சீனா வேண்டாமா? தமிழ்நாட்டிற்கு வாருங்கள்


சீனா வேண்டாமா? தமிழ்நாட்டிற்கு வாருங்கள்
x
தினத்தந்தி 4 May 2020 10:30 PM GMT (Updated: 2020-05-05T00:38:38+05:30)

சீனா வேண்டாமா தமிழ்நாட்டிற்கு வாருங்கள்.


உலகம் முழுவதையுமே கொரோனா உருள வைத்துவிட்டது. இந்தியாவிலும் குறிப்பாக தமிழ்நாட்டிலும் அதன் பாதிப்பு அதிகமாக இருக்கிறது. நாட்கள் உருண்டு ஓடினாலும், கொரோனா பரவல் இன்னும் நின்றபாடில்லை. இதன் காரணமாக மக்களின் வாழ்வாதாரம் மட்டுமல்லாமல், தொழில் வளர்ச்சியே படுத்துவிட்டது. ஒருபக்கம் கொரோனா பாதிப்பில் இருந்து மக்களை மீட்டெடுக்க முயற்சி மேற்கொண்டாலும், அடுத்தபக்கம் மக்களுக்கு வேலைவாய்ப்பையும், வாழ்வாதாரத்தையும், சீர்குலைந்துபோன தொழில் வளர்ச்சியையும் மீட்டெடுக்க வேண்டிய கடமை மத்திய-மாநில அரசுகளுக்கு இருக்கிறது. உலகம் முழுவதிலும் இருந்து ஏராளமான தொழில் நிறுவனங்களை தன் நாட்டிற்கு ஈர்த்த சீனாவில்தான் முதலில் கொரோனா பரவத்தொடங்கி மிக அதிகமான பாதிப்பு ஏற்பட்டதால், அங்கு முதலீடு செய்த ஆப்பிள், மைக்ரோசாப்ட், கூகுள் போன்ற பல நிறுவனங்கள் சீனாவுக்கு டாட்டா காட்டிவிட்டன. பலநாடுகளில், குறிப்பாக குறைந்த ஊதியத்தில் திறன்வாய்ந்த தொழிலாளர்கள் எந்த நாட்டில் கிடைப்பார்கள்? எங்கு குறைவான வரி இருக்கிறது? எங்கு அனுமதி எல்லாம் எவ்வித தடங்கலும் இல்லாமல் கிடைக்கிறது? எங்கு தொழில் நடத்துவதற்கு உகந்த சூழ்நிலை இருக்கிறது? என்று ஆராய்ந்து அந்த நாடுகளில் உள்ள மாநிலங்களில் புதிதாக முதலீடு செய்வதற்கும், தொழில் தொடங்குவதற்கும் ஆராய்ந்து கொண்டு இருக்கின்றன.

கடந்த மாதம் 27-ந்தேதி முதல்-மந்திரிகளுடன் காணொலிக் காட்சிமூலம் பேசிய பிரதமர் நரேந்திரமோடி, சீனாவில் இருந்து இதுபோல வெளியேவரும் கம்பெனிகளை தங்கள் மாநிலங்களில் தொழில் முதலீட்டிற்காக ஈர்க்க எல்லா முதல்-மந்திரிகளும் வழிமுறைகளை மேற்கொள்ள வேண்டும். நிறைய மனிதசக்தி, உள்கட்டமைப்பு வசதிகள்தான் அந்த நிறுவனங்களை அந்தந்த மாநிலங்களுக்கு கொண்டுவர வழி செய்யும். இதற்கான முயற்சிகளை எடுக்க வேண்டும் என்று பேசியிருக்கிறார். முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி, இப்போது கொரோனா தாக்கத்திற்குப் பிறகு குறிப்பிட்ட சில நாடுகளில் இருந்து வெளியேறும் ஜப்பான், தென் கொரியா, தைவான், சிங்கப்பூர் மற்றும் அமெரிக்கா உள்ளிட்ட நாடுகளின் தொழில் நிறுவனங்களை தமிழ்நாட்டிற்கு ஈர்க்க, தலைமைச் செயலாளர் தலைமையில் மூத்த அதிகாரிகள், அந்த வெளிநாடுகளைச் சார்ந்த தொழில் கூட்டமைப்புகள் மற்றும் தொழில் நிறுவனங்களின் பிரதிநிதிகள் கொண்ட ஒரு சிறப்புக்குழுவை அமைத்துள்ளார். இடம்பெயர வாய்ப்புள்ள நிறுவனங்களைக்கண்டு அந்த நிறுவனங்களை தமிழ்நாட்டிற்கு ஈர்ப்பதற்கு வழங்கவேண்டிய விரைவான ஒற்றைச்சாளர அனுமதிக்கான வழிமுறைகள், சிறப்புச்சலுகைகள் மற்றும் அவர்களை ஈர்க்க வாய்ப்புள்ள தொழிற்பூங்காக்கள், உள்கட்டமைப்புகளை கண்டறிந்து, விரைந்து செயல்படுத்தும் வழிமுறைகள் உள்ளிட்ட பணிகளை இந்த சிறப்புக்குழு மேற்கொள்ளும் என்றும் அறிவித்துள்ளார். இவ்வாறு உடனடியாக முயற்சி எடுத்தது வரவேற்கத்தக்கது. இந்த குழு தன் முதல்கட்ட பணிகளை தொடங்குவது ஒருபக்கம் இருந்தாலும், அடுத்தகட்டமாக மிக வேகமாக பணிகளை ஆற்றவேண்டிய அவசர-அவசியம் வந்துவிட்டது.

பிரதமர் நரேந்திரமோடி, முதல்-மந்திரிகளுடன் பேசுவதற்கு முன்பே உத்தரபிரதேச அரசு இதற்கான பணிகளைத் தொடங்கிவிட்டது. லாக் ஹீடு மார்டின், அடோப், ஹனிவெல், பாஸ்டன் சயின்டிபிக் மற்றும் சிஸ்கோ சிஸ்டம் என்பன உள்பட ஏறத்தாழ 100 சிறு மற்றும் பெரிய அமெரிக்க நிறுவனங்கள் உத்தரபிரதேசத்தில் தொழில் தொடங்க ஆர்வம் காட்டி வருவதாக அந்த மாநில மந்திரி தெரிவித்துள்ளார். இதுபோல வேறு மாநிலங்களும் வேலைகளைத் தொடங்கிவிட்டன. இந்தநிலையில் அறிக்கையை தயார் செய்யும் பணியை இந்த சிறப்புக்குழு ஒருபக்கம் மேற்கொண்டாலும், அடுத்தபக்கம் மிக வேகமாக ஒவ்வொரு நிறுவனங்களையும் பட்டியலிட்டு அவர்களோடு தொடர்புகொண்டு தமிழ்நாட்டிற்கு தொழில் தொடங்க வரவழைக்கும் பணிகளை தீவிரப்படுத்த வேண்டும். மக்களும் ஒன்றை மறந்துவிடக்கூடாது கொரோனா பாதிப்பைக் கண்டுதான் சீனாவில் இருந்து இந்த நிறுவனங்கள் வெளியே வருகின்றன. எனவே தமிழ்நாட்டிலும் கொரோனா இல்லாத ஒரு நிலையை உருவாக்க வேண்டும் என்றால் மக்களின் முழு ஒத்துழைப்பு இருந்தால்தான் முடியும்.


Next Story