அரசு ஊழியர்களின் ஓய்வு பெறும் வயது உயர்வு


அரசு ஊழியர்களின் ஓய்வு பெறும் வயது உயர்வு
x
தினத்தந்தி 7 May 2020 10:30 PM GMT (Updated: 2020-05-08T00:40:20+05:30)

அரசு ஊழியர்களின் ஓய்வு பெறும் வயது உயர்வு.


இந்த மாத இறுதியில் ஓய்வு பெறப்போகிறோமே, இவ்வளவு நாட்கள் அரசு பணியில் இருந்துவிட்டு இனி என்ன செய்யப்போகிறோம்? ஓய்வு காலத்தை எப்படி கழிக்கப்போகிறோம்? என்று கவலைப்பட்டுக் கொண்டிருந்த அரசு ஊழியர்களுக்கு ஒரு ஜாக்பாட் அடித்துவிட்டது. நேற்று காலையில் தமிழக அரசு ஒரு உத்தரவை பிறப்பித்திருந்தது. தமிழ்நாடு அரசின் பணியாளர்கள் பணியில் இருந்து ஓய்வுபெறும் வயது 58-லிருந்து 59 வயதாக உயர்த்தி முதல்-அமைச்சர் ஆணையிட்டுள்ளார். இந்த ஆணை அனைத்து அரசு மற்றும் அரசு உதவிபெறும் பள்ளிகள், கல்லூரி ஆசிரியர்கள் மற்றும் பொதுத்துறை நிறுவனங்களுக்கு பொருந்தும். இந்த ஆணை உடனடியாக அமலுக்குவரும் என்று பிறப்பிக்கப்பட்டுள்ள உத்தரவு, இந்த நிதி ஆண்டில் ஓய்வு பெறப்போகும் 25,300 அரசு ஊழியர்கள் மட்டுமல்லாமல், தற்போது பணியில் இருக்கும் ஏறத்தாழ 12 லட்சம் அரசு ஊழியர்களை மகிழ்ச்சி பெருக்கில் திக்குமுக்காட வைத்துவிட்டது. கொரோனாவால் வாழ்க்கை இருளில் மூழ்கிவிட்டதே என்று கவலைப்பட்ட நேரத்தில், அரசு ஊழியர்களுக்கு இது ஒரு ஒளியை காட்டிவிட்டது. தமிழக அரசு ஊழியர்களின் ஓய்வுபெறும் வயது 55 ஆக இருந்த வரம்பு, 1979-ல் 58 ஆக உயர்த்தப்பட்டது. அந்த நேரங்களில் மத்திய-மாநில அரசு ஊழியர்கள் இருவருக்குமே 58 தான் ஓய்வு வயது. 1998-ல் மத்திய அரசு ஊழியர்களின் ஓய்வு வயது 60 ஆக உயர்த்தப்பட்டது. தற்போது மத்திய அரசு ஊழியர்கள் தங்கள் ஓய்வு வயதை 62 ஆக உயர்த்தவேண்டும் என்ற கோரிக்கை மத்திய அரசின் பரிசீலனையில் இருக்கிறது. மத்திய அரசாங்கத்தை தொடர்ந்து, பல மாநிலங்களில் அரசு ஊழியர்கள் ஓய்வுபெறும் வயது 60 ஆக உயர்த்தப்பட்டுள்ளது.

இந்தநிலையில், தமிழக அரசு ஊழியர்களும் பல ஆண்டுகளாகவே மத்திய அரசு ஊழியர்களுக்கு இணையாக, எங்கள் ஓய்வுபெறும் வயதும் 60 ஆக உயர்த்தப் படவேண்டும் என்று வேண்டுகோள் விடுத்து வந்தனர். இவ்வளவு நாளும் அதை கண்டுகொள்ளாத அரசு, இப்போது ஒரு ஆண்டு நீட்டிப்பு செய்து இருக்கிறது என்றால், அதற்கு கொரோனாதான் முக்கிய காரணம். கொரோனா பாதிப்பால் தமிழக அரசின் வருவாய் பெரும் வீழ்ச்சியை கண்டுள்ளது. மத்திய அரசாங்கம் தரவேண்டிய பாக்கித்தொகைகளையும் தரவேண்டும், மானியத்தொகையையும் வழங்க வேண்டும் என்று கோரிக்கை விடுக்கிறது. இதுமட்டுமல்லாமல், கடன் பத்திரங்களையும் வெளியிட்டு பொதுக்கடன்களை திரட்டுகிறது. கொரோனா ஒழிப்பு நடவடிக்கையில் அரசுக்கு இப்போது நிறைய நிதித்தேவை. இந்த ஆண்டு ஓய்வுபெற இருக்கும் 25,300 பேருக்கும் பணிக்கொடை கொடுக்க ரூ.2,763.64 கோடி பட்ஜெட்டில் ஒதுக்கப்பட்டிருந்தது. அவர்களுக்கு லீவு சம்பளம் கொடுக்க ரூ.2,220 கோடியே 73 லட்சம் ஒதுக்கப்பட்டு இருந்தது. இப்போது ஏப்ரல் மாதம் முடிந்துபோன காலகட்டத்தை கழித்தாலும், இவ்வாறு ஓய்வுபெறும் வயதை 59 ஆக உயர்த்தியதால் அரசுக்கு ரூ.4,500 கோடி மிச்சமாகும். பென்ஷன் வழங்கவேண்டிய ரூ.500 கோடியையும் சேர்த்து ரூ.5 ஆயிரம் கோடி அரசுக்கு மிச்சமாகும் என்று கணக்கிடப்பட்டுள்ளது. எனவே, அரசு ரூ.5 ஆயிரம் கோடியை மிச்சப்படுத்த நடவடிக்கை எடுத்திருந்தாலும், நிச்சயமாக இந்த முடிவு வரவேற்கத்தக்கது.

இப்போதெல்லாம் மனிதர்கள் வாழும் காலம் அதிகரித்துக்கொண்டே போகிறது. அதனால்தான் மத்திய அரசாங்கத்திலும் சரி, மாநில அரசிலும் சரி, பணியில் இருப்பவர்களைவிட, பென்ஷன் வாங்கிக்கொண்டு இருப்பவர்களின் எண்ணிக்கைத்தான் அதிகமாக இருக்கிறது. அந்த வகையில், அரசு ஊழியர்களின் கோரிக்கையை ஏற்றது என்ற நிலையிலும், கொரோனா ஒழிப்புக்கு ரூ.5 ஆயிரம் கோடி கிடைக்கிறது என்ற வகையிலும், இதை பாராட்டினாலும், வேலையில்லாமல் தவிக்கும் எண்ணற்ற படித்த இளைஞர்களுக்கான வேலைவாய்ப்புகள் ஒரு ஆண்டுக்கு பறிபோகிறதே என்ற கவலையும் இல்லாமல் இல்லை.

Next Story