விவசாயிகளுக்கு இலவச மின்சாரத்தை ரத்து செய்யக்கூடாது


விவசாயிகளுக்கு இலவச மின்சாரத்தை ரத்து செய்யக்கூடாது
x
தினத்தந்தி 18 May 2020 10:30 PM GMT (Updated: 2020-05-19T02:14:28+05:30)

விவசாயிகளுக்கு இலவச மின்சாரத்தை ரத்து செய்யக்கூடாது.


கொரோனா தொற்று பாதிப்பால் இந்திய பொருளாதாரம் படுவீழ்ச்சியை அடைந்துள்ளது. இழந்துவிட்ட பொருளாதாரத்தை மீட்கும் வகையில், சுயசார்பு இந்தியா திட்டத்தின்கீழ் பல்வேறு துறைகளை கைதூக்கிவிடும் வகையில் ரூ.20 லட்சம் கோடிசெலவில் திட்டங்கள் அறிவிக்கப்படும். மத்திய நிதி மந்திரி இந்த விவரங்களை அறிவிப்பார் என்று கடந்தவாரம் செவ்வாய்க்கிழமை நாட்டு மக்களிடையே உரையாற்றும்போது பிரதமர் நரேந்திரமோடி அறிவித்தார். நிதிமந்திரி நிர்மலா சீதாராமன் அடுத்த நாளிலிருந்து கடந்த ஞாயிற்றுக்கிழமைவரை 5 நாட்கள் தொடர்ந்து மடைதிறந்த வெள்ளம்போல அறிவிப்புகளை வெளியிட்டார். இந்த 5 நாட்களில் அவர் 54 பொருளாதார நடவடிக்கைகளை அறிவித்தார். நேற்று முன்தினம் இறுதிநாளில் மிகமுக்கியமான அறிவிப்புகள் வெளியிடப்பட்டன. தொழில் வளர்ச்சிக்காக தனியார் முதலீடுகளை ஊக்குவிக்கும் திட்டங்கள் அறிவிக்கப்பட்டன. 4 குறிப்பிட்ட துறைகளைத்தவிர, மற்ற துறைகளில் எல்லாம் இயங்கும் பொதுத்துறை நிறுவனங்கள் தனியார் மயமாக்கப்படும் என்ற மிகத்துணிச்சலான அறிவிப்பை வெளியிட்டார். அந்தத் துறைகளிலும் தலா ஒரு அரசு நிறுவனம்தான் இயங்குமேதவிர, தனியார் தொழில் நிறுவனங்கள் தொடங்குவதற்கு தடைஇல்லை. இதனால், தனியார் தொழில் முதலீடுகள் உயரும், தொழில்வளர்ச்சி மேம்படும்.

மாநிலங்கள் நிதி நெருக்கடியில் சிக்கித்தவிக்கின்றன. கிராமப்புறங்களில் பெரிதும் வேலைவாய்ப்பு அளித்து மக்களுக்கு வாழ்வாதாரம் தரும் 100 நாள் வேலைத்திட்டம் இடையில் ஊரடங்கின்போது நிறுத்தி வைக்கப்பட்டிருந்தது. இப்போது மீண்டும் தொடங்கப்பட்டுள்ளது. 100 சதவீதம் ஆட்களை பயன்படுத்திக்கொள்ளலாம் என்று உத்தரவிடப்பட்டுள்ளது. ஏற்கனவே ரூ.61 ஆயிரம் கோடி மத்திய பட்ஜெட்டில் இதற்காக நிதி ஒதுக்கப்பட்டிருந்தது. இப்போது மேலும் ரூ.40 ஆயிரம் கோடி ஒதுக்கப்பட்டுள்ளதால், கிராமங்களுக்கு திரும்பிய புலம்பெயர்ந்த தொழிலாளர் களுக்கும் மற்றும் அதிகமான கிராம மக்களுக்கும் வேலைவாய்ப்பு கிடைக்கும். ஏற்கனவே தமிழக முதல்-அமைச்சர், தமிழக அரசு கடன்கள் வாங்குவதற்கான வரம்பை 3 சதவீதத்தில் இருந்து 4.5 சதவீதமாக உயர்த்தவேண்டும் என்று கோரிக்கை விடுத்திருந்தார். இப்போது அனைத்து மாநிலங்களும் 5 சதவீதம்வரை கடன் வாங்கிக்கொள்ளலாம் என்று தளர்த்தப்பட்டுள்ளது. ஆனால், அதற்கு ஒரு நிபந்தனையும் விதிக்கப்பட்டுள்ளது.

விவசாயிகளுக்கு வழங்கிவரும் இலவச மின்சாரத்தை நிறுத்தி, அதற்கு பதிலாக நேரடியாக வங்கிகளில் பணம் செலுத்தும் முறையை கடைபிடிக்கவேண்டும் என்று உத்தரவிடப்பட்டுள்ளது. 2021-ம் ஆண்டு மார்ச் மாதத்துக்குள் இதை நடைமுறைபடுத்தவேண்டும். இந்த ஆண்டு டிசம்பர் 31-ந்தேதிக்குள் ஒரு மாவட்டத்திலாவது தொடங்க வேண்டும் என்று உத்தரவிடப்பட்டுள்ளது. இதை செய்யாவிட்டால் 0.15 சதவீதம் கடன்திரட்ட அனுமதி வழங்கப்படாது என்றும் கூறப்பட்டுள்ளது. முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி உடனடியாக நேற்று பிரதமருக்கு எழுதிய கடிதத்தில், இதற்கு கடும் எதிர்ப்பை தெரிவித்துள்ளார். மின்சார சட்டத்தில் கூறப்பட்டுள்ள இந்த மாற்றங்களை உடனடியாக ரத்து செய்யவேண்டும் என்று கூறியுள்ளார். இது மிகவும் வரவேற்கத்தக்கது. தமிழ்நாட்டை பொறுத்தமட்டில், விவசாயிகளுக்கு இலவச மின்சாரம் என்பது விவசாயிகள் பல ஆண்டுகளாக போராடி மறைந்த நாராயணசாமி நாயுடு தலைமையில் பல துப்பாக்கிச்சூடுகளை சந்தித்து பெற்ற சலுகை ஆகும். 1970-ம் ஆண்டு முதல் விவசாயிகள் நடத்திய போராட்டங்களின் விளைவாக 1984-ம் ஆண்டு செப்டம்பர் மாதம் முதல்-அமைச்சர் எம்.ஜி.ஆர். சிறு, குறு விவசாயிகளுக்கு இலவச மின்சாரம் வழங்கும் திட்டத்தை அறிவித்தார். தொடர்ந்தும் விவசாயிகள் போராடிவந்தனர். 6 ஆண்டுகள் கழித்து தி.மு.க. ஆட்சியின்போது முதல்-அமைச்சர் கருணாநிதி அனைத்து விவசாயிகளுக்கும் இலவச மின்சாரம் வழங்கும் திட்டத்தை அறிவித்தார். இப்போது 21 லட்சத்து 40 ஆயிரம் விவசாய பம்புசெட்டுகளுக்கு இலவச மின்சாரம் வழங்கப்படுகிறது. விவசாயிகளுக்கு இலவச மின்சாரம் வழங்குவதை ரத்துசெய்யும் இந்தத்திட்டத்தை மத்திய அரசாங்கம் உடனடியாக கைவிடவேண்டும். தமிழக அரசும் கடன்வாங்கும் வரம்பை குறைத்தால்கூட பரவாயில்லை, விவசாயிகளுக்கு இலவச மின்சாரம் வழங்கியே தீருவோம் என்று உறுதியாக இருந்தால் விவசாயிகளும் வாழ்த்துவார்கள், பாராட்டுவார்கள், வரவேற்பார்கள்.

Next Story