சுப்ரீம் கோர்ட்டு என்ன சொல்லப்போகிறதோ?


சுப்ரீம் கோர்ட்டு என்ன சொல்லப்போகிறதோ?
x
தினத்தந்தி 10 May 2020 10:30 PM GMT (Updated: 10 May 2020 5:35 PM GMT)

சுப்ரீம் கோர்ட்டு என்ன சொல்லப்போகிறதோ.


43 நாட்களாக ஊரடங்கு நேரத்தில் தமிழ்நாட்டில் மதுக்கடைகள் மூடப்பட்டு இருந்தன. மத்திய அரசாங்கம் கடந்த 3-ந் தேதிக்கு மேல் ஊரடங்கை நீட்டித்து சில தளர்வுகளை அறிவித்தபோது, மதுக்கடைகளை சில கட்டுப்பாடுகளுடன் திறக்க அனுமதித்திருந்தது. ஆனால், ஒவ்வொருவருக்கும் இடையே 6 அடி இடைவெளி வேண்டும், ஒரே நேரத்தில் 5 பேருக்கு மேல் மதுவாங்க மதுக்கடைகளில் நிற்கக்கூடாது என்ற நிபந்தனைகளை விதித்திருந்தது. இதன் அடிப்படையில், தமிழக அரசு பிறப்பித்த உத்தரவுப்படி, 43 நாட்களுக்குப்பிறகு கடந்த 7-ந் தேதி மதுக்கடைகள் திறக்கப்பட்டன. சென்னை மண்டலத்தில் உள்ள 650 மதுக்கடைகள் மற்றும் ஆங்காங்கு கட்டுப்படுத்தப்பட்ட பகுதிகளில் உள்ள மதுக்கடைகள் தவிர, மொத்தம் உள்ள 5,300 மதுக்கடைகளில், ஏறத்தாழ 3,850 மதுக்கடைகள் திறக்கப்பட்டன. டாஸ்மாக் நிறுவனம் பல வரைமுறைகளை வெளியிட்டிருந்தது. விரிவான ஏற்பாடுகளையும் செய்திருந்தது. ஒவ்வொரு கடை முன்பும் 5 அடி இடைவெளியில், ஒரு மீட்டர் சுற்றளவில் வட்டங்கள் வரையப்பட்டிருந்தன. கம்புகளால் தடுப்புகளும் அமைக்கப்பட்டிருந்தன. இதற்கும் மேலாக 6-ந் தேதி சென்னை ஐகோர்ட்டு நீதிபதிகள் வினீத் கோத்தாரி, புஷ்பா சத்தியநாராயணா ஆகியோர் பல நிபந்தனைகளை விதித்திருந்தனர். மதுவாங்க வருபவர்களின் ஆதார் எண்ணை பெறவேண்டும், ஒவ்வொருவரும் 750 மி.லிட்டர் அளவு கொண்ட மதுபாட்டிலைத்தான் வாங்கமுடியும் என்பது உள்பட பல நிபந்தனைகளை கூறியிருந்தது. ஆனால், டாஸ்மாக் நிறுவனம் செய்திருந்த ஏற்பாடுகள், ஐகோர்ட்டு விதித்த நிபந்தனைகள் எல்லாம் காற்றிலே கலந்த கீதமாகிவிட்டது. முதல் நாளன்று எந்தவித கட்டுப்பாடும் இல்லாமல் மக்கள் முண்டியடித்துக்கொண்டு சமூக இடைவெளி முற்றிலும் புறக்கணிக்கப்பட்ட நிலையில் முறையில்லாமல் நின்றனர். சில இடங்களில் போலீசார் தடியடிகூட நடத்த வேண்டிய நிலை ஏற்பட்டது. கோயம்பேடு நிலைமை மீண்டும் ஏற்பட்டுவிடுமோ? என்ற அச்சம் எல்லோருக்கும் ஏற்பட்டது.

இந்த நிலையில், ஐகோர்ட்டு விதித்த நிபந்தனைகள் மீறப்பட்டது என்று மக்கள் நீதி மய்யம் தொடர்ந்த வழக்கில், நீதிபதிகள் கடுமையான உத்தரவை பிறப்பித்தனர். அதில், ஆன்லைனில் மதுவிற்பனை செய்ய வேண்டும் என்று கோர்ட்டு கூறிய பரிந்துரையை அரசு பரிசோதனைக்குக்கூட செய்யவில்லை. சமூக இடைவெளி, முக கவசம் அணிய வேண்டும் என்பது பின்பற்றப்படவில்லை. எவ்வளவு மது ஒவ்வொருவருக்கும் விற்பனை செய்யலாம் என்ற உத்தரவும் மீறப்பட்டது. எந்தெந்த வயதினருக்கு, எந்த நேரத்தில் மதுவிற்கலாம் என்ற அரசின் வழிமுறைகளும் பின்பற்றப்படவில்லை. நிபந்தனைகளை அமல்படுத்தவில்லை என்று கூறி ஊரடங்கு முடியும்வரை மதுக்கடைகளை மூட நீதிபதிகள் உத்தரவிட்டனர். ஆன்லைன் மூலம் முன்பதிவு செய்தவர்களுக்கு நேரடியாக வீடுகளுக்கே சென்று ‘ஹோம் டெலிவரி’ செய்யும் முறையை அரசு பின்பற்றலாம் என்றும் அந்த உத்தரவில் கூறப்பட்டிருந்தது. ஆன்லைன் மூலம் மதுவிற்பனை செய்யும் முறையை பரிசீலனை செய்ய இதேநாளில் சுப்ரீம் கோர்ட்டும், மாநில அரசுகளுக்கு தெரிவித்து தீர்ப்பு வழங்கி இருந்தது.

ஆக, கடந்த 7, 8-ந் தேதிகளில் திறந்து இருந்த மதுக்கடைகள் இப்போது மூடப்பட்டுள்ளன. மதுப்பிரியர்களுக்கு பெரிய ஏமாற்றமாகிவிட்டது. அரசு தரப்பில் இவ்வாறு ஆன்லைன் மூலம் மதுவிற்பனை செய்ய வேண்டுமென்றால், அதற்கு தனியாக சாப்ட்வேர் வேண்டும். அதை உருவாக்க, அதுதொடர்பாக ஊழியர்களுக்கு பயிற்சி அளிக்க எப்படியும் 3 மாதம் ஆகிவிடும். இது கொள்கை முடிவு. அமைச்சரவைதான் முடிவு செய்யவேண்டும் என்று கூறப்படுகிறது. எனவே, ஆன்லைன் மூலம் மதுவிற்பனை என்பது ஊரடங்கு முடியும் முன்பு நிச்சயமாக சாத்தியமில்லை. இப்போது இதுகுறித்து சுப்ரீம் கோர்ட்டில் டாஸ்மாக் நிறுவனம் அப்பீல் செய்துள்ளது. இதை விசாரணைக்கு எடுத்துக்கொண்டு சுப்ரீம் கோர்ட்டு வழங்கப்போகும் தீர்ப்பில்தான் அடுத்து தமிழ்நாட்டில் மதுக்கடைகளின் நிலைமை ஊரடங்கு முடியும்வரை என்னவாக இருக்கும் என்பது தெரியும்.

Next Story