கை கொடுக்கும் 100 நாள் வேலைத்திட்டம்


கை கொடுக்கும் 100 நாள் வேலைத்திட்டம்
x
தினத்தந்தி 8 May 2020 10:30 PM GMT (Updated: 8 May 2020 9:30 PM GMT)

கை கொடுக்கும் 100 நாள் வேலைத்திட்டம்.


ஒவ்வொரு அரசாங்கத்தின் பெயரைச் சொல்லவும் ஏதாவது ஒரு திட்டம் இருக்கும். அந்தவகையில், “மகாத்மா காந்தி ஊரக வேலைவாய்ப்பு உறுதித்திட்டம்” என்று சொல்லப்படும் 100 நாள் வேலைத்திட்டம் மன்மோகன்சிங் தலைமையிலான ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசின் பெயரைச் சொல்கிறது. கிராமப்புறங்களில் வேலை இல்லாமல் தவிக்கும் ஏழை குடும்பங்களுக்கு ஆண்டுக்கு 100 நாள் வேலை அளித்து, ஒரு நாளைக்கு 100 ரூபாய் சம்பளம் கொடுக்கும்வகையில் இந்தத்திட்டம் தொடங்கப்பட்டது. தமிழ்நாட்டில் உள்ள கிராமங்களில் இந்தத்திட்டம் மிகச்சிறப்பாக செயல்படுத்தப்பட்டது என்று தொடக்கம் முதலே பாராட்டை பெற்று வருகிறது. தமிழக அரசு ரேஷன் கார்டுதாரர்களுக்கு இலவசமாக 20 கிலோ அரிசி மற்றும் பல பொருட்களை வழங்கும் நிலையில், கிராமப்புறங்களில் உள்ள ஏழை மக்களுக்கு இது பெரிய வரப்பிரசாதமாக அமைந்துள்ளது. இந்தநிலையில் முதலில் 21 நாட்கள் ஊரடங்குச் சட்டம் பிறப்பிக்கப்பட்ட நேரத்தில், இந்தத்திட்டம் செயல்படுத்தப்படவில்லை. பிறகு மத்திய அரசாங்கம் கடந்த மாதம் 15-ந்தேதி ஊரடங்கை நீட்டித்த நேரத்தில் 100 நாள் வேலைத்திட்டத்திற்கு அனுமதி வழங்கி உத்தரவு பிறப்பித்தது. சமூக இடைவெளியை கடைப்பிடித்து, முக கவசம் அணிந்து வேலை பார்க்க வேண்டும், நீர்ப்பாசனம் மற்றும் நீர் பாதுகாப்பு பணிகளுக்கு இந்த திட்டத்தில் முன்னுரிமை அளிக்கப்பட வேண்டும் என்று தெரிவித்து இருந்தது. தமிழக அரசும் இதற்கேற்ப உத்தரவுகளை பிறப்பித்து, மேலும் சில பணிகளைச் சேர்த்து 100 நாள் வேலைத்திட்டத்தை தொடங்கிவிட்டது.

தமிழ்நாட்டில் 84 லட்சம் பேர் இந்த திட்டத்திற்காக பதிவு செய்து தகுதி படைத்தவர்களாக இருக்கிறார்கள். மத்திய அரசாங்கம் இந்த திட்டத்திற்கு கொடுக்கும் நிதியைவிட, தமிழக அரசு கூடுதலாக நிதி ஒதுக்கீடு செய்து ஒரு நாளைக்கு 256 ரூபாய் சம்பளமாக கொடுக்கிறது. இது மத்திய-மாநில அரசுகளின் நிதிப்பங்கிடும் திட்டம் ஆகும். தற்போது ஊரடங்கு உத்தரவால் மக்கள் வேலையிழந்து தவிக்கும் நிலையில், இந்த 100 நாள் திட்டத்தை பரவலாக தமிழ்நாடு முழுவதும் உடனடியாக, விரைவாக செயல்படுத்துவதன் மூலம் மக்களின் துயரைப்போக்க முடியும். கடந்த மார்ச் மாதத்துடன் முடிந்த நிதி ஆண்டில் மத்திய அரசாங்கம் இந்த திட்டத்திற்காக திருத்தப்பட்ட பட்ஜெட் மதிப்பீட்டின்படி 71 ஆயிரம் கோடி ரூபாய் ஒதுக்கி இருந்தது. இந்த ஏப்ரல் முதல் 2020-21-ம் ஆண்டுக்கு 100 நாள் வேலை திட்டதிற்காக ஏற்கனவே ஒதுக்கீடு செய்த நிதியைவிட குறைவாக 61 ஆயிரத்து 500 கோடி ரூபாய்தான் ஒதுக்கி உள்ளது.

தற்போதுள்ள நிலையை கருத்தில்கொண்டு, அடுத்த சில மாதங்களுக்காக இந்த திட்டத்திற்கு தனியாக மத்திய அரசாங்கம் சிறப்பு நிதி ஒதுக்கீடு செய்யவேண்டும். தமிழக அரசும் அதை வலியுறுத்தி பெறவேண்டும். மேலும் இந்த திட்டத்தின்கீழ் ஒரு குடும்பத்திற்கு ஒருவருக்குத்தான் வேலை வழங்கப்படுகிறது. இதற்கான வேலை அட்டையை வைத்திருப்பவர்கள்தான் அந்த வேலைக்குச் செல்லமுடியும். தற்போது நகர்புறங்களில் வேலை இல்லாமல் ஏராளமானோர் தங்கள் சொந்த கிராமங்களுக்குச் சென்றுவிட்டனர். எனவே, இந்தநேரத்தில் வேலைக்கான அட்டை வைத்திருப்பவர்களுக்கு மட்டும்தான் வேலை, குடும்பத்தில் ஒருவருக்குத்தான் வேலை என்ற விதிகளை தளர்த்தி யார்-யார்? வேலை பார்க்க விரும்புகிறார்களோ, அவர்களுக்கு வேலை வழங்க மத்திய-மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரிக்கை இருக்கிறது. பொருளாதார நிபுணர்கள் 100 நாள் வேலைத்திட்டத்தை கிராமப்புறங்களோடு நிறுத்திவிடாமல், நகர்புறங்களுக்கும் விரிவாக்கம் செய்யவேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளனர். எனவே, கொரோனா நிவாரணப்பணிகளில் 100 நாள் வேலைத்திட்டத்தையும் முக்கியப் பணியாக கருதி மத்திய-மாநில அரசுகள் இதற்கான முயற்சிகளில் ஈடுபட வேண்டும்.

Next Story