தேவையான, சரியான விலை உயர்வு


தேவையான, சரியான விலை உயர்வு
x
தினத்தந்தி 6 May 2020 10:30 PM GMT (Updated: 2020-05-07T00:47:18+05:30)

தேவையான, சரியான விலை உயர்வு.


கடந்த 43 நாட்களுக்குப்பிறகு தமிழ்நாட்டில், சென்னை மண்டலத்தில் உள்ள 650 கடைகளை தவிர்த்து, மற்ற இடங்களில் டாஸ்மாக் கடைகள் இன்று முதல் திறக்கப்படுகின்றன. மூடிய கடைகள் மூடியதாகவே இருக்கட்டும். மதுபழக்கத்தை மறந்த மக்களுக்கு மீண்டும் நினைவுபடுத்த வேண்டாம். பூரண மதுவிலக்கை அமல்படுத்த கிடைத்த வாய்ப்பாக இதை கருதிக் கொள்ள வேண்டும் என்று பா.ம.க. மற்றும் எதிர்க்கட்சிகள் அனைத்தும் கோரிக்கைகள் விடுத்தன. இன்று கடைகள் திறப்பதையொட்டி, எதிர்க்கட்சி தலைவர் மு.க.ஸ்டாலின் தன் கூட்டணி கட்சித்தலைவர்களின் சார்பில் ஒரு கடுமையான கண்டன அறிக்கையை வெளியிட்டுள்ளார். மதுக்கடைகளை திறப்பது சமூக தொற்று பரவும் அபாயத்தை ஏற்படுத்துகிறது என்று குறிப்பிட்ட அவர், இதை எதிர்த்து இன்று தமிழக மக்கள் கருப்புச்சின்னம் அணியவேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளார்.

மார்ச் மாதம் 24-ந்தேதி அன்று முதல்முறையாக ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்ட நேரத்தில், தமிழ்நாடு முழுவதும் உள்ள 5,300 டாஸ்மாக் கடைகள் மூடப்பட்டன. மீண்டும் கடந்த 3-ந்தேதிக்கு மேல் மேலும் 14 நாட்கள் ஊரடங்கு நீட்டிக்கப்பட்டது. கடந்த 1-ந்தேதி இதுகுறித்து மத்திய உள்துறை அமைச்சகம் பிறப்பித்த உத்தரவில், மதுக்கடைகளை திறக்கலாம், ஆனால் மதுவாங்க வருபவர்கள் ஒவ்வொருவருக்கும் இடையே 6 அடி இடைவெளி வேண்டும். ஒரேநேரத்தில் கடைகளுக்கு முன்பாக 5 பேருக்கு மேல் நிற்கக்கூடாது என்பது போன்ற விதிமுறைகளை தெரிவித்திருந்தது. ஆனால், தமிழக அரசு ஊரடங்கை நீட்டிக்க பிறப்பித்த உத்தரவில், மற்ற கடைகள் எல்லாம் திறப்பது குறித்த அறிவிப்புகள் வெளியானது. டாஸ்மாக் கடைகள் குறித்து எதுவும் கூறப்படவில்லை. இந்தநிலையில், ஆந்திரா, கர்நாடக மாநிலங்களில் மதுக்கடைகள் திறக்கப்பட்டதால், தமிழ்நாட்டில் இருந்து மக்கள் திருவிழாவிற்கு செல்வதுபோல சமூக இடைவெளியை பின்பற்றாமல், கூட்டம் கூட்டமாக எல்லையோரங்களில் இருக்கும் வெளி மாநில கடைகளுக்கு சென்று மதுபாட்டில்களை வாங்கி வந்தனர்.

அரசுக்கு வருவாய் இழப்பு ஒரு பக்கம் இருந்தாலும், மறுபக்கம் கொரோனா தொற்று பரவும் அபாயமும் இருந்தது. மேலும் இந்த 43 நாட்கள் டாஸ்மாக் கடைகள் திறக்கப்படாத நிலையில், கடந்த நாற்பது, ஐம்பது ஆண்டுகளாக ஒழிக்கப்பட்டிருந்த கள்ளச்சாராயமும் ஆங்காங்கு கிராமப்பகுதிகளிலும், மலைப்பகுதிகளிலும் தலையெடுத்தது. தமிழக அரசை பொறுத்தமட்டில், 60 சதவீத வருவாய் சொந்த வரி வசூலில் இருந்துதான் கிடைக்கிறது. அந்த வகையில் மாதம் ரூ.10 ஆயிரம் கோடிக்கு மேல் வருவாய் கிடைத்து வந்தது. இதில் பெரும்பகுதி மதுபானங்களின் மீது விதிக்கப்படும் வரிகளால்தான் கிடைத்தது. டாஸ்மாக் கடைகள் மூடப்பட்டதால் அரசுக்கு பெரும் வருவாய் இழப்பு ஏற்பட்டது. இந்த நிலையில், டாஸ்மாக் கடைகளை திறக்கும் அறிவிப்பை வெளியிட்ட தமிழக அரசு, மதுபானங்களின் மீது விதிக்கப்படும் ஆயத்தீர்வையை 15 சதவீதம் உயர்த்தியுள்ளது. இதனால் சாதாரண வகை குவார்ட்டர் பாட்டிலுக்கு ரூ.10 அதிகரிக்கப்பட்டுள்ளது. நடுத்தர மற்றும் பிரீமியம் வகை குவார்ட்டர் பாட்டிலுக்கு ரூ.20 கூட்டப்பட்டுள்ளது. இதன்மூலம் அரசுக்கு ஆண்டுக்கு ரூ.4 ஆயிரம் கோடி கூடுதலாக வருமானம் கிடைக்கும். ஏற்கனவே கடந்த பிப்ரவரி மாதம் 7-ந்தேதி இதுபோல குவார்ட்டர் பாட்டிலுக்கு ரூ.10 வரி உயர்த்தப்பட்டது.

டெல்லி அரசு மதுபாட்டிலுக்கு 70 சதவீத உயர்வும், ஆந்திர அரசு 75 சதவீத உயர்வும் அதிகரித்துள்ளன. அந்த வகையில், தமிழக அரசு உயர்த்தியுள்ள இந்த 15 சதவீத வரி உயர்வு தேவையான, சரியான ஒன்றாகும். மத்திய அரசாங்க உத்தரவுப்படி, கோயம்பேடு மார்க்கெட் நிலைமை ஏற்பட்டுவிடாமல், மதுகடைகள் முன்பு 6 அடி இடைவெளி, 5 பேருக்கு மேல் கூட்டம் கூடக்கூடாது என்பதையும், முகக் கவசம் அணிந்திருக்கவேண்டும் என்பதையும் மிகக்கண்டிப்புடன் செயல்படுத்தவேண்டும்.

Next Story