சிறு, குறு, நடுத்தர தொழில்களுக்கு பலன் அளிக்கும்


சிறு, குறு, நடுத்தர தொழில்களுக்கு பலன் அளிக்கும்
x
தினத்தந்தி 14 May 2020 10:30 PM GMT (Updated: 14 May 2020 7:46 PM GMT)

சிறு, குறு, நடுத்தர தொழில்களுக்கு பலன் அளிக்கும்.


கடந்த 12-ந்தேதி பிரதமர் நரேந்திரமோடி, நாட்டு மக்களிடையே டெலிவிஷனில் உரையாற்றினார். அப்போது அவர், கொரோனா வைரசினால் பாதிக்கப்பட்டுள்ள இந்தியாவை மீட்கும் வகையில் சில அறிவிப்புகளை வெளியிட்டார். அதில் ஒரு முக்கியமான அறிவிப்பு, நாடு சுயசார்பை எட்டுவதற்கு ரூ.20 லட்சம் கோடி செலவில் பொருளாதார திட்டங்கள் செயல்படுத்தப்படும். இந்தத்திட்டங்கள் குறித்து மத்திய நிதி மந்திரி புதன்கிழமை முதல் விரிவான அறிவிப்புகளை வெளியிடுவார் என்றார். இந்தியா சுயசார்புடையதாக மாறுவதற்கு நம்மிடம் அனைத்து கட்டமைப்புகளும் இருப்பதாகச் சொன்னார். சுயசார்பு என்பது இந்தியா எதற்கும், எந்த நாட்டையும் சார்ந்து இருக்க தேவையில்லாமல், எல்லாவற்றையும் இந்தியாவிலேயே உற்பத்திசெய்யும் நிலையை எட்டுவதுதான். பொதுவாக, கிராமப்புறங்களில் மிகத்திறமையாக பணியாற்றுபவரை எள் என்றால் எண்ணெய்யாக நிற்பார் என்பார்கள். அதுபோல பிரதமர் சொன்னதும், எள் என்றால் எண்ணெய்யாக நிற்கும் ஆற்றல் படைத்த நிதி மந்திரி நிர்மலா சீதாராமன், அடுத்த 24 மணி நேரத்துக்குள் விரிவான அறிவிப்புகளை வெளியிட்டார். முதல் தவணையிலேயே இவ்வளவு அறிவிப்புகளா? என்று ஆச்சரியப்படும் வகையில் சிறு, குறு, நடுத்தர தொழில்கள் பலன்பெறவும், வரிகட்டுவோருக்கு வசதிகளைத்தரவும் 16 அறிவிப்புகளை தெரிவித்தார்.

ஒவ்வொரு அறிவிப்பும் சிறு, குறு, நடுத்தர தொழில் நிறுவனங்களை நிம்மதி பெருமூச்சுவிட வைக்கிறது. மிக முக்கியமாக சிறு, குறு, நடுத்தர தொழில் நிறுவனங்களுக்கு கடன்வாங்க சொத்து உத்தரவாதம் எதையும் காட்டவேண்டிய அவசியமில்லை என்று அறிவிப்பு வெளியிட்டார். இதற்காக ரூ.3 லட்சம் கோடி ஒதுக்கப்பட்டுள்ளது. இந்தக்கடனை 4 ஆண்டுகளில் திருப்பி செலுத்தலாம். முதல் தவணை கட்டுவதற்கான காலம் ஒரு ஆண்டுக்குப்பிறகே தொடங்குகிறது. இதன்மூலம் 45 லட்சம் தொழில் நிறுவனங்கள் பயன்பெறுகின்றன என்று அறிவித்தார். ஊரடங்கு அறிவிப்பால் மூடப்பட்டுள்ள சிறு, குறு, நடுத்தர தொழில் நிறுவனங்கள் இனி மீண்டும் திறக்கப்படவேண்டுமென்றால், நிச்சயமாக மூலதனம் தேவைப்படும். இப்போது அரசாங்கமே கியாரண்டி கொடுப்பதால், வங்கிகள் கடன்கொடுக்க தயங்காது. ஆனால், 45 லட்சம் தொழில் நிறுவனங்களோடு நிறுத்திவிடாமல், எவ்வளவு தொழில் நிறுவனங்களுக்கு நிதிஉதவி தேவைப்படுகிறதோ? அந்த நிறுவனங்களுக்கு எல்லாம் இதுபோல கடன் உதவி வழங்கவேண்டும். மற்றொரு முக்கியமான அறிவிப்பு என்னவென்றால், சிறு, குறு, நடுத்தர நிறுவனங்களை வகைப்படுத்த முதலீடு மற்றும் விற்றுமுதல் ஆகியவற்றை அடிப்படையாகக்கொண்டு சில தொகைகள் அதிகபட்சவரம்பாக நிர்ணயிக்கப்பட்டிருந்தது. தற்போது இந்த தொகையின் உச்சவரம்பு அதிகரித்திருப்பதால், நிறையத்தொழில் நிறுவனங்கள், சிறு, குறு, நடுத்தர தொழில் நிறுவனங்கள் என்ற பட்டியலுக்குள் வந்து அதிக உதவிகளையும், மானியங்களையும் பெறமுடியும். ரூ.200 கோடிக்கும் குறைவான, அரசு கொள்முதல் டெண்டரில் கலந்துகொள்ள இனி சர்வதேச நிறுவனங்களுக்கு அனுமதி மறுக்கப்படும் என்ற அறிவிப்பு, உள்நாட்டு நிறுவனங்கள் அரசு கொள்முதலுக்கு தங்களுடைய உற்பத்தி பொருட்களை விற்க வழிவகுக்கும். வருமானவரி கட்டுவதற்கான காலஅவகாசம் நீட்டித்தது, பிராவிடண்ட் பண்ட் கட்டுவதற்காக தொழிலாளர்கள் பங்கு மற்றும் தொழில் நிறுவனங்களின் பங்கை 12 சதவீதத்திலிருந்து அடுத்த 3 மாதங்களுக்கு 10 சதவீதமாக குறைத்திருப்பது இருசாராருக்குமே பலன் அளிக்கும்.

முதல் தவணையோடு முடிந்துவிடாமல், மீண்டும் நிதி மந்திரி நேற்று மாலை புலம்பெயர்ந்த தொழிலாளர்களுக்கான உதவித்திட்டங்கள், சிறு மற்றும் சாலையோர வியாபாரிகள், சிறு விவசாயிகள் ஆகியோருக்கு கடன் உதவி திட்டங்கள், நடுத்தர பிரிவினருக்கு வீட்டுவசதி திட்டம், வேலைவாய்ப்புகள் உருவாக்கும் திட்டங்களை அறிவித்தார். இதையெல்லாம் பாராட்டினாலும், பாதிப்பு சிறு, குறு, நடுத்தர நிறுவனங்களோடு முடிந்துவிடவில்லை. எத்தனையோ தனியார் நிறுவனங்கள் வருவாயே இல்லாமல் தொழிலாளர்களுக்கு சம்பளம் கொடுக்க முடியாமல் தவிக்கின்றன. அதுபோன்ற தனியார் நிறுவனங்களுக்கும், முறைசாரா தொழில்களில் ஈடுபடும் தொழிலாளர்களுக்கும் கருணைக்கரம் நீட்டும் அறிவிப்புகள் வரவேண்டும்.

Next Story