ஆபத்தில் துணை நிற்குமா? ஆரோக்கிய சேது செயலி


ஆபத்தில் துணை நிற்குமா? ஆரோக்கிய சேது செயலி
x
தினத்தந்தி 5 May 2020 10:30 PM GMT (Updated: 5 May 2020 7:06 PM GMT)

ஆபத்தில் துணை நிற்குமா ஆரோக்கிய சேது செயலி.


கடந்த 1-ந்தேதி, ஏற்கனவே 40 நாட்கள் அமலில் இருந்த ஊரடங்கை, மேலும் 2 வாரங்களுக்கு நீட்டித்து மத்திய அரசாங்கம் ஒரு உத்தரவை பிறப்பித்து இருந்தது. அதில், தடை செய்யப்பட்ட பகுதிகளில் வாழும் மக்கள் எல்லாம் தங்கள் செல்போன்களில் ஆரோக்கிய சேது செயலியை 100 சதவீதம் பதிவிறக்கம் செய்து இருக்கிறார்களா? என்று அதிகாரிகள் உறுதிபடுத்தவேண்டும். இதுமட்டுமல்லாமல், அரசு மற்றும் தனியார் நிறுவனங்களில் உள்ள ஊழியர்கள் அனைவரும் ஆரோக்கிய சேது செயலியை கட்டாயம் பதிவிறக்கம் செய்திருக்கவேண்டும். தங்கள் ஊழியர்கள் 100 சதவீதம் இதை செய்து இருக்கிறார்களா? என்று உறுதிபடுத்துவது அந்த நிறுவனங்களின் தலைமை பொறுப்பில் உள்ளவர்களின் கடமையாகும் என்று கூறியுள்ளது. ஆரோக்கிய சேது செயலியை, கொரோனா தொற்று பரவாமல் தடுக்கும் ஒரு நடவடிக்கையாக மத்திய அரசாங்கம் கடந்த ஏப்ரல் 2-ந்தேதி அறிமுகப்படுத்தியது. கொரோனா நோயால் பாதிக்கப்பட்டவரை கண்டறிந்து அவர்களிடம் இருந்து மற்றவர்களுக்கு தொற்றிவிடாமல் அவர்கள் பாதுகாப்பான தொலைவில் இருக்கும் வகையிலான இந்த செயலியை மத்திய அரசாங்கம் ஒரு முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக எடுத்துள்ளது.

இந்த செயலி புளூ டூத் மற்றும் இடங்களை அடிப்படையாகக் கொண்ட சமூக வரைபடம் மூலம் தேடிப்பிடிக்கப்படும் தகவல்களால், நாம் நலமாக இருக்கிறோமா?, நோய் தொடர்புள்ளவர்கள் அருகில் இருக்கிறார்களா? என்ற தகவல்களை தருகிறது. இந்த செயலியில் தமிழ், ஆங்கிலம், மலையாளம், கன்னடம், இந்தி உள்பட 11 மொழிகளில் தகவல்களை பெறமுடியும். மேலும் ஆரோக்கிய சேது செயலியில், உங்களுக்கு இருமல், காய்ச்சல், மூச்சுவிடுவதில் சிரமம் இருக்கிறதா?, சர்க்கரை நோய், ரத்த அழுத்தம், நுரையீரல் கோளாறு, இதய நோய் இருக்கிறதா?, கடந்த 14 நாட்களில் வெளிநாடுகள் எங்கேயாவது பயணம் செய்து இருக்கிறீர்களா?, கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களோடு சமீபத்தில் வாழ்ந்து இருக்கிறீர்களா? அல்லது தொடர்புகொண்டு இருக்கிறீர்களா? என்பது போன்ற விவரங்கள் சுயமதிப்பீடாக கேட்கப்படுகிறது. அதன்பிறகு எல்லாமே சரியாக இருந்தால், நீங்கள் பாதுகாப்பாக இருக்கிறீர்கள் என்ற தகவல் வருகிறது. இதுமட்டுமல்லாமல், அந்த செயலியை பதிவிறக்கம் செய்திருப்பவரை சுற்றி 500 மீட்டர், 1 கி.மீட்டர், 2 கி.மீட்டர், 5 கி.மீட்டர், 10 கி.மீட்டர் தூரத்தில் கொரோனா பாதிப்புக்குள்ளானவர்கள் யாராவது இருக்கிறார்களா? என்ற தகவலையும் தருகிறது. தொடர்ந்து கடந்த மாதம் 14-ந்தேதி பிரதமர் நரேந்திரமோடி நாட்டு மக்களிடையே உரையாற்றும்போது, கொரோனா தொற்று பரவாமல் தடுக்க ஆரோக்கிய சேது செயலியை பதிவிறக்கம் செய்யுங்கள். மற்றவர்களை பதிவிறக்கம் செய்ய ஊக்குவியுங்கள் என்று பேசியிருந்தார்.

தற்போது 7½ கோடி பேர்களுக்கு மேல் இந்த ஆரோக்கிய சேது செயலியை பதிவிறக்கம் செய்துவிட்டனர். ஆனால், இதுகுறித்து விமர்சனங்களும் வராமல் இல்லை. ராகுல்காந்தி உள்பட பலர், தனிநபரின் அந்தரங்க விஷயங்களை அரசு திரட்டுகிறது என்று கூறியிருக்கிறார்கள். மேலும், நாடாளுமன்றத்தில் சட்டம் இயற்றாமல், இதை கண்டிப்பாக பதிவிறக்கம் செய்யவேண்டும் என்று சொல்வதற்கு அரசுக்கு அதிகாரம் இல்லை என்றும் கருத்துகள் வருகின்றன. பல நாடுகளில் இதுபோன்ற செயலியை அறிமுகப்படுத்தும்போது, விருப்பப்பட்டவர்கள் பதிவிறக்கம் செய்துகொள்ளலாம் என்றுதான் கூறப்பட்டுள்ளது என்றும் சில கருத்துகள் வருகின்றன. இது ஒருபக்கம் இருந்தாலும், இந்த செயலியை ஆண்ட்ராய்டு செல்போன் வைத்திருப்பவர்கள் மட்டுமே பதிவிறக்கம் செய்யமுடியும். எனவே, பாமர மக்கள் இந்த செயலியால் பயன் பெறமுடியும் என்று எடுத்துக்கொள்ள முடியாது. ஆனால், இந்த செயலியை பதிவிறக்கம் செய்யும் அனைவரும் சுயமதிப்பீட்டில் தங்களைப்பற்றிய விவரங்களை மறைக்காமல் தெரிவித்தால்தான் இதன் முழுபலன் மக்களுக்கு கிடைக்கும். என்றாலும், கொரோனா பாதிக்கப்பட்டவர்களிடம் இருந்து தற்காத்துக்கொள்ள ஓரளவுக்கு துணைநிற்கும் என்பதால், இதை ஆபத்தில் கைகொடுக்கும் செயலி என்று எடுத்துக்கொள்ளலாம்.

Next Story