இந்தக் கட்டுப்பாடு தொடரவேண்டும்


இந்தக் கட்டுப்பாடு தொடரவேண்டும்
x
தினத்தந்தி 17 May 2020 10:30 PM GMT (Updated: 17 May 2020 5:09 PM GMT)

இந்தக் கட்டுப்பாடு தொடரவேண்டும்.


தமிழ்நாடு முழுவதும் 5,299 டாஸ்மாக் கடைகள் இருக்கின்றன. இதில், கொரோனாவால் பாதிக்கப்பட்ட கட்டுப்பாட்டு பகுதிகள் மற்றும் சென்னை, திருவள்ளூர் மாவட்டங்கள் நீங்கலாக, மற்ற இடங்களில் 3,600 மதுக்கடைகள் திறக்கப்பட்டுள்ளன. ஊரடங்கு முதலில் அமல்படுத்தப்பட்ட கடந்த மார்ச் 25-ந்தேதியில் இருந்து மே 3-ந்தேதிவரை இந்தியாவில் உள்ள அனைத்து மதுக்கடைகளும் மூட உத்தரவிடப்பட்டிருந்தது. மே 3-ந்தேதிக்குமேல் ஊரடங்கு நீட்டிக்கும் உத்தரவில் சில தளர்வுகளை அறிவித்த மத்திய அரசாங்கம், மதுக்கடைகளை திறக்கலாம், ஆனால் 6 அடி சமூக இடைவெளி போன்ற கட்டுப்பாடுகளை கண்டிப்பாக பின்பற்றப்படவேண்டும் என்று கூறப்பட்டிருந்தது. 7-ந்தேதி மதுக்கடைகள் திறக்கப்பட்டன. அதற்கு முன்பு ஐகோர்ட்டு விதித்த நிபந்தனைகள், டாஸ்மாக் விதித்த கட்டுப்பாடுகள் அனைத்தும் மீறப்பட்டன. 43 நாட்களுக்குப் பிறகு மதுக்கடைகள் திறக்கப்பட்ட உற்சாகத்தில் ஒவ்வொரு கடை முன்பும் கூட்டம் அலைமோதியது. முண்டியடித்துக்கொண்டு சமூக இடைவெளிக்கு அர்த்தமே இல்லாமல் பெருங்கூட்டமாக மதுப்பிரியர்கள் மதுக்கடைகளை முற்றுகையிட்டனர். உடனடியாக ஐகோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டது. ஊரடங்கு முடியும்வரை மதுக்கடைகளை மூடவும், ஆன்லைன் மூலம் பதிவு செய்து, மதுவை வீட்டுக்கு சென்று டெலிவரி செய்யும் முறையை பின்பற்றவும் ஐகோர்ட்டு உத்தரவு பிறப்பித்தது. இதனால் 7, 8-ந்தேதிகளில் மட்டும் மதுக்கடைகள் திறக்கப்பட்டு, 9-ந்தேதி முதல் மூடப்பட்டிருந்தது.

ஐகோர்ட்டு தீர்ப்பை எதிர்த்து தமிழக அரசு சார்பில் சுப்ரீம் கோர்ட்டில் மேல்முறையீடு செய்யப்பட்டது. “சென்னை ஐகோர்ட்டின் தீர்ப்பு தனிமனித உரிமைக்கு எதிரானது. மது வாங்குவதும், அருந்துவதும் அவரவர் தனிப்பட்ட உரிமை. ஆதார் எண்ணை குறிப்பிடுவது, பெயர் முகவரியை கூறுவது என்பதெல்லாம் தனிப்பட்ட மனிதர்களின் உரிமையில் அத்துமீறல் ஆகும். எப்படி விற்கவேண்டும், என்ன விற்கவேண்டும் என்பதெல்லாம் மாநில அரசின் முடிவு. அதற்குள் ஐகோர்ட்டு எப்படி நுழைய முடியும்?. வீடுகளுக்கு சென்று மதுபாட்டில்களை டெலிவரி செய்வது கலப்படத்துக்கு வழிவகுத்துவிடும். சமூகத்திலும், குடும்பத்திலும் பிரச்சினைகள் ஏற்படுத்திவிடும். இதுபோன்ற ஆன்லைன் விற்பனை அல்லது வீட்டுக்குச்சென்று டெலிவரி செய்யவேண்டும் என்பதையெல்லாம் அரசின் முடிவுக்கே விட்டுவிடவேண்டும். காலவரையின்றி மதுக்கடைகளை மூடுவது அரசாங்கத்துக்கு வருவாய் ரீதியாகவும், வணிக ரீதியாகவும் பெரிய பாதிப்பை ஏற்படுத்தும்” என்று டாஸ்மாக் நிறுவனத்தின் சார்பில் வாதிட்ட கூடுதல் அட்வகேட் ஜெனரல் பாலாஜி சீனிவாசன், மூத்த வழக்கறிஞர் முகுல் ரோத்தகி ஆகியோர் தங்கள் வாதங்களை ஆணித்தரமாக முன்வைத்தனர்.

இந்த வாதங்களை கேட்ட சுப்ரீம் கோர்ட்டு பெஞ்சு, டாஸ்மாக் கடைகளை மூடுவதற்கு சென்னை ஐகோர்ட்டு பிறப்பித்த உத்தரவுக்கு இடைக்கால தடைவிதித்தது. சுப்ரீம் கோர்ட்டு உத்தரவுக்குப்பிறகு, தமிழக அரசு உடனடியாக 16-ந்தேதி மதுக்கடைகளை திறந்தது. ஒருநாளைக்கு ஒரு கடையில் 500 டோக்கன்கள் மட்டும் வழங்கப்படுகிறது. மதுவாங்க வரும் அனைவரும் முக கவசம் அணிய வேண்டும் என்று உத்திரவிடப்பட்டுள்ளது. இதைத்தொடர்ந்து டாஸ்மாக் கடைகளில் இப்போது ஒரே நேரத்தில் 5 பேர் மட்டுமே நிற்கும் வகையில் ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. மீதமுள்ளவர்கள் வெகுதூரத்தில் நிற்க வைக்கப்பட்டுள்ளனர். 7 நாட்களுக்கும் 7 வண்ண நிறங்களில் டோக்கன்கள் வழங்கப்பட்டு வருகின்றன. 500 பேருக்குமேல் வந்தால் அதோடு முடித்துவிட்டு, அடுத்தநாள் வாங்குவதற்கு டோக்கன்கள் கொடுக்கப்படுகிறது. எவ்வளவு மதுவாங்கவேண்டுமென்றாலும் வாங்கிக்கொள்ளலாம். இந்த நிலையில், கடந்த 2 நாட்களாக கடைப்பிடிக்கப்பட்ட கட்டுப்பாடு தொடர்ந்து நீடிக்கவும், கோயம்பேட்டில் ஏற்பட்ட நெரிசல்போல கூட்டம் இல்லாமல் தடுக்கவும் டாஸ்மாக் நிர்வாகம் மற்றும் போலீசார் எடுக்கும் அனைத்து நடவடிக்கைகளுக்கும் மக்கள் முழு ஒத்துழைப்பு கொடுக்கவேண்டும். தங்களுக்குள்ளேயே சுயகட்டுப்பாடு விதித்துக்கொள்ள வேண்டும். டாஸ்மாக் கடைகள் முன்பு முக கவசம் அணிந்து சமூக இடைவெளியை எப்போதும் தொடர்ந்து கடைப்பிடிக்க வேண்டும்.

Next Story