டில் மிகத் தீவிரமடைந்து வருகிறது. ஒரு பக்கம் என்னதான் வெட்டினாலும், மீண்டும் மீண்டும் முளைக்கும் புல்லைப்போல, கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை தினமும் புதிது புதிதாக தலையெடுத்துக் கொண்டிருக்கிறது. இப்போது கொரோனாவை ஒழிக்கும் நடவடிக்கை என்பது ஒரு பெரியப் போரில் எதிரியோடு போராடுவதைப்போல இருக்கிறது. இந்த கொரோனா ஒழிப்புப்போரில் போர்க்களத்தில் முன்னணியில் நின்று போரிட்டுக் கொண்டிருக்கும் ராணுவ வீரர்களைப்போல டாக்டர்கள், நர்சுகள், மருத்துவப் பணியாளர்கள் பணியாற்றி வருகிறார்கள். தனது உயிரையும் பொருட்படுத்தாமல் பணியாற்றி, கொரோனா தொற்றால் டாக்டர் சைமன் ஹெர்குலஸ் உயிரிழந்த நிலையில், மேலும் இந்த நோய் தொற்றால் சில டாக்டர்கள், நர்சுகள் பாதிக்கப்பட்டு மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று கொண்டிருக்கும் சூழ்நிலையில், சற்றும் மனம் தளராமல் தற்போது பணியாற்றிக் கொண்டிருக்கும் டாக்டர்கள், நர்சுகள், மருத்துவப் பணியாளர்களைக் கண்டு, அவர்கள் பணியாற்றும் திசை நோக்கி, தமிழ்நாடு தலை வணங்குகிறது.

அதனால்தான் முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி, தமிழக அரசை பொறுத்தமட்டில், டாக்டர்கள் இறைவனுக்கு சமமாக மதிக்கப்படுகின்றவர்கள், போற்றப்படுகின்றவர்கள், மருத்துவப்பணி உயிரைக் காக்கின்ற ஒரு மகத்தான பணி. டாக்டர்கள், நர்சுகள் மற்றும் மருத்துவப்பணியில் ஈடுபட்டிருக்கின்ற அனைவரையும் எங்களுடைய அரசு முழுமையாக பாதுகாக்கும் என்று தெரிவித்துள்ளார். இந்தநிலையில் சில இடங்களில் கொரோனாவால் பாதிக்கப் பட்டவர்களை அடையாளம் கண்டு அவர்களை சிகிச்சைக்காக அழைத்து வரவோ, பரிசோதனை செய்யவோ செல்லும் மருத்துவக்குழுவினர் மீது பாதிக்கப்பட்டவர்களின் உறவினர்களும், அந்தப்பகுதி மக்களும் தாக்குதல் நடத்திய சம்பவங்கள் நாட்டில் பல இடங்களில் நடந்துள்ளன. இதுபோன்ற சம்பவங்களால் அந்தப் பணியில் ஈடுபட்டுள்ள டாக்டர்கள், நர்சுகள், மருத்துவப்பணியாளர்கள் போன்றோர் சலிப்படைந்து அவர்கள் பணியில் சோர்வு ஏற்பட்டுவிடக்கூடாது. எனவேதான் மருத்துவப்பணியில் ஈடுபட்டுள்ளவர்கள், யாராலும் எந்தவித தாக்குதலுக்கும் ஆளாகிவிடக்கூடாது என்றவகையில் மத்திய அரசாங்கம் அவர்களை பாதுகாக்க அவசரச்சட்டம் ஒன்றை பிறப்பித்துள்ளது. இது மிகுந்த வரவேற்புக்குரியது.

1987-ம் ஆண்டு பிறப்பிக்கப்பட்ட கொள்ளை நோய் சட்டத்தை இந்த அவசரச் சட்டம் திருத்தம் செய்யும்வகையில் பிறப்பிக்கப்பட்டுள்ளது. இதன்படி, டாக்டர்கள் உள்ளிட்ட மக்கள் நல்வாழ்வுத்துறை பணியாளர்கள் மீதான எந்தவிதமான தாக்குதலாக இருந்தாலும் ஜாமீனில் வெளியே வரமுடியாத குற்றமாக கருதப்படுகிறது. அவர்களிடம் யாராவது அத்துமீறி நடந்து கொண்டால் 3 மாதங்கள் முதல் 5 ஆண்டுகள் வரை சிறைத்தண்டனையும், 50 ஆயிரம் ரூபாய் முதல் 2 லட்சம் ரூபாய் வரை அபராதமும் விதிக்கப்படும். மேலும் பலத்த காயமடையும் அளவுக்கு மருத்துவப்பணியில் ஈடுபட்டுள்ளவர்களை தாக்கினால் 6 மாதம் முதல் 7 ஆண்டுகள் வரை சிறைத்தண்டனையும், ஒரு லட்சம் ரூபாய் முதல் 5 லட்சம் ரூபாய் வரை அபராதமும் விதிக்கப்படும் என்று அந்த அவசரச் சட்டத்தில் கூறப்பட்டுள்ளது. இதுமட்டுமல்லாமல், வன்முறையில் ஈடுபட்டு பொது சொத்துகளை சேதப்படுத்துபவர்களிடம் இருந்து அபராதமாக சந்தை மதிப்பைவிட 2 மடங்கு அதிகமாக இழப்பீடு வசூலிக்கப்படும். இந்த அவசரச் சட்டம் நிச்சயமாக மருத்துவப் பணிகளில் ஈடுபட்டுள்ளவர்களுக்கு ஒரு பெரிய பாதுகாப்பாகவும், அரணாகவும் அமையும். ஏற்கனவே பல மருத்துவமனைகளில் நோயாளிகள் சிகிச்சை பலனின்றி மரணமடைய நேரிட்டால் மருத்துவமனைகள் சேதப்படுத்தப்படுவதும், டாக்டர்கள் தாக்கப்படுவதும், பெரும்பாலான இடங்களில் நடந்துள்ளன. டாக்டர்கள் நம் உயிரை காக்கும் பணியில் உள்ளவர்கள், உயிரை பறிக்கும் பணியில் ஈடுபடுபவர்கள் அல்ல. எனவே பொதுமக்கள் இந்த வாழ்வா? சாவா? போராட்டத்தில் நமக்காக முன்னணியில் இருந்து போரிடும் மருத்துவப் பணியாளர்களுக்கு பின்னால் நின்று கொண்டு எல்லாவிதமான உதவிகளையும், பாதுகாப்பையும் வழங்க வேண்டும். சரியான நேரத்தில் ஒரு சரியான சட்டத்தை அவசரச் சட்டமாக மத்திய அரசு கொண்டு வந்திருப்பது நிச்சயமாக தேவையான ஒன்று.

Next Story